கிரிக்கெட் பெண்கள்: சச்சினைப் போல சாதித்த மந்தனா

By டி. கார்த்திக்

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை உருவத்துக்கும் ஒருவரது அதிரடி ஆட்டத்துக்கும் சம்பந்தமே இருக்காது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனாவும் இந்த ரகம்தான். பார்ப்பதற்குத் தென்றலைப் போல இருந்தாலும், களத்தில் இறங்கினால் சூறாவளியாக மாறி எதிரணிகளைப் பந்தாடுவதில் வல்லவர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மகளிர் கனவு அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீராங்கனையும்கூட!

மகளிர் உலகக் கோப்பையில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியின் இளம் வீராங்கனை மந்தனாவுக்கு இதுதான் முதல் உலகக் கோப்பை. முதல் போட்டியே வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிரானது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 270 ரன்களைக் குவித்தது. இதற்கு மந்தனா தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி 72 பந்துகளில் அதிரடியாகச் சேர்த்த 90 ரன்களும் ஒரு காரணம்.

வெறும் 10 ரன்களில் சதத்தைத் தவறவிட்டாலும், அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 106 ரன்கள் குவித்து அசத்தினார். இத்தனைக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 186 ரன்கள் மட்டுமே இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயித்திருந்தது. அதற்குப் பிறகு நடந்த நான்கு போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டானாலும், அவரது சரவெடி ஆட்டம் எப்போது வேண்டுமானாலும் சூடுபிடிக்கலாம்.

அண்ணன் வழியில்...

மும்பைதான் ஸ்மிருதி மந்தனாவின் சொந்த ஊர். இன்னும் இரண்டு (ஜூலை 18) நாட்களில் 21-வது வயதில் காலடி எடுத்துவைக்க உள்ள மந்தனாவின் கிரிக்கெட் ஆர்வத்துக்கு அவருடைய சகோதரர் ஷரவண்தான் காரணம். மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடிவந்த அவரது ஆட்டத்தைப் பார்க்க அடிக்கடி மைதானத்துக்குச் செல்வார் மந்தனா. அவரது மனசுக்குள்ளும் கிரிக்கெட் ஊடுருவியது. மந்தனாவின் கிரிக்கெட் ஆர்வத்துக்கு பெற்றோரும் ஆதரவுக்கரம் நீட்ட, கிரிக்கெட்டில் களம் இறங்கினார்.

ஏழு வயதில் மட்டையைப் பிடித்த மந்தனா, விறுவிறுவென பேட்டிங்கில் கில்லியாக மாறியது சுவாரசியமான கதை. பிறப்பிலிருந்தே வலது, இடது என இரண்டு கைகளையும் பயன்படுத்தும் பழக்கமுள்ளவர்கள், அதையொற்றி கிரிக்கெட்டிலும் விளையாடுவது வாடிக்கை. ஆனால், ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரரான மேத்யூ ஹேடனின் ரசிகையான மந்தனா, அவரைப் போல இடதுகை ஆட்டக்காரராக இருக்க வேண்டும் என்பதற்காக வலது கை ஆட்டத்தையே துறந்தார். அது மட்டுமல்ல; அவரைப் போலவே அதிரடி ஆட்டக்காரராகவும் தன்னை மாற்றிக்கொண்டார். இடதுகை ஆஃப் பிரேக் பந்துவீசுவதிலும் மந்தனா கெட்டிக்காரர்.

நிறைவேறிய கனவு

மைதானத்தில் இறங்கினால் அதிரடியாகவும் விரைவாகவும் ரன் சேர்க்க வேண்டும் என்பது மட்டும்தான் மந்தனாவின் இலக்கு, ஆசை எல்லாம். அது அவருக்கு நன்றாகக் கைகொடுக்க, மந்தனாவின் பக்கம் வெற்றிக் காற்று பலமாக வீசியது. இதனால் 9 வயதிலேயே 15 வயதுக்கு உட்பட்டோர் அணியிலும், 11 வயதிலேயே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகாராஷ்டிர அணியிலும் இடம்பிடித்துப் பலரும் மூக்கில் விரல்வைக்கும் அளவுக்கு வேகமாக முன்னேறினார்.

உள்ளூர் ஒரு நாள் போட்டி ஒன்றில் வதோதரா அணிக்கு எதிராக 150 பந்துகளில் 224 ரன்கள் குவித்துப் பெண்கள் அணியை மலைக்க வைத்தார். விளைவு, சச்சினைப் போலவே 16 வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியின் கதவு மந்தனாவுக்குத் திறந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வித அணிகளிலும் விளையாடிவருகிறார் மந்தனா.

பெண்கள் அணிகளிலேயே ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்களது ஊரிலேயே சதம் அடிப்பது எல்லாம் எளிதில் நடக்கக்கூடியது அல்ல. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்திருந்த மந்தனா, ஹோபர்ட் நகரில் 106 ரன்கள் குவித்துச் சாதனை படைத்தார். கடந்த ஆண்டு இன்னொரு மறக்க முடியாத சம்பவமும் மந்தனாவின் வாழ்க்கையில் நடந்தது. ஐ.சி.சி. மகளிர் கனவு அணியை அறிவித்தபோது, அதில் ஸ்மிருதி மந்தனாவும் இடம்பிடித்து பெருமை பெற்றார்.

சிறு வயதில் தன் சகோதரன் ஷ்ரவணின் பெயர் செய்தித்தாளில் வரும்போதெல்லாம், தன்னுடைய பெயரும் செய்தித்தாளில் வருகிற அளவுக்கு கிரிக்கெட் ஆடப்போகிறேன் என்று தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பாராம் மந்தனா. இன்று கிரிக்கெட் உலகில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் அவரது பெயரைத் தெரியாதவர்கள் குறைவு!

சாதனை மேல் சாதனை

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்துள்ள அணித் தலைவர் மித்தாலி ராஜ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை ஒன்றையும் படைத்து உச்சத்துக்குப் போனார். சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக ரன் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பதுதான் அந்தச் சாதனை! அந்தப் போட்டியில் 33 ரன்கள் அடித்தபோது இங்கிலாந்து வீராங்கனை சார்லோட் எட்வர்ட்ஸை (191 போட்டிகள், 5,992 ரன்) முந்தினார் மித்தாலி ராஜ். தொடர்ந்து சிறப்பாக விளையாடி 69 ரன்கள் சேர்த்ததன் மூலம் 6,028 ரன்களை அவர் எட்டியுள்ளார். தனது 183-வது போட்டியிலேயே இந்தச் சாதனையை அவர் படைத்தது முக்கியமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்