பெண் கல்வி இன்று பெருமளவு வளர்ந்திருக்கிறது என்கிற உண்மை நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. என்றாலும் இன்றும்கூட ஆண்களைவிடக் கணிசமான அளவில் படித்தப் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. கல்வியறிவு பெற்ற ஆண்கள் 75 சதவீதமெனில், பெண்கள் 50 அல்லது அதற்கும் கீழாகவே இருக்கிறார்கள். இருபது சதவீத இடைவெளி இன்னும் தொடர்கிறது.
பெண்களைப் படிக்கவைக்க வேண்டும் என்கிற உணர்வு எல்லோருக்கும் வந்துவிட்ட போதிலும், பள்ளி இடைநிற்றல் விகிதம் பெண்களிடையே கூடுதலாக இருப்பதற்கான முக்கியக் காரணம் அருகாமைப் பள்ளிகள் இல்லாததே. இதற்கு சத்தியமங்கலம், குன்றில் போன்ற மலையோரப் பகுதிகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
நின்றுபோகும் பெண் கல்வி
பெண் குழந்தைகளைத் தொலைவாக உள்ள பள்ளிகளுக்கு அனுப்ப இன்னும் துணிவு வராததற்கான காரணம், வயதுவந்த பெண் பாதுகாக்கப்பட வேண்டிய பண்டமாகிவிடுவதுதான். இன்றைய தமிழகக் கல்வித் துறை இது போன்ற இடங்களில் புதிய பள்ளிகளைத் திறப்பதாக உத்தரவாதம் அளித்திருக்கிறது.ஆனால், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அல்லது தேசியக் கல்விக் கொள்கை பள்ளிகளை இணைப்பதன் மூலம் பள்ளிகளிடையே தொலைவைக் கூட்டும் திட்டத்தை முன்வைத்திருக்கிறது. அது போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் பெண் குழந்தைகளின் கல்வி சரசரவென பின்னுக்குப் போகக் கூடும். தாங்கள் அடைந்துவரும் முன்னேற்றம் எதுவுமே, இன்னும் நிலைப்படுத்தப்படவில்லை என்கிற உண்மையை பெண்கள் சமுதாயம் உணர வேண்டும்.
பெண்ணுக்கு ஏற்ற படிப்பு?
ஒருவகையில் பெண் குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்னும் கட்டாயத்தை அவர்களின் திருமணச் சந்தையே இன்று உருவாக்கியிருக்கிறது. பெண்களின் சம்பளப் பணம் குடும்பத்தின் முக்கிய ஆதாரமாக மாறியிருப்பதே இதற்குக் காரணம். ஆனால், பெண்ணை என்ன படிக்கவைப்பது என்பதில் பாலினப் பாகுபாடு இன்னும் தனது இடத்தை உறுதிசெய்து கொண்டேதான் இருக்கிறது. முதன்முதலில் பெண் கல்வியைப் பற்றிய விவாதங்கள் இந்த மண்ணில் எழுந்தபோது பெண்கள் படிக்கக் கூடாது என்பதில் தொடங்கி, அப்படிப் படித்தால் மனையியல் கல்வி (home science) படிக்கட்டும் என்றார்கள். அதையும் ஆங்கில மொழியில் படிக்கக் கூடாது, உலக அறிவின் வாசல் அவர்களுக்கு திறந்து விடக் கூடாதே என்று அஞ்சினார்கள். அந்த நிலையை நாம் கடந்துவிட்டோம்.
ஆணுக்கு அளப்பரிய சுதந்திரம்
இன்னும் பெண்களுக்கான வேலைகள் என்று இந்த சமுதாயம் சில வரையறைகளை வைத்திருக்கிறது. அந்த வேலைகளை மனதில் நிறுத்தியே இன்றும் அவர்களுக்கான கல்வி தேர்ந்தெடுக்கப்படுகிறது. கற்கும் பருவத்தில் ஒரு பையனுக்கு அளிக்கப்படும் சுதந்திரத்தின் அளவும் பெண்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரத்தின் அளவும் மலையளவு வேறுபாட்டுடனே இருக்கின்றன. முக்கியமாகக் கல்விக் கூடங்களுக்கு வெளியே தனிப்பயிற்சிகளைத் தேர்ந்தெடுப்பதில், சிறப்பு பாடத்திட்டங்களில் சேருவதில் பையன்களின் சுதந்திரம் அளப்பரியது. ஆனால், பல்வேறு கேள்விகளால் பெண்களுக்கு இவை கட்டுப்படுத்தப்படுகின்றன. சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் இது அதிகமாக நடக்கிறது.
இன்னும் எளிமையான உதாரணமாக, செல்போன் பயன்பாட்டில் பையன்களுக்கும் பெண் பிள்ளைகளுக்குமிடையில் உள்ள வேறுபாட்டை எடுத்துக்கொள்ளலாம். அடுத்தது வாகனம். ஒவ்வொரு பையனுக்குமான வாகனங்களில் வீடுகள் செய்யப்படும் முதலீடு தவிர்க்க முடியாத செலவு. அந்த வாகனம் பையன்களுக்கு அளிக்கும் ஆளுமையோ மிகப் பெரிது. இந்த வகையில் தமிழக அரசு பெண் குழந்தைகளுக்கு சைக்கிள் அளித்தது பாராட்டுக்குரியது.
ஈர்ப்பு என்பது இயல்பு
இந்தப் பருவத்தில் பெண்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சினை, எதிர்பாலின ஈர்ப்பு. கற்பு என்னும் மிகப் பெரிய வாழ்நாள் சுமையை இந்த பருவத்தில்தான் அவர்கள் மீது ஏற்றிவைக்கிறது இந்தச் சமுதாயம். முதலாவதாக பெண்களின் மனதுக்கும் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் கற்புக் கோட்பாடுகளுக்குமிடையே நடக்கும் உளவியல் போராட்டம். இயல்பாக ஏற்படும் எதிர்பாலின ஈர்ப்பைக் குற்றம் என்று சொல்லிக் கொடுக்கிறது சமுதாயம். எனவே, இயல்பான பாலியல் உணர்வுத் தூண்டல்களை தனது ஒழுக்கம் சார்ந்த பிரச்சினையாக இந்தக் குழந்தைகள் நினைத்து வேதனைப்படத் தொடங்குகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களை ஆற்றுப்படுத்தும் அமைப்புகள் எதுவுமே நமது சமுதாயத்தில் இல்லாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்க நிலை.
திருமணத்துக்கு முன்பு பாலுறவு அல்ல பாலுணர்வே தவறு என்று கருதுகிற சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம். ஒருமுறை பதினைந்து வயது ஒரு பெண் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தார். வயிற்றுவலி என்று சொன்னார். பயம் அப்பட்டமாகக் கண்களில் தெரிந்தது. ஏதோ ஒரு பையனோடு பழகியிருக்கிறார். எது தவறு, தவறில்லை என்று அவருக்கு புரியவில்லை. குழப்பம். பயம். அவருடைய தாயார் வீட்டு வேலை செய்பவர். நாங்கள் ஆறுதல் கூறி ஒரு பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். உண்மையில் அந்தப் பெண்ணுக்கு எந்தப் பாதிப்புமில்லை. மனப் பாதிப்புதான். அந்த மருத்துவர் ஆறுதலுடன் அந்தக் குழந்தையை தேற்றுவார் என எதிர்பார்த்து மிகுந்த ஏமாற்றமடைந்தோம். அவர் கேட்ட கடுமையான கேள்விகள் எங்களையே காயப்படுத்தின. அந்தக் குழந்தையின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
பாலியல் கல்வி ஏன் தேவை?
இந்த வெற்றிடத்தை நாம் கவனிக்காமல் ஓர் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க ஒருபோதும் முடியாது. இந்த இடத்தில்தான் கல்விக் கூடங்களில் பாலியல் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. காக்கை குருவிக்கெல்லாம் யாராவது பாலியல் கல்வி கற்றுத் தருகிறார்களா என்று சிலர் கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான். ஆனால், காக்கையும் குருவியும் கல்யாணம் செய்துகொள்வதில்லை. அந்த கல்யாணத்துக்கு முன்பும் கல்யாணத்துக்கு வெளியிலும் பாலுணர்வையோ பாலுறவையோ தடை செய்வதில்லை. பாலியல் கல்வி ஏன் தேவைப்படுகிறதென்றால், எந்த ஓர் அறிவையும் முறைப்படுத்தி பெறுவதன் மூலம், அதில் ஏற்படும் துன்பங்களைக் குறைத்து இன்பங்களைப் பெருக்கிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்ததாக மனித சமுதாயம் திகழ்வதால்தான்.
இரண்டாவதாக இங்கு தனி வாழ்க்கை என்பது பாலியல் ஒழுங்கை முன்வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. எனவே, பருவமடைதல் என்னும் நிகழ்வுக்குப் பிந்தைய வாழ்க்கையில் பையன்களையும் சிறுமிகளையும் வழிப்படுத்துகிற அறிவியல் சார்ந்த கல்வியும், அதற்கான முறையான நிறுவனங்களும் அத்தியாவசியத் தேவைகள். இதை வழங்கத் தகுதியான இடங்கள் பள்ளிகளே. இன்னும் சொல்லப் போனால் பெற்றோருக்கும் சேர்த்தே இந்த உளவியல் பாடங்களை நடத்தலாம். ஏனென்றால் இது மாதிரியான குழப்பம் மிகும் நேரங்களில் பெற்றோருக்குப் பயந்து, தங்களை மறைத்துக்கொண்டு குழந்தைகள் விலகித் தனிமைப்பட்டு விடுகிறார்கள். ஆனால், அந்த நேரத்தில் அறிவார்ந்த பெற்றோரின் அரவணைப்பும் ஆலோசனையும் அந்தக் குழந்தைகளுக்குக் கிடைத்தால், அதுபோன்றதொரு செல்வம் அந்தக் குழந்தைகளுக்கு வேறெதுவும் இல்லை.
(இன்னும் தெளிவோம்)
கட்டுரையாளர்,பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago