வான் மண் பெண் 12: சுரங்கத்தை எதிர்த்த சுடர்!

By ந.வினோத் குமார்

வட இந்திய மாநிலங்களில் சுற்றுச்சூழல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் முக்கியமானது இமாச்சலப் பிரதேசம். ‘நாட்டின் பழக் கிண்ணம்’ என்று அழைக்கப்படுகிறது இந்த மாநிலம். இப்படி மலையையும் காடுகளையும் ஒருங்கே தன்னிடத்தில் கொண்ட இந்த மாநிலத்தில் 80-களின் ஆரம்பத்திலிருந்தே சட்டத்துக்குப் புறம்பாகச் சுண்ணாம்புக் கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழில் நடைபெற்றுவருகிறது. அதன் காரணமாக, மரங்கள் வெட்டப்பட்டன, வனம் அழிக்கப்பட்டது, நதிகள் மாசடைந்தன, நிலங்கள் பயனற்றுப் போயின, மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டார்கள்.

இதை எதிர்த்துப் போராடிய கிங்க்ரி தேவி, பின்னாளில் சீனாவில் நடைபெற்ற சர்வதேசப் பெண்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்று, உலகின் பார்வையை இமாச்சலப் பிரதேசத்தின் மீது திருப்பினார். அப்படிப்பட்ட ஆளுமைக்கு, எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்தது எந்த வகையிலும் பிரச்சினையாக இருக்கவில்லை.

வறுமை பறித்த கல்வி

இமாச்சலப் பிரதேசம் சங்க்ரா மாவட்டத்தில் உள்ள கடோன் எனும் ஊரில் 1940-ம் ஆண்டு ஜூலை 4 அன்று, ஏழைக் குடும்பம் ஒன்றில் பிறந்தார் கிங்க்ரி தேவி. அவரின் பாஸ்போர்ட்டில்தான் மேற்கண்ட பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அவர் பிறந்தது 1925-ம் ஆண்டில். இப்படி, தன் பிறந்தநாளைக்கூடத் தெரிந்து வைத்திருக்காத அவர், பின்னாளில் இமாச்சலப் பிரதேச வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களுக்குச் சொந்தக்காரர் ஆனார். எப்படி?

இவருடைய தந்தை காலியா ராம், சாதாரணக் கூலித் தொழிலாளி. கிங்க்ரி தேவிக்குக் கல்விச் செல்வம் கிடைக்காமல் போனதற்கு வீட்டில் நிலவிய வறுமை ஒரு காரணம். இன்னொரு காரணம், அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பது. இந்நிலையில், 13-வது வயதில் கொத்தடிமையாக இருந்த ஷியாமு ராம் என்பவருடன் அவருக்குத் திருமணமானது. 16 வயதில் தாயான அவர், 22 வயதில் கணவரை இழந்தார். அதன் பிறகு, துப்புரவுத் தொழிலாளியாகத் தன் வாழ்க்கையை நகர்த்திவந்தார்.

சுரங்கத்தை எதிர்த்த வழக்கு

சிறு வயதிலிருந்தே சுள்ளி பொறுக்குவதற்காகக் காடு, மலைகள் என்று சுற்றித் திரிந்தவர் கிங்க்ரி தேவி. அப்போது நிறைய மரங்களும், நிறையப் பறவைகளும், நதியில் தூய நீரும் இருந்தன. அவர் நடு வயதைத் தொட்ட காலத்தில், தான் சுற்றித் திரிந்த காடுகள் அழிக்கப்படுவதையும் நதிகள் மாசுபடுவதையும் பார்த்து வேதனை அடைந்தார். அதற்குக் காரணம், சுரங்கப் பணிகள். அதிலும் பெரும்பாலான சுரங்க முதலாளிகள், அரசு விதிகள் எதையும் மதிக்காமல், சட்டத்துக்குப் புறம்பாக, தேவைக்கு அதிகமாகச் சுண்ணாம்புக் கற்களை வெட்டி எடுத்துவந்தார்கள். அவர்களைத் தட்டிக் கேட்க வேண்டிய அரசு அதிகாரிகளோ, சுரங்க முதலாளிகளிடம் விலை போனார்கள்.

இப்படி ஒரு சூழ்நிலையில், சட்டத்துக்குப் புறம்பாக இயங்கும் சுரங்கங்களை மூடுவதற்காக கிங்க்ரி தேவி போராடத் துணிந்தார். அந்தச் சுரங்கங்களுக்கு எதிராக கிங்க்ரி தேவி பேசி வருவதை, சுரங்க முதலாளிகள் சிலர் கண்டித்தார்கள், மிரட்டல் விடுத்தார்கள். அதனால் சட்டத்தின் துணையுடன் அவர்களை எதிர்கொள்ள முடிவெடுத்தார் கிங்க்ரி தேவி. அந்தப் பகுதியில் தன்னார்வமாகப் பணிகளை மேற்கொண்ட ‘பீப்பிள்ஸ் ஆக்‌ஷன் ஃபார் பீப்பிள் இன் நீட்’ எனும் உள்ளூர் அமைப்பு அவருக்கு உதவ முன்வந்தது. அந்த அமைப்பின் துணையோடு 1987-ம் ஆண்டு மார்ச் 31 அன்று, சிம்லா உயர் நீதிமன்றத்தில், 48 சுரங்கங்களுக்கு எதிராகப் பொதுநல வழக்கை கிங்க்ரி தேவி தொடர்ந்தார்.

கவனம் ஈர்த்த பட்டினிப்போர்

எல்லா சாமானியர்களைப் போலவே, ‘வழக்குத் தொடுத்தாயிற்று. இனி சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று நம்பினார் கிங்க்ரி தேவி. ஆனால், நாட்கள் நகர நகர தன் வழக்கின் மீது, நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை நினைத்து மனம் வருந்தினார். தொடர்ந்து, சிம்லாவுக்குச் சென்று உயர் நீதிமன்றத்தின் முன்பு பட்டினிப் போராட்டம் மேற்கொள்ள ஆரம்பித்தார். 19 நாட்கள் நடந்த அந்தப் போராட்டத்தால் தேசிய, சர்வதேச ஊடகங்களின் கவனம் கிங்க்ரி தேவி மீதும், அவர் தொடர்ந்த வழக்கின் மீதும் திரும்பியது.

அந்தப் போராட்டம், நீதிபதிகளையும் அசைத்தது. உடனே அவர் தொடுத்த வழக்கின் மீது விசாரணை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் அதுவரை இயங்கிவந்த சட்டத்துக்குப் புறம்பான சுரங்கப் பணிகள் மீதும் சுரங்கப் பணிகள் மேற்கொள்வதற்காக வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதற்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இதனால் ஆத்திரமடைந்த சுரங்க முதலாளிகள் கிங்க்ரி தேவிக்குக் கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்தார்கள். அதற்கு அவர் அஞ்சவில்லை. உயர் நீதிமன்றத் தடையை எதிர்த்து, சுரங்க முதலாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதை விசாரித்த நீதிமன்றம், 1995-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், உயர் நீதிமன்றம் விதித்த தடை உறுதிசெய்யப்பட்டது.

உலக அங்கீகாரம்

இந்த வெற்றிகளின் மூலம் கிங்க்ரி தேவி மேலும் பிரபலமடைந்தார். எந்த அளவுக்கு என்றால், சீனத் தலைநகர் பீஜிங்கில் 1995-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேசப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொள்ள, அன்றைய அமெரிக்க அதிபரின் மனைவி ஹிலாரி கிளிண்டனே அழைப்புவிடும் அளவுக்கு! சில நல்ல உள்ளங்கள் செய்த நிதியுதவியால், சீனாவுக்குச் சென்ற கிங்க்ரி தேவி, இமாச்சலப் பிரதேசத்தின் பெருமைகள், சுற்றுச்சூழல், அங்கு நடைபெற்றுவரும் சுரங்கத் தொழில் பற்றி உரையாற்றினார். இவருடைய பணிகளைப் பாராட்டி அன்றைய பிரதமர் வாஜபாயி ‘ஜான்சி கி ராணி லக்‌ஷ்மி பாய் ஸ்த்ரீ சக்தி புரஸ்கார்’ விருதை 1999-ம் ஆண்டு வழங்கினார்.

இப்படி, விருதுகளையும் பாராட்டுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவுடன் தன் போராட்டம் முடிந்துவிட்டதாக அவர் நினைக்கவில்லை. தன்னைப் போல எதிர்காலத் தலைமுறையும் கல்விச் செல்வத்தைப் பெற முடியாமல் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். எனவே, தான் வாழ்ந்த சங்க்ரா தாலுகாவில் பள்ளி, கல்லூரியை உருவாக்க வேண்டுமென்று 2002-ம் ஆண்டு முதல் போராடி வந்தார். அந்தப் போராட்டத்தின் பலனாக 2005-ம் ஆண்டு அங்கு கல்லூரி தொடங்கப்பட்டது.

தன் 82-வது வயதில் 2007-ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று வறுமையில், குணப்படுத்த இயலாத நுரையீரல் நோய் காரணமாக உலகை விட்டு மறைந்தார் கிங்க்ரி தேவி. தான் இறப்பதற்குச் சில நாட்கள் முன்புதான், தன் கையெழுத்தைப் போடவே கற்றுக்கொண்டார் அவர். இவ்வாறு, சுற்றுச்சூழலுக்காகவும் கல்விக்காகவும் போராடிவந்த அவரை நினைவில் கொண்டு, இன்றும் இமாச்சலப் பிரதேசத்தில் சுரங்கங்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்