முகங்கள்: ஓட்டுநர் பயிற்சியும் மூலதனம்தான்

By எல்.ரேணுகா தேவி

வாகனம் ஓட்டுவது பெண்ணுக்குச் சுதந்திர உணர்வை அளிக்கக் கூடியது. தான் அனுபவிக்கும் அந்த உணர்வை மற்றப் பெண்களும் உணர உதவுகிறார் சென்னையைச் சேர்ந்த பாரதி. இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக பெண்களுக்கு மட்டும் கார், இருசக்கர வாகனம் போன்றவற்றை ஓட்டுவதற்குப் பயிற்சியளித்து வருகிறார்.

ஆர்வமே மூலதனம்

“நாம் எப்போதும் மற்றவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது. பள்ளி நாட்களில் பகுதி நேர வேலைகளைச் செய்து பள்ளிக் கட்டணம், புத்தகம் போன்ற தேவைகளை நானே பார்த்துக்கொண்டேன். பி.காம்.படித்துக்கொண்டே மார்கெட்டிங் துறையில் வேலை செய்திருக்கிறேன். அப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக்கொண்டேன். திருமணத்துக்குப் பிறகு உருவான சூழ்நிலை என் வாழ்வை மாற்றிவிட்டது. கைக்குழந்தையுடன் என் பெற்றோர் வீட்டிலேயே தங்க வேண்டிய நிலை. அந்த நாட்கள் மிகவும் வலி மிகுந்தவை. அப்போதுதான் இப்படி சும்மா இருக்கக் கூடாது, தைரியமாக ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என முடிவு செய்தேன்” என்று இந்தத் துறைக்கு தான் வந்த கதையைச் சொல்கிறார் பாரதி.

கார் ஓட்டுவதையே மூலதனமாக மாற்றினார். மற்றவர்களுக்குக் கார் ஓட்டக் கற்றுத்தர முடிவெடுத்தார். இரண்டு மாதக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு ஒவ்வொரு டிரைவிங் ஸ்கூலாக சென்று வாய்ப்பு கேட்டார். பெண் பயிற்றுநர்கள் குறைவாக இருப்பதால் பாரதியைத் தேடி வாய்ப்புகள் வந்தன.

முயன்றால் முடியும்

இதுவரை 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இருசக்கர வாகனப் பயிற்சியும், ஆறுபது பேருக்கு மேல் கார் ஓட்டுவதற்கான பயிற்சியும் வழங்கியிருக்கிறார் பாரதி.

குழந்தைகளைப் பள்ளிக்கும் மாலை நேர வகுப்புகளுக்கும் அழைத்துச் செல்வது, பொருட்கள் வாங்க வெளியே செல்வது போன்றவற்றுக்குத் தங்கள் வீட்டு ஆண்களையே நம்பியிருக்க முடியாத நிலையில் பலர் இருசக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்கிறார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளிலும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.

“ஒருவர் 15 நாளிலேயே கார் ஓட்டக் கற்றுக்கொள்ளலாம். ஆனால், கொஞ்சம் பயம் உள்ள பெண்கள் மட்டும்,தங்கள் மேல் முழு நம்பிக்கை வரும்வரை பயிற்சி எடுத்துக்கொள்வார்கள். பயிற்சியின்போது சில பெண்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால் ‘அவ்வளவுதான் நமக்கு இது சரிப்பட்டு வராது’ என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். சாலை விதிகள் குறித்துத் தெளிவு இல்லாததாலும் பல பெண்கள் கார் ஓட்டத் தயங்குகிறார்கள். மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றவர்களைவிட வாகனங்கள் ஓட்ட விரைவாகக் கற்றுக்கொள்வார்கள். என்னிடம் பயிற்சிக்கு வரும் பெண்களிடம் அவர்களைத்தான் நான் முன்னுதாரணமாகச் சொல்வேன்” என்கிறார் பாரதி.

ஓட்டுநர் பயிற்சி மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் பாரதிக்குத் தனியாக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்க வேண்டும் என்பது கனவு. வாழ்க்கை தன்னைத் துரத்தியபோது வீழ்ந்துவிடாமல், தனக்குத் தெரிந்த தொழிலைப் பார்த்து வெற்றி நடை போட்டுவரும் பாரதி, அந்தக் கனவையும் மெய்ப்படுத்துவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்