துணிவே துணை: யாருக்கும் அஞ்சத் தேவையில்லை!

By பிருந்தா சீனிவாசன்

குற்ற வழக்குகளில் பொதுவாக மின்னணு ஊடகங்கள் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், ஹரியாணாவில் நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்கில் ‘வாட்ஸ் அப்’ உரையாடல்கள் முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில், இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

ஹரியாணாவில் உள்ள ஜிண்டால் உலகளாவிய பல்கலைக்கழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒருங்கிணைந்த மேலாண்மை படிப்பில் சேர்ந்தார் ஒரு பெண். சேர்ந்த சில மாதங்களிலேயே அதே பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு சட்டம் பயின்ற ஹர்திக் சிக்ரி என்ற மாணவரோடு அவருக்கு நட்பு ஏற்பட்டது. அது காதலானபோது, மாணவியின் நிர்வாணப் படங்களை அனுப்பச் சொல்லி ஹர்திக் வற்புறுத்தினார். மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்தார். தொடர்ச்சியான வற்புறுத்தலின் முடிவில், ஹர்திக் கேட்டபடியே படங்களை ‘வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பினார் அந்த மாணவி. அந்தச் செயல் மாணவியின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துவிட்டது.

கொடுமையின் உச்சம்

‘வாட்ஸ் அப்’ மூலம் தனக்கு வந்த படத்தைத் தன் நண்பர்களுக்குக் காட்டினார் ஹர்திக். ‘அந்தப் படத்தைக் கல்லூரியின் இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன்’ என்ற அவரது மிரட்டலுக்கு வேறு வழியில்லாமல் அடிபணிந்தார் அந்த மாணவி. ஹர்திக்கின் வக்கிரத்துக்கு மட்டுமில்லாமல் அவருடைய அறை நண்பர்கள் இருவரின் இச்சைக்கும் அந்த மாணவி பலியானார். அந்தக் கொடுமைகள் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் என்று நினைத்த மாணவிக்கு, அடுத்தடுத்து வந்த நாட்கள் நரகமாயின.

அடிக்கடி ஆபாசப் படங்களை அனுப்பச் சொல்லி அந்த மூவரும் கட்டாயப்படுத்தினர். எங்கே தன் நிர்வாணப் படத்தை வெளியிட்டுவிடுவார்களோ என்ற பயத்தில், அந்த மாணவியும் அடுத்தடுத்து அதுபோன்ற படங்களைப் பகிர்ந்தார். அந்த மூவரும் மாணவியை வெளியே அழைத்துச் சென்று, கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டனர். ‘செக்ஸ் டாய்ஸ்’ எனப்படும் பொம்மையை வாங்கச் சொல்லி, அதனுடன் இருப்பதை ஸ்கைப் மூலம் வீடியோவாக அனுப்பச் சொல்லி கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.

அதற்கு மேல் அவர்கள் செய்த கொடுமைகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை. இந்தக் கொடுமைகள் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்திருக்கின்றன. உடலும் மனமும் நொந்துபோன அந்த மாணவி, அதற்கு மேல் தாங்க முடியாது என்ற நிலையில்தான் புகார் அளிக்க முடிவு செய்தார்.

அதிகாரத்துக்கு எதிரான போராட்டம்

தனக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்துப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் 2015-ம் ஆண்டு அந்த மாணவி புகார் அளித்தார். பல்கலைக்கழக நிர்வாகம் அந்தப் புகாரைக் காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்றது. குற்றம்சாட்டப்பட்ட மூவரும் வலுவான பின்புலம் கொண்டவர்கள் என்பதால், அந்த மாணவி தொடர்ந்து மிரட்டப்பட்டுவந்தார். அவரிடம் இருந்த ஆதாரங்களை அழிக்கச் சொல்லி, அவர்கள் அச்சுறுத்திவந்தனர். ஆனால், எதற்குமே அஞ்சாமல் மனஉறுதியோடு நின்றார் அந்த மாணவி.

அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்தவர்களுக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு என்பதே எட்டாக்கனி என்பதற்கு இந்த வழக்கும் விதிவிலக்கல்ல என்றுதான் ஆரம்பத்தில் தோன்றியது. ஆனால், அந்த 20 வயது மாணவி தான் அனுபவித்த கொடுமைகளை விவரித்தபோது வழக்கின் திசை மாறியது. ‘வாட்ஸ் அப்’ தகவல்கள், வழக்கில் முக்கிய ஆதாரமாகச் சேர்க்கப்பட்டன.

பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. முக்கியக் குற்றவாளியான ஹர்திக் சிக்ரிக்கும் அவருடைய நண்பர்களில் ஒருவருக்கும் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் ஹரியாணா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுனிதா குரோவர். இன்னொரு நண்பருக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிபதி சுனிதா குரோவர் தன் தீர்ப்பில் சொல்லியிருக்கும் வார்த்தைகள் முக்கியமானவை.

“வாட்ஸ் அப்பில் அந்த மாணவர்கள் அனுப்பியிருக்கும் செய்திகள் அத்தனையும் ஆபாசம் நிறைந்தவை. அவற்றின் சாரத்தைக்கூடத் தீர்ப்பில் குறிப்பிட முடியாத அளவுக்கு வக்கிரமானவை. அவற்றை வைத்துப் பார்க்கும்போது இந்தப் பெண், அந்த மூவரின் கட்டுப்பாட்டில் சிக்கியிருந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று வேதனையோடு சொல்லியிருக்கிறார் நீதிபதி சுனிதா குரோவர்.

அடுக்கடுக்கான அவதூறுகள்

இந்த வழக்கிலும் அந்த மாணவிக்கு எதிராக அதிகாரத்தின் கொடுங்கரங்கள் நீளவே செய்தன. விசாரணைக்கு வரவில்லை, ஆதாரங்களைக் கொடுக்கவில்லை என்று காவல்துறை சார்பிலேயே அந்த மாணவி மீது புகார்கள் அடுக்கப்பட்டன. குற்றவாளிகள் தரப்பிலிருந்தும் மாணவி மீது சரமாரி குற்றச்சாட்டுகள் வீசப்பட்டன. “அந்தப் பெண் தானாக விருப்பப்பட்டுத்தான் இதுபோலச் செய்தார்” என்று குற்றவாளிகள் தரப்பில் சொல்லப்பட்டது. நீதிபதி சுனிதா குரோவர் அந்த வாதத்தைக் கடுமையாக ஆட்சேபித்தார்.

“தன் அந்தரங்கம் அடங்கிய சாட்சியத்தை வைத்துக்கொண்டு ஒருவர் மிரட்டும்போது, யாராக இருந்தாலும் அடிபணியவே செய்வார்கள். இரண்டு ஆண்டுகளாக அந்த மூவரின் கட்டுப்பாட்டில் இந்தப் பெண் இருந்திருக்கிறார். இதில் இந்தப் பெண்ணைக் குற்றத்துக்குத் துணைபோனவர் என்று சொல்ல முடியாது” என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார் அவர்.

அயராத உறுதி

வழக்கு நடந்துகொண்டிருந்தபோது, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றச் சொல்லி மாணவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, உதய் உமேஷ் லலித் இருவரும் சொன்ன வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை: “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மூவரும் வருங்காலத்தில் வழக்கறிஞராகப் போகிறவர்கள். சட்டத் துறை என்னவாகுமோ?”. தகுதியற்றவர்களும் குற்றப் பின்னணி கொண்டோரும் அதிகாரத்துக்கு வருவதன் பலன் என்னவாக இருக்கும் என்பது நாம் அறிந்ததே.

இந்த வழக்கும் அதன் தீர்ப்பும் நமக்குப் பலவற்றை உணர்த்துகின்றன. இந்தச் சமூகத்தில் எந்த நிலையிலும் பெண்கள் எளிதாக வேட்டையாடப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். எத்தனை நம்பகமானவராக இருந்தாலும், அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்வதில் ஓர் எல்லை அவசியம் என்பதை இந்த வழக்கு உணர்த்துகிறது. அதேநேரம், நம் அந்தரங்கம் கடைவிரிக்கப்படுமோ என்ற பயத்திலேயே அடுத்தடுத்த கொடுமைகளுக்கு ஆளாகத் தேவையில்லை என்ற உறுதியையும் இதே வழக்குதான் தந்திருக்கிறது. இணையவழிக் குற்றங்கள் பல்கிப் பெருகும் இந்த நாளில் பெண்கள் எதற்கும் கவலைப்படாமல், தங்களைத் துன்புறுத்துவோர் குறித்துத் துணிச்சலுடன் புகார் அளிக்கலாம். நாலு பேருக்குப் பயந்து உள்ளுக்குள்ளேயே புழுங்கத் தேவையில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்