க
டைக்கோடி காட்டுக்குள் வசித்தாலும் நம்மைச் சுற்றியிருக்கும் பொருட்களே மூலதனம் என்று வாழ்பவர்கள் மலைமக்கள். அவர்களுள், ‘நமக்குள் இருக்கும் ஆற்றலே தொழில்’ என்று களம் இறங்கிச் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் கோபனாரி மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்கள்.
கோவை மாவட்டத்தில் கேரள எல்லையோரம் அமைந்திருக்கும் மலைக் கிராமம் கோபனாரி. மொத்தம் 100 குடும்பங்களே இருக்கும் இந்தக் கிராமத்தில், இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். அதில் ஆதிவாசிப் பெண்கள், 20 பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிந்து செல்கிறார்கள். சுற்றுப்பகுதியில் உள்ள காடுகளில் நிறைந்திருக்கும் உசிலா மரம் எனப் பேச்சுவழக்கில் சொல்லப்படும் ஊஞ்ச மர இலைகளைப் பறித்துவருகிறார்கள். வீட்டுக்கு வந்ததும் அந்த இலைகளைக் காயவைத்து, அரப்புத் தூள் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.
இவர்களே சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருக்கும் காடுகளில் உள்ள புளிய மரங்களை வனத்துறையிடம் குத்தகைக்கு எடுத்துப் புளியங்காய் பறித்து விற்பனை செய்தார்கள். அந்தத் தொழில் வெற்றியடையவே அடுத்தகட்டப் பயணமாக அரப்புத் தூள் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்கள். இந்தப் பெண்கள் டெல்லிவரை சென்று ஆதிவாசிகளின் உணவுப் பொருள் கண்காட்சியில் மூன்று முறை பங்கேற்றிருக்கிறார்கள்!
முன்னேற்றப் பயிற்சி
இந்தப் பெண்கள் குழுவுக்கு முன்னோடியாக இருக்கும் வி.சுலோச்சனாவும் எம்.சிவகாமியும் தாங்கள் கடந்துவந்த பாதையை பகிர்ந்துகொண்டார்கள்:
18cbksv01-sulochanav சுலோச்சனா“எங்க பொம்பளைக யாரும் வேலைக்குப் போனதில்லை. வெளியுலகமும் தெரியாது. ஆடு, மாடு மேய்ப்பாங்க. பக்கத்துல தெரிஞ்ச தோட்டத்துக்குக் காட்டு வேலைக்குப் போவாங்க.
அந்த நேரத்தில்தான் ‘ஜன் சிக்ஷான் சன்ஸ்தான்’ (jss) அமைப்பினர் இந்த ஊருக்கே வந்து பெண்களுக்குச் சுயமுன்னேற்றப் பயிற்சி கொடுத்தாங்க.
நாங்க கூச்சப்பட்டுட்டு அதுல கலந்துக்க மாட்டோம்னு சொல்லிட்டோம். ஃபாரஸ்ட்காரங்க முன்வந்து சொன்ன பிறகுதான் வேண்டா வெறுப்பா கலந்துகிட்டோம். ஓவியம், எம்ப்ராய்டரி, கைவினைப் பொருட்கள் எல்லாம் செய்யக் கத்துக்கிட்டதோட, அதைக் கண்காட்சிகளுக்கும் கொண்டுபோனோம்.
ஒரு முறை எங்க பழங்குடி மக்கள் சமையலையும் கண்காட்சியில் வைத்தோம். டெல்லி உணவுத் திருவிழாக்களிலும் பங்கெடுத்தோம். அது கொடுத்த தன்னம்பிக்கையில உருவானதுதான் புளியும் அரப்பும் விற்பனை செய்வது” என்று விளக்குகிறார்கள்.
விற்பனைச் சிக்கல்
2005-ம் ஆண்டு இந்தப் பகுதியில் ‘குறிஞ்சி சுயசார்பு வனக்குழு’ தொடங்கப்பட்டது. இவர்களின் முன்னேற்றத்துக்கு வனத்துறை அதிகாரிகள் உதவினார்கள். அவற்றில் ஒன்றுதான் புளிய மரங்களைக் குத்தகைக்கு எடுத்தது.
“புளியை 30 டன்னுக்கு மேல சேகரிச்சுட்டோம். ஆனா அதை எங்கே, எப்படி விற்பனை செய்யறதுன்னு தெரியலை. நாங்க பயிற்சி எடுத்துட்ட ஜே.எஸ்.எஸ். அமைப்பினர், வனத்துறையினர்னு பலர் உதவியும் பலனில்லை. நாங்க வங்கியில் வாங்கிய 5 லட்சம் ரூபாய் கடனையும் கட்ட முடியலை. அப்புறம் அங்கே இங்கே அலைஞ்சு ஒரு கேரள வியாபாரியைப் பிடிக்க, அவர் மட்டும் 20 டன் புளியை வாங்கினார். இப்படி நடந்த புளி வியாபாரம், இப்ப நல்லா போயிட்டிருக்கு. நாலு மாசம் எங்க மக்களுக்கு வேலைய கொடுத்தது” என்றார் சுலோச்சனா.
ஜனவரி முதல் ஏப்ரல்வரை புளி வியாபாரத்தை நடத்தியவர்கள், மீதியிருக்கும் எட்டு மாதங்களுக்கு என்ன செய்வதென யோசித்தனர். அரப்புத் தூள் எடுக்கப் பயன்படும் ஊஞ்ச மரங்கள் அந்தப் பகுதியில் அதிகம் என்பதால், அந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தனர். அந்த மரத்தின் இலைகளைப் பறித்து, காயவைத்துப் பொடியாக்கி விற்பனை செய்ய முடிவெடுத்தனர்.
18cbksv01-sivakami m சிவகாமி“இலைகளை மட்டும்தான் பறிக்கணும், மரத்தை வெட்டக் கூடாதுங்கற கட்டுப்பாட்டோடு ஃபாரஸ்ட்காரங்க அனுமதி கொடுத்தாங்க. 40 பேர் இந்த வேலையில மே மாசம் இறங்கினோம். காடுகாடா திரிஞ்சு இலைகளை எடுத்தோம். அவற்றைப் பொடியாக்கி 3 டன் அரப்புத் தூள் தயாரிச்சுட்டோம். சாம்பிளுக்கு நிறைய கடைகளில் கொடுத்திருக்கோம்.
இன்னமும் ஆர்டர் பெரிசா வரலை. ஒரு கடைக்காரர் எங்ககிட்ட மொத்தமா வாங்கி 400 கிராம் பாக்கெட் செஞ்சு விற்கிறார். ஏற்கெனவே நாங்க வாங்கின அரப்பு போடற 400 கிராம் பாக்கெட்டுல, உங்க அரப்பு அடங்க மாட்டேங்குது, அதுலயே உங்க தரம் விளங்குதுன்னு சொல்லி அந்தக் கடைக்காரர் மறுபடியும் வாங்கியிருக்காரு. அதுபோலவே பலரும் எங்களைத் தேடி வருவாங்கன்னு நம்பறோம்” என்று சொல்கிறார் சிவகாமி.
‘புளியங்காய் வியாபாரத்தில் வங்கிக் கடன் வாங்கி நாங்க ஆரம்பத்துல நொந்துட்டோம். அதுபோல இந்த முறை நடந்துடக் கூடாது என்பதற்காக வங்கிக் கடனே வாங்காமல், நாங்களே ஆளுக்கொரு தொகையைப் போட்டு இதைச் செய்கிறோம். எங்கள் உழைப்பு வீணாகாது’ என நம்பிக்கை துளிர்க்கச் சொல்கிறார்கள் இந்தப் பழங்குடிப் பெண்கள்.
படங்கள்: கா.சு. வேலாயுதன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago