அ
திகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவது அவரது வழக்கம். வாசல் தெளித்துக் கோலமிட்டு, சமையலைத் தொடங்குவார். உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளை எழுப்பிப் பள்ளிக்குத் தயார்செய்து, எட்டரை மணிக்கெல்லாம் தானும் தயாராகி பஞ்சாயத்து அலுவலகம் வந்துசேர்வார். அன்றும் அப்படித் தன் வீட்டு வேலைகளை முடித்து அலுவலகம் வந்த தாழையூத்து பஞ்சாயத்துத் தலைவி கிருஷ்ணவேணி, அங்கே காத்திருந்த பெண்களோடு கலெக்டரைச் சந்திக்கப் புறப்பட்டார்.
திங்கள்கிழமை மனுநீதி நாள் என்பதால் மக்களோடு நீண்ட வரிசையில் காத்திருந்து கலெக்டரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்து, பெண்களுக்குத் தனி சுகாதார வளாகத்தின் தேவை குறித்துப் பேசினார்.
இந்தப் பணிகளை முடித்து அலுவலகம் வந்தபோது பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆகியிருந்தது. களைப்பாகவும் சோர்வாகவும் இருந்தது. ஆனால், அலுவலகம் அவரது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தது. அலுவலகப் பணி இரவு ஏழு மணிவரை நீடித்தது.
பட்டா கேட்டுக்கொண்டிருந்த மக்களை அழைத்துக்கொண்டு, குடிசைகளை நேரடியாக ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்றார்.
மணி இரவு ஒன்பதைத் தாண்டியிருந்தது. தனியாக நடந்து செல்ல வேண்டாம் எனச் சொன்ன அந்த மக்கள், தங்கள் தலைவிக்காக ஆட்டோ பிடித்துக் கொடுத்து, நன்றி சொல்லி அனுப்பிவைத்தார்கள். கருப்புசாமி கோயிலை ஆட்டோ நெருங்கிக்கொண்டிருந்தது.
வன்மம் ஆட்டோவைப் பின்தொடர்ந்தது. ஆனால், அதை கிருஷ்ணவேணி அறிந்திருக்கவில்லை. திடீரென விசில் ஒலியும் வெறிக் கூச்சலுமாகப் பத்துப் பதினைந்து பேர் ஓடிவருகிற சத்தம் கேட்டது.
காத்திருந்த அபாயம்
சாதிக் கலவரமோ என நினைத்தபடி முன்னால் இருந்த ரோட்டைப் பார்த்தார். தெருவிளக்குகள் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்து கிடந்தது. அப்போதுதான் அவரது மனத்தில் குழப்பமும் மெல்லிய அச்சமும் எழுந்தது. என்ன ஏது என நிதானிப்பதற்குள் அவரது ஆட்டோ சுற்றிவளைக்கப்பட்டுவிட்டது.
கெட்ட வார்த்தைகளோடு கிருஷ்ணவேணியை நோக்கி வீச்சரிவாள் பாய்ந்து வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தின் ஒரு பகுதியில் விழுந்த முதல்வெட்டில் காது துண்டிக்கப்பட்டு கம்மலோடு மடியில் விழுந்தது. வெட்டுகளைத் தடுக்க முற்பட்டபோது விரல்கள் துண்டாயின.
தாக்குதலின் உச்சகட்டமாக அவரது கழுத்தின் பின்புறம் இறங்கியது அந்த வீச்சரிவாள். அதைப் பார்த்துப் பயந்துபோன ஆட்டோக்காரர் அலறியடித்துக்கொண்டு ஓடினார். உடலில் 17 இடங்களில் வெட்டுப்பட்ட கிருஷ்ணவேணி, அந்தக் கொலையாளிகளை எதிர்த்துப் போராடியவாறே ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.
அந்தக் கும்பலில் இருந்த ஒருவன் கிரிக்கெட் மட்டையால் கிருஷ்ணவேணியின் முட்டிக்காலிலும் தலையிலும் ஓங்கி ஓங்கி அடித்தான். முழங்கால்களின் முட்டிப் பகுதி உடைபட்டுக்கொண்டேவர உயிர்போகும் வலியில் துடித்த கிருஷ்ணவேணி, இறுதியாக சுயநினைவை இழந்தார்.
மீண்டெழுந்த தலைவி
கிருஷ்ணவேணி என்ற பெண்ணின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தூய்மையான சேவை, மருத்துவ சிகிச்சை, மக்களின் வேண்டுதல் ஆகிய அனைத்தும் சேர்ந்தே அவரைக் காப்பாற்றின!
நெல்லை மாவட்டம் தாழையூத்து பஞ்சாயத்துத் தலைவி கிருஷ்ணவேணிக்குச் சொந்த ஊர் நாகர்கோவில் அருகில் இருக்கும் கிருஷ்ணன்கோவில். தாயார் நகராட்சித் துப்புரவுத் தொழிலாளி. காலை ஐந்து மணிக்கு வேலைக்குச் சென்றால் மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்குத் திரும்புவார். மீண்டும் இரண்டு மணிக்குக் கிளம்பிவிடுவார்.
அக்கம் பக்கத்துத் தெருக்களில் மற்ற சாதியினர் தண்ணீர் பிடித்த பிறகே, இவர்கள் பிடிக்க முடியும். பள்ளியில் சத்துணவின் முதல் வரிசையில் நின்று உணவைப் பெற்றுவிட்டார் என்பதற்காக சக மாணவர்களால் பிடித்துத் தள்ளிவிடப்பட்ட மனக்காயமும் ஆறாத வடுவாக அவருக்கு இருந்தது.
ஒன்பதாம் வகுப்புவரைதான் கிருஷ்ணவேணிக்கு கல்வி கிடைத்தது. வறுமை அவரது படிப்பை நிறுத்திவிட்டது. 15 வயதிலேயே தாய்மாமனுக்கு மனைவியாகி, 21 வயதுக்குள் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்து அன்னையுமாகிவிட்டார்!
மக்கள் சேவை
திருமணமாகி நெல்லைக்கு வந்த காலத்திலிருந்து தெருவிளக்கு எரியவில்லை என்றாலும் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாலும் கிருஷ்ணவேணிதான் பஞ்சாயத்து அலுவலகம் சென்று நியாயம் கேட்பார். சண்டை போட்டுப் போராடி நீதி பெற்றுத் தருவார். இத்தனைக்கும் அவர் எந்த அமைப்பையும் சார்ந்திருக்கவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இவர் ஆற்றிய பணிகள்தான் இவரைப் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும்படி, அந்த மக்களை விரும்பிக் கேட்க வைத்தன.
தாழையூத்துப் பஞ்சாயத்து, தலித் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அந்த மக்கள் கிருஷ்ணவேணியைத் தேர்தலில் நிற்கச் சொன்னார்கள். கணவருக்குப் பயந்து முதலில் மறுத்தார். பிறகு கணவரே கேட்டபோதும் மறுத்தார். ஆனால், அவருக்குள் அது குறித்த கனவுகளும் ஆசைகளும் நிறைய இருந்தன.
கால்கடுக்கத் தண்ணீருக்காக ஏங்கி நிற்கும் எம் மக்களுக்கு தண்ணீர் தர முடியுமா? இருட்டில் மூழ்கிக் கிடக்கும் எம்மக்கள் வாழும் தெருவுக்கு வெளிச்சம் தரமுடியுமா? இருட்டும்வரை காத்திருந்து இயற்கை உபாதையைத் திறந்தவெளியில் கழிக்கும் எம் பெண்களின் நிலையை மாற்ற முடியுமா? மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் போட்டியிட்டார்.
எதிர்த்துப் போட்டியிட்ட பத்துப் பேரையும் தோற்கடித்தார் கிருஷ்ணவேணி. அடித்தட்டு அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண் முதன்முறையாகப் பஞ்சாயத்துத் தலைவி என்ற பதவியைப் போராடிப் பெற்றார்! இது சரித்திர சாதனைதான்!
ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்
ஆனால், வந்த சோதனைகளோ வன்மத்தோடு இருந்தன. அலுவலகம் வரக் கூடாது, நாற்காலியில் உட்காரக் கூடாது, வீட்டிலேயே இருந்து பிள்ளைகுட்டிகளைப் பாரு, காட்டுகிற இடத்தில் கையெழுத்துப் போடு என்பது போன்ற உத்தரவுகளைத் துணைத் தலைவர் கட்டளையாகவே பிறப்பித்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் சாதி, மதம் மட்டுமல்ல சகலமும் கைகோத்திருந்தன.
கலெக்டர், காவல்துறை, அமைச்சர் என எல்லோரிடமும் கிருஷ்ணவேணி புகார் செய்தார். அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்காக கிருஷ்ணவேணியும் அஞ்சி ஒடுங்கிவிடவில்லை.
இந்தத் தடைகளை மீறித்தான் குடிநீர், சாலை, சாக்கடை வசதி, தெருவிளக்கு, பட்டா எனப் பல பணிகளையும் மக்களுக்குச் செய்து கொடுத்தார்.
பஞ்சாயத்துப் பதவிக் காலம் முடிவடைய ஆறு மாதம் இருந்தது. அப்போதுதான் மேலதாழையூத்தில் கழிப்பறை கட்டுவதற்கான பணியைத் தொடங்கியிருந்தார்.
ஆக்கிரமிப்பிலிருந்த அரசு புறம்போக்கு இடங்களைக் கண்டறிந்து அதிகாரிகளின் துணையோடு மீட்டெடுத்தார். இந்த நடவடிக்கைகளை விரும்பாத எதிரிகள், அவர் மீது கொடூரத் தாக்குதலை நடத்தினர்.
ஒப்பற்ற உதாரணம்
ஈவிரக்கமற்ற அந்தத் தாக்குதலுக்குப் பின், அவர் எழுந்து நடமாட முடியாத நிலை உருவானது. சிதறிக் கிடந்த விரல் உறுப்புகள் ஒட்டவைக்கப்பட்டாலும், செயல்படுத்த முடியவில்லை. ஆட்டோவில் தேடி கண்டெடுக்கப்பட்ட காது செயலற்றுப் போயிருந்ததால், மீண்டும் பொருத்த முடியவில்லை. பிறர் உதவியின்றி ஆடைகூட அணிய முடியாது என்ற நிலையில்தான், தற்போதும் வாழ்ந்துவருகிறார்.
மேலதாழையூத்துப் பெண்களுக்குக் கழிப்பறை கேட்டு கடைசியாக கலெக்டரைப் பார்த்தார். அன்று இரவுதான் கடுமையாகத் தாக்கப்பட்டு நூலிழையில் உயிர் தப்பினார். ஆனால், பதவி முடிந்து ஏழாண்டுகள் ஆகியும் அங்கே கழிப்பறை கட்டப்படவில்லை. “இன்னமும் எம் ஊர்ப் பெண்கள் இருட்டும்வரை காத்திருந்துதான் இயற்கை உபாதையைக் கழிக்கிறார்கள். இத்தனை தாக்குதல்களையும் எதற்காகத் தாங்கி நின்றேனோ, அதன் நோக்கம் ஈடேறவில்லை. அதுதான் எனக்கு மிகப் பெரிய வருத்தத்தைத் தருகிறது” என்கிறார்.
உண்மை, நேர்மை, துணிச்சல் நிறைந்த தமிழகத்தின் தலைசிறந்த பெண் அரசியல் தலைவர் பெயரென்ன என்று கேட்டால் எதிர்கால வரலாறு நிச்சயமாக ‘கிருஷ்ணவேணி’ என்றும் சொல்லும்.
(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago