ஒ
வ்வோர் ஆண்டும் ‘வாவுபலி’ பொருட்காட்சியைக் குழித்துறை நகராட்சியே சீரும் சிறப்பாக நடத்திவருகிறது. வாவுபலி என்பது இறந்துபோன தங்களது மூதாதையர்களை நினைவுகூர்ந்து வணங்கி திதி அல்லது தர்ப்பணம் செய்து மரியாதை செலுத்தும் முக்கிய நிகழ்வு. இது ஆடி அமாவாசையை முன்னிட்டு 20 நாட்கள்வரை நடைபெறும். அனைத்து மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வுக்காகக் கூடுகிறார்கள்.
பசுமைத் திருவிழா
அங்கு விதவிதமான பூச்செடிகள், மா, பலா, தேக்கு உள்ளிட்ட பலவகை மரக்கன்றுகள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டிருக்கும். அவற்றை விலை கொடுத்து வாங்கிச் செல்லும் மக்கள் தங்கள் நிலங்களில் நடுகிறார்கள். மூதாதையர்களின் ஆசியோடு வாங்கிச் செல்லும் அந்தக் கன்றுகள் வளர்ந்து நல்ல விளைச்சலைத் தரும் என்ற நம்பிக்கை அந்தப் பகுதி மக்களிடம் உண்டு.
எங்கே திரும்பினாலும் காய் கனிகளால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பு வளைவுகளும் வளாகங்களும் விதவிதமான செடிகொடிகளும் நாற்றுப்பண்ணைகளுமாக வித்தியாசமான பசுமைத் திருவிழாவாக இந்தப் பொருட்காட்சி அமைந்திருக்கும். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களும் அங்கே இடம்பிடித்திருக்கும். இந்தப் பொருட்காட்சிக்கான அரசு அனுமதியை நகராட்சிதான் ஒவ்வோர் ஆண்டும் கேட்டுப்பெற வேண்டும் என்றிருந்த நிலையை மாற்றி, நிரந்தரமான உத்தரவு குழித்துறை நகரசபைத் தலைவர் டெல்பின் முயற்சியால் பெறப்பட்டது. இந்தப் பொருட்காட்சி மூலம் நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூபாய் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடியாக உயர்ந்தது.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
2015-ம் ஆண்டு வாவுபலி பொருட்காட்சி நடக்காது எனச் சில விஷமிகள் புரளியைக் கிளப்பிவிட்டனர். அதற்குக் காழ்ப்புணர்ச்சியும் டெண்டர்களின் மதிப்பீட்டைக் குறைத்துக்காட்டுவதும்தான் முக்கியக் காரணங்கள். என்றாலும், அப்போது பெய்த பெருமழையும் அதனால் சேறும் சகதியும் மைதானத்தைப் பாழ்படுத்தியிருந்தது இன்னொரு காரணம். மேலும், தாமிரபரணி ஆற்றில் சிறு அணை கட்டப்பட்டுவந்ததால் மணல், ஜல்லிக்கற்கள் போன்றவை மைதானம் முழுவதும் குவிக்கப்பட்டு இருந்தன. இதனால் வாவுபலி நடக்காது எனத் தீயாக வதந்திகள் பரவின.
இந்த நிலைமையை அறிந்த டெல்பின், இரவோடு இரவாகப் பொதுப்பணித் துறையையும் நிர்வாக அமைப்புகளையும் முடுக்கிவிட்டதோடு, தானும் களத்தில் இறங்கி மைதானத்தைச் சீரமைக்கத் தொடங்கினார். அந்தத் துரித நடவடிக்கை, மைதானத்தைச் செம்மைப்படுத்த உதவியது. விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை வெற்றிகரமாகச் செய்துமுடித்த டெல்பினை மக்கள் பாராட்டினார்கள். “டெல்பின் இருக்கும்வரை வாவுபலி எப்படி இல்லாமல் போகும்?” எனத் தங்கள் தலைவருக்கு நன்றியும் தெரிவித்தார்கள். இயற்கையின் சீற்றமோ செயற்கையின் சீற்றமோ எது நடந்தாலும் மக்கள் பணியில் எத்தகைய ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் என்பதற்கு டெல்பின் எடுத்த நடவடிக்கை சிறந்த உதாரணமாக இருந்தது.
பணிகளை முடக்கும் அரசியல்
அதனால்தான் 1996, 2001, 2011 என மூன்று முறை அந்த நகராட்சியின் தலைவியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 15 ஆண்டு காலம் தொடர்ந்து டெல்பின் செயல்பட்டுவந்தார்.
பெண் அதிகாரத்துக்கு வருகிறபோது அவரின் சுதந்திரமான செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் பல வகையான முட்டுக்கட்டைகள் குறுக்கே வரத்தான் செய்கின்றன. சில அதிகாரிகளும் ஆளும் அரசில் உள்ளவர்களாலும் போடப்படுகிற தடைகள் பெரிய முட்டுக்கட்டைகள்.
நகராட்சி அதிகாரிகளில் சிலர் பெண் தலைமையின் கீழ் பணிபுரிவதை விரும்புவதில்லை. எல்லாப் பணிகளிலும் சுணக்கம் காட்டுவார்கள். அமைச்சர்களின் கைப்பாவையாகவும் பல நேரங்களில் மாறிவிடுகிறார்கள். அல்லது அச்சுறுத்தல் காரணமாக மாற்றப்படுகிறார்கள். இதனால் மக்கள் பணிகள் தேங்கி நிற்பதோடு தலைவர்கள் மீது அவப்பெயரையும் ஏற்படுத்திவிடுகிறது.
அப்போது அமைச்சராக இருந்த பச்சைமால், குழித்துறையில் நடந்த அவரது கட்சிக் கூட்டத்தில் பேசுகிறபோது, “எதிர்கட்சிக்கு வாக்களித்து உங்கள் தலையில் நீங்களே மண்ணள்ளிப் போட்டுக்கொண்டீர்களே, இப்போது அனுபவியுங்கள்” என்றார். எதைச் செய்ய வேண்டும் என அமைச்சர் நினைக்கிறாரோ, அதைச் சில மணி நேரத்தில் அந்த நகராட்சிக்குச் செய்துதரக் கூடிய அதிகாரத்தில் இருந்தாலும், அதைச் செய்யாமலேயே நகராட்சியின் தலையிலும் மக்கள் தலையிலும் மண்ணள்ளிப் போடுவது எந்த வகையில் நியாயம்? இது என்ன வகையான அரசியல்?
நடைபாதை மேம்பாலம் அமைக்கப் பொதுநிதியில் ரூ. 17 லட்சம் ஒதுக்கீடு செய்தபோது, அங்கிருந்த மத்திய அமைச்சர் தலையீட்டால் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் கிடைத்த அனுமதியும் ரத்தானது. மக்கள் பிரதிநிதிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்திருந்தாலும் மக்களுக்கான சேவையில் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவர்களது தலையாய கடமை. ஆனால், தமிழகத்தில் அவரவர் கட்சியை வளர்ப்பதே முதன்மைப் பணியாகிப் போனதால் மக்கள் பணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவது தலையாய பணியாக மாறிவிட்டது.
பாதை போட்ட தொழிற்சங்கம்
இந்தத் தடைகளால் ஒருபோதும் டெல்பின் முடங்கிப் போனதில்லை. சிறுவயதிலிருந்தே சேவையின் மீது அவர் கொண்டிருந்த ஆழமான பற்றுதான் தொய்வில்லாமல் இயங்கக் காரணம்.
டெல்பின், தமிழ்ப் புலவர் ஆசிரியர் பணிக்குப் படித்திருந்தாலும் அருட்சகோதரியாகப் பயிற்சிபெற்றுத் தொண்டாற்றவே விரும்பினார். காய்கறிக் கடை வைத்து சிறுவியாபாரம் செய்துவந்த அவருடைய கிறிஸ்தவக் குடும்பம், மகளின் விருப்பத்தை முதலில் ஏற்றுக்கொள்ளத் தயங்கியது. பிறகு மகளின் வற்புறுத்தலால் சம்மதித்தது. பெண்களுக்கான ஐ.சி.எம். சபையில் சேர்ந்தவுடன் திண்டுக்கல்லில் சிஸ்டர் சந்திராவுடனும் பிறகு பெங்களூருவிலும் பயிற்சி பெற்றார்.
தொழிலாளர்களின் கஷ்டங்களை நேரடியாக உணர்வதற்காக முதலில் கட்டிடப் பணியில் சித்தாளாகவும், அதன் பிறகு கல்லுடைக்கும் தொழிலாளியாகவும் தனியார் பிஸ்கெட் நிறுவனத்திலும் வேலை பார்த்தார். பெண் தொழிலாளர்களின் கஷ்டங்களை உணர்ந்தவர், அங்கிருந்த தொழிற்சங்க அமைப்புகளோடு இணைந்து போராட்டங்களிலும் பங்கெடுத்தார்.
மூன்று ஆண்டுகள் கழித்து கன்னியாகுமரி மாவட்டத்துக்குத் திரும்பியவர் எஸ்கலின் சிஸ்டரோடு இணைந்து மீனவப் பெண்கள் மத்தியில் பணிபுரிந்தார். இயல்பாகவே தொழிற்சங்க அமைப்புகளோடு இணைந்த போராட்டங்களும் அதன் தொடர்புகளும் அரசியலின் பக்கமாக டெல்பினை அழைத்துச் சென்றன.
பிறகு தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றதோடு முழுநேர அரசியல் பணியை டெல்பின் ஏற்றுக்கொண்டார். நகரத்தில் பெருகிவரும் மீன், கோழி, ஆடு போன்றவற்றின் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதை அறிந்த டெல்பின், அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். நகரசபையின் பொது நிதியான ரூ. 50 லட்சத்தைப் பயன்படுத்த சபை அனுமதித்தபோதும், மாநில அரசின் அனுமதி கிடைக்கவில்லை.
சாதனைகளின் சாட்சி
நகராட்சிகளின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 50 கோடி ரூபாய் நிதியை அள்ளிக்கொடுத்த மாநில அரசு, அங்கே தங்கள் கட்சியைச் சேர்ந்த நகரசபைத் தலைவர் உள்ளாரா எனக் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். குழித்துறை நகராட்சியின் நூறாவது ஆண்டை முன்னிட்டு அதன் வளர்ச்சிக்கு ஒரு ரூபாயைக்கூட மாநில அரசு அறிவிக்கவில்லை. இது குறித்த நியாயத்தைக் கேட்டபோது, அந்தத் துறையின் அதிகாரி முக்கியத்துவம் உணர்ந்து ரூபாய் ஐம்பது லட்சம் நிதியை ஒதுக்கீடுசெய்தார்.
டெல்பின் பல பணிகள் ஆற்றியிருந்தாலும் தியாகிகளுக்காக அமைக்கப்பட்ட உயரமான, கம்பீரம் பொருந்திய நினைவுத்தூண் மிக முக்கியப் பணியாகக் கருதப்படுகிறது. அன்றைக்கு கேரளாவோடு இணைந்திருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற உரிமைக்காகப் போராடி, துப்பாக்கிச்சூட்டில் பலியான 11 தியாகிகளின் வீரத்தைப் பறைசாற்றும் நினைவுத்தூணை எழுப்பிய டெல்பினையும் அவரது மன்ற உறுப்பினர்களையும் மக்கள் மனதாரப் பாராட்டினார்கள்.
“இதுவும் ஒரு வகையில் வாவுபலிதான்! வீரத்தையும் தியாகத்தையும் விதையாகவும் செடியாகவும் எடுத்துச் செல்லுங்கள். அது நிச்சயம் முளைக்கும், செழிக்கும்” என்று டெல்பின் உறுதியோடு கூறுகிறார்.
(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago