சு
தந்திரம் என்பது கேட்டுப்பெறுவதில் இல்லை, நமக்கு நாமே வழங்கிக்கொள்வதில்தான் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் அசாமின் பின்தங்கிய மாவட்டமான சிராங்கிலுள்ள ஒக்ஸிகுரி குக்கிராமத்தைச் சேர்ந்த போடோ பழங்குடிப் பெண்கள். தங்கள் குல சம்பிரதாயங்களை உடைத்து, மற்ற தடைகளைத் தகர்த்து இன்று சொந்தக்காலில் அவர்கள் நிற்பதற்குக் காரணம், மிதிவண்டி!
இருபத்தைந்து வயது நிரம்பிய சோனிட்டா சொர்கோரி, தெளிவான பார்வை கொண்டவர். எப்போதும் உறுதியாக, எதையும் சாதிப்பதற்கு நம்பிக்கையுடன் தயாராக இருக்கிறார். இருக்க மாட்டாரே பின்னே? அந்தக் கிராமத்தில் மிதிவண்டி மிதித்து வறுமைக்கோட்டைத் தாண்டிய முதல் பெண் அல்லவா அவர்!
அறுபட்ட தளைகள்
போடோ நிலப் பிரச்சினைக்காக நடக்கும் போராட்டம் காரணமாக இந்த மாவட்டத்தில் கலகமும் வன்முறையும் இல்லாத நாட்களே இல்லை. மற்றவர்கள் இதைச் சமாளித்து வாழப் போராடிக்கொண்டிருந்தபோது, சோனிட்டா மிதிவண்டியால் தனக்கான பாதையைச் செதுக்கி, தடைகளிலிருந்து தன்னை விடுவிடுவித்துக்கொண்டார். இந்தப் பயணத்தில் தான் மட்டுமல்லாமல், தன்னைப் பின்தொடர்ந்த மற்ற பெண்களையும் விடுவித்திருக்கிறார்.
தன் மாளிகைக் கடையில் இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைத் தினமும் விற்பதன் மூலம், இன்று இவரால் தன் மூன்று குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப முடிகிறது. இதில் இரண்டு பிள்ளைகள் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். எல்லாக் கட்டணத்தையும் சோனிட்டாவே கட்டுகிறார்.
சோனிட்டா தற்போது இருக்கும் நிலை, மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் கனவில்கூடச் சாத்தியப்படாத ஒன்றாகவே இருந்தது. அப்போது அவரிடம் பணம் கிடையாது, நினைத்ததைப் பேசும் திறன் கிடையாது, இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக அவரால் ஓர் இடத்திலிலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல முடியாது.
அவர் மிதிவண்டி ஓட்டப் பழகிய அந்த நாள், தன் வாழ்க்கையையே புரட்டிப்போடும் என்று அவர் அறிந்திருக்கவில்லை. மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவுடன் தன்னுள் ஓர் இனம் தெரியாத புத்துணர்ச்சி பரவியதாகவும், தன் ஒவ்வொரு மிதியிலும் தன் மீது விழுந்திருந்த தடைகள் ஒவ்வொன்றாக நொறுங்குவதுபோல் உணர்ந்ததாகவும் அவர் சொல்கிறார்.
சிறகுகள் விரிந்தன
“இதற்கு முன் வீட்டுத் தேவைகளுக்கு என் கணவரையோ மற்ற ஆண்களையோதான் நம்பி இருக்க வேண்டியிருந்தது. நெடுந்தூரப் பயணம், குறைந்த சாலைகள், பாதுகாப்புப் பிரச்சினைகள் போன்ற காரணங்களால் நான் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதில்லை. எனவேதான் மிதிவண்டி ஓட்டத் தெரிந்த அந்த நாளில் நான் சுதந்திரம் பெற்றதாக உணர்ந்தேன். இந்த சுதந்திரத்தைப் பறிக்க யாரையும் விடமாட்டேன் என்று எனக்குள் அன்றே உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். இந்த சுதந்திரம் றெக்கை கட்டிப் பறக்கவைத்தது.
30CHLRD_CYCLE 3இந்த மிதிவண்டி பல கதவுகளை எனக்குத் திறக்கும் என்று உணர்ந்தேன். என்னால் இனி சுயமாகச் சம்பாதிக்க முடியும் என்றும் நம்பினேன். எங்கள் கிராமத்துச் சந்தையிலேயே மளிகைக்கடை வைக்க முடிவு செய்தேன். மிதிவண்டியில் நானே பொருட்களை எடுத்துச் சென்று அங்கு விற்கத் தொடங்கினேன்.
இது தன்னம்பிக்கை உள்ளவளாகவும் எங்கும் செல்லும் துணிச்சல்மிக்கவளாகவும் என்னை மாற்றியது. இனிமேல் எதுவும் என்னை பின்னுக்குத் தள்ள முடியாது” என்று பூரிப்புடன் சொல்கிறார் சோனிட்டா.
சோனிட்டா வீட்டிலிருந்து கடைக்குச் செல்ல தினமும் 7 கி.மீ. மிதிவண்டி ஓட்டிச் செல்கிறார். இப்போது இவருடன் நிறைய பெண்களும் மிதிவண்டி ஓட்டிச் சென்று சந்தையில் வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இவர்களின் இந்த முயற்சியைப் பார்த்த ஒரு தொண்டு நிறுவனம், ஒக்ஸிகுரி கிராமத்தில் சுமார் 68 உறுப்பினர்களையும் 300 மிதிவண்டிகளையும் கொண்ட ஒரு மிதிவண்டி வங்கியை உருவாக்கியுள்ளது. இது தவிர சுயமாக மிதிவண்டி வாங்க,பெண்களுக்கு இந்த வங்கி மூவாயிரம் ரூபாய் கடனுதவியும் செய்கிறது.
வழிவிடுவோம் பெண்களுக்கு
இந்தக் கிராமத்துப் பெண்களின் தலைவியாகக் கருதப்படும் 40 வயது நிரம்பிய லொய்ஸி பசுமத்தாரி இப்படிச் சொல்கிறார்:
“மிதிவண்டி ஓட்ட ஆரம்பித்த பின், சுயதொழில் செய்யும் பெண்கள் எங்கள் கிராமத்தில் அதிகரித்துவிட்டனர். அது அவர்களுக்கு சுதந்திரத்தை அளித்துள்ளது. இங்கு மிதிவண்டி என்பது குடும்பச் சொத்தாகிவிட்டது. நெடுந்தூரப் பயணத்துக்கு வீட்டிலுள்ள அனைவரும் அதைப் பயன்படுத்துகின்றனர். இருந்தாலும் ஆண்களைவிடப் பெண்களே இங்கு அதை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
முன்பு தொலைவு காரணமாக, பெண்கள் வெளியே செல்லத் தயங்கி வீட்டினுள் முடங்கிக் கிடந்தனர். ஆனால், இந்த மிதிவண்டி அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தை அளித்துள்ளது. ஒருவரைப் பார்த்து மற்றொருவர் ஊக்கமடைந்து, பெரும்பான்மையான பெண்கள் இங்கு சுயதொழில் செய்ய ஆரம்பித்துள்ளனர். மிதிவண்டி எங்கள் கிராமத்தின் வறுமையை விரட்டிவிட்டது”.
இந்த சுதந்திரம் அவர்களுக்குத் தெளிவையும் பொறுப்பையும் ஒருங்கே அளித்துள்ளது. இப்போது அங்கு நடக்கும் வன்முறையை நிறுத்தச் சொல்லியும், பெண்களுக்கென்று பிரத்யேக ரேஷன் கடை வேண்டியும், நல்ல மருத்துவ வசதி வேண்டியும் பேரணியாகச் சென்று அரசிடம் துணிந்து முறையிடும் அளவுக்குப் பெண்கள் வளர்ந்திருக்கிறார்கள். இது போக, இளம் பெண்கள் தங்கள் குல சம்பிரதாயங்களை உடைத்து, ஆண்கள் மட்டும் வாசிக்கும் பிஜுலீ, டெய்சி போன்ற இசைக்கருவிகளைக் கச்சேரிகளில் இசைக்கின்றனர்.
ஆலமரத்தின் விதை அளவில் சிறியதாக இருந்தாலும் வளர்ந்த பின் பலருக்கு நிழல் தருவதுபோல், சோனிட்டா என்ற இளம்பெண் மிதிவண்டி மூலம் ஏற்படுத்திய திருப்புமுனை, அவரது வாழ்க்கையில் மட்டுமல்ல; அந்தக் கிராமம் முழுவதிலுமே புதிய மறுமலர்ச்சியைப் பரப்பிவிட்டது. சோனிட்டா மாதிரி நம் வீட்டிலும் ஒரு பெண் இருக்கக்கூடும். அவள் பறப்பதற்குச் சிறகுகள் தரத் தேவையில்லை, பறக்கும்போது கொஞ்சம் ஒதுங்கி வழிவிட்டாலே போதும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago