கணிதத் துறையின் உச்சமாகவும் கணிதத்தின் நோபல் பரிசாகவும் கருத்தப்பபடும் ‘ஃபீல்ட்ஸ் மெடல்’ வென்ற ஒரே பெண் என்ற சிறப்பைப் பெற்ற மரியம் மிர்ஸாகானி இன்று இல்லை. கணிதத் துறையில் நாற்பது வயதுக்குள் அவர் படைத்த சாதனைகள், எதிர்காலச் சந்ததியினருக்கு என்றென்றும் வழிகாட்டிக்கொண்டிருக்கும்! அத்துடன், மறைந்த பிறகும் சமூக மாற்றத்துக்கு தன் பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறார் மரியம்.
யார் இந்த மரியம்?
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றிவந்த மரியம், ஈரானில் பிறந்து வளர்ந்தவர். பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் மரியமின் பெற்றோர் தங்கள் ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் வேறுபாடு காட்டாமல் வளர்த்தார்கள். வாழ்க்கையில் திருப்தி அளிக்கும் வேலைகளைச் செய்ய வேண்டுமே தவிர, வெற்றிகளையும் சாதனைகளையும் துரத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் மரியமிடம் சொல்லிவந்தார்கள்.
பள்ளி நாட்களில் மரியத்துக்குக் கணிதத்தின் மீது ஈடுபாடில்லை. புத்தகங்கள் படிப்பதில்தான் ஆர்வம். அவர் படித்த பள்ளி ஆசிரியர்களும் முதல்வரும் ஆண்கள் பள்ளியில் கிடைக்கும் அத்தனை விஷயங்களையும் பெண்கள் பள்ளியிலும் வழங்கினார்கள். அதனால் பள்ளிக்கு அருகே இருந்த புத்தகச் சந்தையில் கைநிறையப் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்துவிடுவார் மரியம். ஒருகட்டத்தில் எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் வந்தது. எதிர்காலத்தில் தான் ஓர் எழுத்தாளராக ஆகப் போகிறோம் என்றே நம்பினார்.
திருப்புமுனை
பள்ளி இறுதி வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பத்திரிகையில் வந்த கணிதப் புதிருக்கு விடை கண்டுபிடிக்கும்படி மரியமின் அண்ணன் கேட்டுக்கொண்டார். விடைகாண முனைந்தபோது எண்கள் அவரை சுவாரசியப்படுத்தின. கணிதத்தின் மீது முழுமையான ஈடுபாடு பிறந்தது. கணித ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். ஒவ்வொரு போட்டியும் கடினமாகவும் சவால்கள் நிறைந்ததாகவும் அமைந்தன. அந்தச் சவால்களை வெகுவாக ரசித்தார் மரியம். 1994, 95-ம் ஆண்டுகளில் ஹாங்காங், டொரண்டோ சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார்! இந்தப் போட்டிகளில் மரியத்தைத் தவிர, வேறு எந்தப் பெண்ணும் பங்கேற்கவில்லை.
அறிவைத் தேடி
கல்லூரியில் இளங்கலை கணிதம் பயின்றபோது அங்கிருந்த கணிதவியலாளர்களால் வெகுவாக ஈர்க்கப்பட்டார். அவர்களின் தாக்கத்தாலும் ஊக்கத்தாலும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில்வதற்காக அமெரிக்கா சென்றார்.
அங்கே அவரது அறிவுத்தளம் பல மடங்கு விரிவடைந்தது. பாலின பேதத்தைக் களைந்து மனிதர் என்ற ஒற்றை அடையாளம் மட்டும் போதும் என்ற முடிவுக்கு வந்தார். புர்காவைத் துறந்தார். கூந்தலை வெட்டிக்கொண்டார். ஆபரணங்களைப் புறக்கணித்தார். பேன்ட், சட்டையில் எளிமையாக வலம்வந்தார்.
முனைவர் பட்டம் பெற்ற பிறகு, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார். படிக்கும் காலத்தில் நண்பராக இருந்த செக்கோஸ்லாவாகியாவைச் சேர்ந்த ஜான் வோண்ட்ராக்கைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அனாஹிதா என்ற மகளும் பிறந்தாள்.
மற்றவர்களைப் போல் அல்லாமல் ஆராய்ச்சி, பேராசிரியர் பணி, வீடு, மகள் என்று எல்லாவற்றையும் சமாளித்து, மரியம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். பெரிய தாள்களைத் தரையில் விரித்து, வண்ணப் பேனாக்களால் எண்களையும் படங்களையும் வரைந்துகொண்டிருக்கும் தன் அம்மாவை ஓர் ஓவியர் என்றே நம்பினார் அனாஹிதா!
பெரிய படிப்பு, பெரிய வேலை, விருதுகள் ஆகியவற்றை தன் அடையாளமாக மரியம் நினைக்கவில்லை. ஓர் எளிய மனிதராகவும் பண்பானவராகவுமே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். அதேநேரம் தன் வேலைகளில் நிதானமாகவும் உறுதியாகவும் இருந்தார்.
“படிக்கும் காலத்தில் நானும் மரியமும் ஒரே நேரத்தில் வேலையை ஆரம்பிப்போம். நான் அரை மணி நேரத்தில் முடித்துவிடுவேன். மரியம் ஆரம்பித்த இடத்திலேயே இருப்பார். ஆனால், அவரிடமிருந்துதான் ஆய்வில் நிதானம் எவ்வளவு முக்கியம் என்பதைக் கற்றுக்கொண்டேன். நிதானம் ஒருபோதும் நம்மை வீழ்த்திவிடாது என்பதைப் புரிந்துகொண்டேன்” என்கிறார் மரியத்தின் கணவர்.
உயரிய விருது
2014-ம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சைக்காக மரியம் புறப்பட்டுக்கொண்டிருந்தபோதுதான், ஃபீல்ட்ஸ் மெடல் அறிவிப்பு வந்தது. எளிதாகக் குணப்படுத்தக்கூடிய மார்பகப் புற்றுநோய் என்பதால் மரியமும் அவரைச் சார்ந்தவர்களும் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையோடு இருந்தார்கள். குடும்பத்துடன் சென்று விருதைப் பெற்றுக்கொண்டார் மரியம்.
“கணிதத்திலும் அறிவியலிலும் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. ஆனாலும் நான் சிறுமியாக இருந்த காலகட்டத்தைவிட இன்று குடும்பம், சமூகம் போன்ற சாதகமற்ற சூழ்நிலைகளைத் தாண்டி கணிசமான அளவில் பெண்கள் இந்தத் துறைகளுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இந்தத் துறைகளில் இருப்பவர்களுக்குப் பொறுமை மிகவும் அவசியம். பல நூறு முறை முயன்றால்தான் ஒரு வெற்றி கிடைக்கும். எளிதில் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. இந்த விருதின் மூலம் பெண்கள் கணிதத் துறைக்குள் நம்பிக்கையுடன் வருவார்கள் என்ற விதத்தில், இதை நான் உயர்வாகக் கருதுகிறேன்” என்றார் மரியம்.
மரியமும் ஈரானும்
உலகம் முழுவதும் ஃபீல்ட்ஸ் மெடல் வென்ற மரியத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்க, அவரது தாய்நாடு ஈரான் செய்வதறியாது திகைத்தது. மதக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காத மரியத்தைப் பாராட்டினால், ஈரானியப் பெண்களுக்குத் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று அந்நாடு நினைத்தது. அதேநேரம் பாராட்டாவிட்டால் இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையாகிவிடும் என்றும் பயந்தது. வேறுவழியின்றி மரியத்தின் பழைய படத்தையும் புதிய படத்தையும் வெளியிட்டு ஈரானிய பிரதமர் தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்தார்.
ஈரானில் மதக் கட்டுப்பாடுகளை மீறிய பெண்கள் நடத்தப்பட்ட விதம், அங்கிருந்து வெளியேறிய பெண்களை மீண்டும் நாட்டுக்குள் நுழையும் தைரியத்தைக் கொடுப்பதில்லை. மரியத்தின் கணவர் வேற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர் மதம் மாறவில்லை என்பதாலும் அவரும் குழந்தையும் ஈரானுக்குள் நுழைய அனுமதி இல்லை. இப்படிப் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளால் அறிவுத் துறையில் சாதிக்கும் பெண்கள், தங்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்கள்.
சமூக மாற்றம்
நான்கு ஆண்டுகள் வெகு இயல்பாகவும் நம்பிக்கையுடனும் புற்றுநோயை எதிர்கொண்ட மரியம், தன் இறுதிமூச்சுவரை கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஆனால் புற்றுநோய் வென்றது, மரியம் மறைந்த துயரச் செய்தி அறிவு உலகத்தை உலுக்கியது.
இந்த முறை ஈரான் பிரதமர் மரியத்தின் தற்போதைய படத்தை வெளியிட்டு, அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்துக்கொண்டார். பெரும்பாலான ஈரான் பத்திரிகைகளும் புர்கா இல்லாத மரியத்தின் படத்தையும் கட்டுரையையும் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தன. ஈரான் நாடாளுமன்றத்தில் ஈரானியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டினருக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் ஈரானிய குடியுரிமை வழங்க வேண்டும் என்ற சட்டம் இயற்றுவதற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
இப்படி கணிதவியலாளராக மட்டுமின்றி, சமூகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறார் மரியம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago