பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்புப் பணியாக இருந்தாலும், முக்கியமான அரசுத் தலைவர்களின் வருகையாக இருந்தாலும் வெயிலிலும் மழையிலும் இரவிலும் பாதுகாப்புப் பணியில் கால்கடுக்க நிற்கும் காவலர்களின் நிலை சங்கடங்கள் நிறைந்தவை. அதுவும் பெண் காவலர்களின் நிலையோ, வெளிப்படையாக சொல்ல முடியாத சிக்கல்களைக் கொண்டது. இந்தச் சூழ்நிலையில் பெண் காவலர்களின் உடல் இயல்புக்கேற்ற பிரத்யேக ஷூக்களைத் தயாரித்துத் தர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
1970-களிலேயே பெண் காவலர்களைப் பணியமர்த்தி இந்தியாவில் முன்னுதாரணமாகத் திகழ்ந்த மாநிலம் தமிழகம். கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் காவலர்களில் 33 சதவீதத்தினர் பெண்கள். நாட்டிலேயே மகளிர் காவல் நிலையங்கள் அதிகமுள்ள மாநிலம் என்ற பெருமை கொண்ட தமிழகத்தில், இதுவரை ஆண் காவலர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஷூக்களைத்தான் பெண் காவலர்களும் அணிந்துவந்தனர்.
இந்தியா முழுவதும் பெண் காவலர்களும் பொதுவான ஷூக்களையே அணிந்துவரும் நிலையில் சென்ட்ரல் ஃபுட்வேர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட், பெண் காவலர்களுக்கான பிரத்யேக ஸ்லிப் ஆன் ஷூக்களைப் பரிந்துரைத்துள்ளது. பாலியூரித்தேன் பாதப்பகுதியும் சிலிக்கான் ஜெல்லால் ஆன உள்பாதப் பகுதியும் கொண்ட ஷூ இது.
பெண் காவலர்களுக்கான ஷூவின் எடையும் அவர்களது உடல் திறனை முன்னிட்டுக் குறைக்கப்பட்டுள்ளது. இனி முக்கால் கிலோ கொண்ட ஷூவைச் சுமக்க வேண்டிய அவசியமில்லை. பெண் காவலர்கள் அணியும் ஷூக்களின் எடை 400 கிராம் எடையுடன் இருக்கும்.
வலி தராத ஷூக்கள்
தமிழகக் காவல் துறையினர் அணியும் ஷூக்களை இதுவரை தயாரித்துவந்த வேலூர் சிறைக் கைதிகள்தான் பெண் காவலர்களுக்கான புதிய ஷூக்களையும் தயார் செய்ய உள்ளனர். இது குறித்துச் சிறைத்துறை டிஜிபி சைலேந்திர பாபுவிடம் பேசியபோது, “பெண் காவலர்களுக்கான ஷூக்களைத் தயாரிப்பதற்கென்று புதிய இயந்திரப் பிரிவைத் தொடங்குவதற்காகத் தமிழக அரசு ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது. மாதிரிகளைச் செய்து வழங்கியும் வருகிறோம். கால் வலி, புண்களால் ஏற்படும் சங்கடங்கள் இனி இருக்காது” என்று கூறினார்.
பொதுவாக ஆண்களின் பாதங்கள் அகலமாகவும் பெரியதாகவும் இருக்கும். பெண்களின் பாதமோ முன்பகுதி அகலமாகவும், குதிகால் பகுதி குறுகியும் இருக்கும். இதனால் ஆண் காவலர்கள் அணியும் ஷூவை நாள் முழுக்கப் பெண் காவலர்கள் அணியும்போது அசவுகரியம் மட்டுமின்றி, உள்காயங்களும் ஏற்படுகின்றன. நீண்ட நாள் பயன்பாட்டால் குதிகால் பகுதியில் தொடங்கி, கெண்டைக்கால் சதைக்கும் முதுகுக்கும் வலி பரவும்.
பெண்களின் நடை இயல்பை அவதானித்துப் பெண் காவலர்களுக்கான புதிய ஷூக்கள் தயாரிக்கப்பட்டதாக மத்திய காலணிப் பயிற்சி நிலையத்தின் தொழில்நுட்ப ஆசிரியர்களில் ஒருவரான டி. ஞானபழனி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தயாரிப்பு இயந்திரம், தையல், தோற்றம் அனைத்திலும் மாறுதல் இருக்கும்.
இந்தியா முழுவதும் பெண் காவலர்கள் சந்திக்கும் பணி ரீதியான சிக்கல்கள் தொடர்பாக விவாதங்கள் அதிகரித்துவரும் நிலையில் பெண் காவலர்களுக்கான பிரத்யேக ஷூக்களை வழங்கும் நடவடிக்கை, நமக்காக நிற்கும் அந்தப் பாதங்களுக்கு நிம்மதியான செய்திதான்.
காவலர் ஷூ: சில தகவல்கள்
டெல்லி, அருணாசலப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் எல்லைப் பாதுகாப்புப் படையிலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரேவிதமான ஷூக்களே வழங்கப்படுகின்றன.
கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய இரண்டு மாநிலங்களும் ஷூக்கள் வாங்கத் தனியாகப் பணம் கொடுக்கின்றன.
கர்நாடக அரசு, பகிரங்க டெண்டர் மூலம் இரு பாலினருக்கும் ஷூக்களை வாங்குகின்றன.
தமிழகத்தில் ஆண்டுக்கு இரண்டு ஜோடி ஷூக்கள் அரசு சார்பாகக் காவலர்களுக்குத் தரப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago