பெண்ணும் ஆணும் ஒண்ணு 14: வளர்ச்சிக்குத் தடை போடும் திருமணங்கள்

By ஓவியா

இந்தியாவில் 15-க்கும் குறைவான வயதில் திருமணம் செய்து கொடுக்கப்படும் குழந்தைளின் சதவீதம் 18. அத்துடன் 18-க்கும் குறைவான வயதில் திருமணம் செய்து கொடுக்கப்படும் குழந்தைகளின் சதவீதம் 47. இந்தத் தகவலைப் யுனிசெஃப் நிறுவன இணையதளம் பகிர்ந்துகொள்கிறது. வட இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே இந்த விகிதத்தில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், தமிழகத்திலும் இந்நிலை இன்றும் தொடர்கிறது. குறிப்பாகச் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த மலைக் கிராமங்களில் இந்நிலை மிக அதிகமாக இருக்கிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தமிழகத்தில் பெண்கள் 62,500 பேர் 15 வயதுக்குள்ளாக மணமுடித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எதிர்காலத்துக்கு முடிவுரை

சென்னையிலேயே கிட்டத்தட்ட 5,480 பேர் இவ்வாறு மணமுடித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக இரண்டு சதவீதப் பெண்கள், இன்னும் 18 வயதுக்குள்ளாக மணவாழ்க்கைக்குள் அனுப்பப்படுகின்றனர். இந்நிலை பணக்காரர்களிடம் குறைவாகவும் ஏழைகளிடம் அதிகமாகவும் காணப்படுகிறது. அதேபோல் நகரங்களில் குறைவாகவும் கிராமங்களில் அதிகமாகவும் காணப்படுகிறது. இந்துக்கள், இஸ்லாமியர்களிடையே அதிகம் காணப்படுகிறது. கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்களிடையே குறைவாகக் காணப்படுகிறது.

அனைத்துக்கும் தடை

திருமணம் என்பது வாழ்வின் தொடக்கம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஒரு பெண்ணின் மனவளர்ச்சி முதிர்ச்சியடையாத காலகட்டத்தில், தன் வாழ்க்கையைப் பற்றி எந்த முடிவும் எடுக்க முடியாத காலகட்டத்தில் நடத்தப்படும் திருமணங்கள் அவளின் எதிர்காலம் பற்றிய சுதந்திரமான தேர்வுக்கும் சிந்தனைகளுக்கும் எழுதப்படும் முடிவுரையாகவே அமைகின்றன.

இன்றைய சமுதாயம் பெண்ணுக்கு வழங்கியிருக்கும் கல்வி, பொருளாதார உரிமைகளை இத்திருமணங்கள் இயல்பாகவே மறுக்கின்றன. அது மட்டுமல்ல இத்துறையில் களப்பணியாற்றுபவர்கள், இது போன்று சிறு வயதில் திருமணம் செய்துகொடுக்கப்படும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிற சம்பவங்கள் அதிகமாக இருக்கின்றன என்கிறார்கள். இந்தத் துன்பத்தின் தொடர்ச்சியாக இளவயது கர்ப்பம் அமைகிறது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சிறுவர் திருமணத்தைத் தடுப்பது குறித்து இப்படிச் சொல்கிறது:

“குழந்தைத் திருமணம் என்பது நம்முடைய ஒவ்வொரு வளர்ச்சி இலக்குக்கும் தடையாக இருக்கிறது. வறுமை, பசிப்பிணியைப் போக்குவது, கல்வி ஆகிய வகைகளில் நமது இலக்குகளை எட்டுவது, பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துவது, குழந்தைகளின் உயிரைப் பாதுகாப்பது, பெண்களின் உடல்நலனைப் பேணுவது இப்படி அனைத்து இலக்குகளுக்கும் குழந்தைத் திருமணம் தடையாக இருக்கிறது.”

வளர்ப்பு எனும் சுமை

ஒரு குழந்தைக்கு ஆரோக்கியம், சத்தான உணவு, கல்வி இவை அனைத்துக்குமான அடிப்படை உரிமையைக் குழந்தைத் திருமணங்கள் தடைசெய்கின்றன. சிறுவயதுத் திருமணங்களில் அந்தப் பெண்கள் அதிகமான பாலியல் வன்முறைகளுக்கும் சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள் என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன. பெண்களுக்கு மட்டுமல்ல பையன்களுக்குமே அவர்களின் கல்வி, தனிமனித வளர்ச்சியைத் தடை செய்யும் உடலியல் மற்றும் உளவியல்ரீதியான உணர்ச்சிகரமான தாக்கங்களைக் கொண்டிருக்கின்றன.

1930-ல் சாரதா சட்டம் வருவதற்கு முன்பாகக் குழந்தைத் திருமணங்களே சமுதாயத்தின் விதியாக இருந்தன. இன்று சட்டத்தின் விதிமீறலாக நடந்துகொண்டிருக்கிறது. பெண் பருவமடைந்த பிறகு பெண்ணைப் பாதுகாப்பது பெரிய பிரச்சினையாகச் சாதாரண மக்கள் நினைக்கிறார்கள். கூடிய சீக்கிரம் தங்கள் கையிலிருந்து அந்தப் பொறுப்பு அகன்றுவிட வேண்டும் என்கின்ற சிந்தனையே, அவர்களைத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று நினைக்கத் தூண்டுகிறது. சில இடங்களில் மூத்தோர்களுக்கு அவர்கள் காலத்துக்குள் வாரிசு வேண்டும் என்பதற்காக, சில இடங்களில் உறவுக்கார மாப்பிள்ளைக்கு வயதாகிவிடக் கூடாது என்பதற்காக இந்தப் பெண்ணுக்கு உரிய வயது வரும் முன் திருமணம் செய்துவிட முற்படுகிறார்கள்.

பெண்களை வீட்டில் சும்மா வைத்திருக்க முடியாது, அவர்களை மேற்படிப்பு படிக்கவைத்தால் அதற்கேற்ப மாப்பிள்ளை, கூடுதல் செலவு, வரதட்சிணை இப்படிக் கூடும் பொறுப்புகள் பற்றிய பயமும் இதுபோன்ற முடிவுகளை நோக்கித் தள்ளுகின்றன. சில மலைக் கிராமங்களில் அல்லது உள்கிராமங்களில் எட்டாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடங்கள் இல்லை. 30 அல்லது 40 கிலோ மீட்டர் தாண்டி இருக்கும் பள்ளிகளுக்குப் பெண் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அஞ்சுகிறார்கள். இந்த நிலையிலும் குழந்தைத் திருமணங்கள் விரைவுபடுத்தப்படுகின்றன.

சட்டம் செயல்படுகிறதா?

சரி. சட்டம் என்ன செய்கிறது? இன்று குழந்தைத் திருமணம் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். எனவே, காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் இவ்வாறு நடைபெறவிருந்த குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்டதாக செய்தி படிக்கிறோம். ஆனால், உண்மையில் அந்தத் திருமணங்கள் சில தினங்களில் வேறு இடங்களில் நடந்தேறிவிடுகின்றன என்று சொல்லப்படு கிறது. காவல் துறையினரும் தங்கள் ஆழ்மன உளவியலில் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்வதற்குப் பெற்றோருக்கு இருக்கும் உரிமையை மதிக்கிறார்கள். எனவே, ‘நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு’ என்ற அளவிலேயே இந்த நடவடிக்கைகள் அமைகின்றன. கள்ளச்சாராயம் காய்ச்சுவது குற்றம் என்று கருதப்படுவதுபோல் குழந்தைத் திருமணத்தைக் குற்றம் என்று சமுதாயம் கருதும்போதுதான், அந்தச் சட்ட நடவடிக்கைகளில் தீவிரம் வரும். ஓரிரு இடங்களில் காவல்துறை கறாராகச் செயல்பட்டுப் பெற்றோர் கைதுசெய்யப்படும் கிராமங்களில் அந்தப் பழக்கம் அடியோடு நின்றுபோகிறது என்று சொல்லப்படுகிறது.

திருமண முரண்பாடு

மேலும், இந்த இடத்தில் நமது சமுதாயத்தில் நடக்கிற சில சுவாரசிய முரண்களைப் பற்றிக் கண்டிப்பாகப் பேசியாக வேண்டும். காதல் திருமணங்களை எதிர்க்கிறவர்கள் அந்தக் காதல் திருமணங்களில் மட்டும் பிள்ளைகளின் வயதை ஆதாரமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதே மனிதர்கள் அதே வயதில் அல்லது அதைவிடக் குறைந்த வயதில் பெற்றோர்களால் நடத்தப்படும் திருமணங்களைப் பற்றிப் பேசுவதில்லை.

இதனுடைய இன்னொரு பக்கமாகக் காதலின் ஆதரவாளர்கள் அல்லது சாதி மறுப்புத் திருமணத்தின் ஆதரவாளர்கள் குழந்தைகள் காதலித்தாலும் அவர்களின் திருமணத்தை முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்போம் என்கிறார்கள். இந்த இருதரப்பாரின் கண்களுக்குமே சட்டபூர்வமாக வயது வராத ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் திருமணம் சட்ட விரோதம் மட்டுமல்ல; அது சமூகக் குற்றம், பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி என்ற புரிதல் உளவியலாகப் பதிவாவதில்லை. குழந்தைகளின் திருமணம் தவறென்றால் குழந்தைகளின் காதல் திருமணத்தில் முடிவது மட்டும் எப்படிச் சரியாக இருக்கும்?

இதற்கு வெளிப்படையான உதாரணத்தை ஒரு திரைப்படம் மூலம் பார்ப்போம். அந்தப் படத்தில் ஒரு கதாநாயகன் ஒரு பெண்ணின் திருமணத்தை அந்தப் பெண்ணுக்குச் சட்டப்படியான வயது பூர்த்தியாகவில்லை என்பதைக் காட்டி நிறுத்திவிடுவார். அதன்பின் அதே வயது வராத அந்தப் பெண்ணை இவர் காதலிப்பார். திருமணமும் செய்துகொள்வார். இதிலிருக்கும் முரண் ஒரு விமர்சனமாக வைக்கப்படவேயில்லை. வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்களில் அதுவும் ஒன்று.ஏனெனில், எந்த அளவுக்கு இந்தச் சமுதாயத்தில் காதல் தண்டனைக்குரியதாகப் பார்க்கப்படுகிறதோ, அதே அளவுக்கு புனிதமாகவும் போற்றப்படுகிறது. நாமும்கூடக் காதலின் கட்சிதான். எல்லாக் காதல்களும் ஆதரிக்கப்பட வேண்டியவையே. ஆனால், எல்லாக் கல்யாணங்களும் அல்ல!

(இன்னும் தெளிவோம்)

கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்

தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்