உலகெங்கும் உள்ள பூர்வகுடி மக்களுக்கிடையே ஒரு ஒற்றுமை உண்டு. நிலம், நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பெண்ணுக்கு நிகராக வைத்து வழிபடும் பண்புதான் அது. பூர்வகுடி இனங்கள் பலவும் தாய்வழிச் சமூகமாகவே இருந்திருக்கின்றன, இருந்துவருகின்றன. அந்த இனங்களில் பெண்களை எப்படிப் பாதுகாக்கிறார்களோ, அதேபோல இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் அவர்கள் தவறுவதில்லை.
இயற்கையைக் காப்பாற்றும் அந்தப் போராட்டத்தில் பெரும்பாலும் முன்னிலை வகிப்பவர்கள் பெண்கள்தான். அவர்கள் வாழும்போதும் இறந்த பின்னரும் வரும் காலத்துக்கான வழிகாட்டியாக ஒளிவீசுகிறார்கள். அப்படியொரு பெண்தான் பெர்த்தா காசிரீரெஸ். வாழும்போது அவருக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம், ‘பசுமை நோபல்’ என்று சொல்லப்படும் ‘கோல்ட்மேன் என்விரான்மெண்டல் பிரைஸ்’ விருது. அவர் கொலை செய்யப்பட்டது, அவர் சந்தித்த உச்சபட்ச எதிர்ப்பு.
தாயிடமிருந்து பெற்ற தீரம்
1972-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி, மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோண்டுட்யூர நாட்டில் லா எஸ்பெரென்ஸா எனும் இடத்தில் பிறந்தார். அவர் பிறந்த காலத்தில், ஹோண்டுட்யூர மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் அண்டை நாடான எல் சல்வடரில் வன்முறை பரவியிருந்தது. அதனாலோ என்னவோ பெர்த்தாவின் வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருந்தது.
பெர்த்தாவின் தாய் பெர்த்தா ஃப்ளோர்ஸ், உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். அதோடு, அண்டை நாடுகளிலிருந்து தங்கள் நாட்டுக்குள் வரும் அகதிகளின் நலன்களுக்காகப் போராடும் சமூகச் செயல்பாட்டாளராகவும் அவர் இருந்தார். அந்த வேளையில் அவர்பட்ட இன்னல்களும் பிறர் நலனைக் காப்பதில் அவர் கொண்டிருந்த உறுதியும் பெர்த்தாவை ஈர்த்தன. எனவே பெர்த்தாவும் சமூகத்தின் மீது அக்கறைகொண்ட பெண்ணாக வளர்ந்தார். கல்வியியல் துறையில் பட்டம் பெற்ற அவர், ஆசிரியர் பணிக்கான தேர்ச்சியுடன் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினார்.
1993-ம் ஆண்டு தன் நண்பர்களுடன் இணைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடந்த பூர்வகுடி அமைப்புகளை ஒன்று திரட்டி, ‘கோபின்’ எனும் அமைப்பை நிறுவினார். மாணவப் பருவத்திலேயே அவர் பல போராட்டங்களை முன்னெடுத்தார். சட்டத்துக்குப் புறம்பாக மரங்களை வெட்டுதல், ஹோண்ட்யூரஸில் உள்ள லென்கா பூர்வகுடி மக்களுக்குச் சொந்தமான நிலங்களை அமெரிக்க ராணுவம் ஆக்கிரமித்தல் போன்றவற்றுக்கு எதிராகப் போராடினார். பெர்த்தாவும் லென்கா பூர்வகுடியைச் சேர்ந்தவர் என்பதால், தன்னைப் போன்ற இதர பூர்வகுடி இன மக்களின் நலனுக்காகப் போராடுவதையே தன்னுடைய முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.
அணைக்கு எதிராக அறப்போர்
பெர்த்தாவின் வாழ்வில் முக்கியத் திருப்புமுனை 2006-ம் ஆண்டில் ஏற்பட்டது. ஒரு நாள் ரியோ ப்ளான்கோ பகுதியிலிருந்து லென்கா பூர்வகுடி மக்களில் சிலர், பெர்த்தாவிடம் வந்து தங்கள் பகுதியில் புதிதாகக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன எனவும், அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் பெர்த்தாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்றுக்கொண்ட பெர்த்தா, தன் விசாரணையைத் தொடங்கினார். குவால்கர்க் நதியில் நான்கு அணைகள் கட்டத் திட்டமிடப்பட்டிருப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. மின்சார உற்பத்திக்காக அந்த அணைகள் கட்டப்படுகின்றன எனவும், அந்தத் திட்டம் சீன நிறுவனமான சினோஹைட்ரோ, உலக வங்கியின் சர்வதேச நிதிக் கழகம் மற்றும் ஹோண்ட்யூரஸைச் சேர்ந்த தெசரால்லோ எனர்ஜெடிகோ எஸ்.ஏ. (சுருக்கமாக தெசா) ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாக உருவாகிறது என்பதும் தெரிய வந்தது.
அந்த அணைகள் கட்டப்பட்டால் லென்கா பூர்வகுடி மக்களின் மொத்த வாழ்வாதாரமும் அழிந்துவிடும் அபாயம் இருந்தது. மேலும், அணை கட்டுவதற்கு முன்பு பின்பற்றப்பட வேண்டிய மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் உள்ளிட்ட பல சர்வதேச சட்டங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை. எனவே, தங்களின் எதிர்ப்பை முன் வைத்து, லென்கா பூர்வகுடி மக்கள் அறவழியில் போராட்டம் நடத்திவந்தனர்.
இந்நிலையில், 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது, ஹோண்ட்யூரஸ் ராணுவம் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பெர்த்தாவின் ‘கோபின்’ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மூன்று பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, அணை கட்டும் திட்டத்திலிருந்து சீன நிறுவனமும், சர்வதேச நிதிக் கழகமும் விலகிக் கொண்டன. தெசா நிறுவனம் மட்டும் அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து வந்தது.
விருதைத் தொடர்ந்து மரணம்
அணை கட்டுவதற்குத் தடையாக இருந்துவந்த பெர்த்தாவைத் தொடர்ந்து மிரட்டிவந்தது தெசா. அந்த மிரட்டல்கள் குறித்து ஒரு பேட்டியில் பெர்த்தா இப்படிச் சொன்னார்: “உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், எல்லா சவால்களையும் நாம் சந்தித்துத்தான் ஆக வேண்டும். ஏனென்றால், இந்த ஒரு கோளைத் தவிர நமக்கு வாழ்வதற்கு வேறு உயிர்ப்புள்ள கோள் எதுவுமில்லை”.
அணைக்கு எதிராக இந்தப் போராட்டம் தொடங்கப்பட்ட பிறகு ஹோண்ட்யூரஸ் நாடு, சுற்றுச்சூழல்வாதிகளுக்கும் களச் செயல்பாட்டாளர்களுக்கும் உயிர்வாழ்வதற்கு ஏற்ற நாடாக இருக்கவில்லை. 2010 முதல் 2014-ம் ஆண்டுவரை, இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய 101 பேர் ஹோண்ட்யூரஸ் அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு, பெர்த்தா தனது போராட்டத்தை உறுதியாகத் தொடர்ந்துவந்தார். அந்தத் துணிச்சலைப் பாராட்டி 2015-ம் ஆண்டு அவருக்கு ‘கோல்ட்மேன் என்விரான்மெண்டல் பிரைஸ்’ வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது மரணம் குறித்து விசாரித்த காவல்துறை, ‘பெர்த்தா, வழிப்பறிக் கொள்ளையின்போது இறந்தார்’ என்று சாக்கு சொன்னது. அதை ஏற்காத மக்கள், நியாயமான விசாரணை வேண்டி அரசை நிர்பந்தித்தனர். அதன் பிறகு, அவரை தெசா நிறுவனத்துடன் தொடர்புடைய இரண்டு பேர் கொன்றதாகத் தெரியவந்தது. அவரது மரணம் தொடர்பான விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர் இந்தப் பூமியை விட்டுச் சென்றாலும், அவரின் சகாக்கள் போராட்டத்தை விட்டுவிடவில்லை. அதன் பலனாக, இந்த அணை கட்டும் திட்டத்தை ஆதரித்த சில நிறுவனங்கள், அந்தத் திட்டத்துக்கு வழங்கி வந்த நிதியுதவியை நிறுத்திவிட்டன. அந்தத் திட்டமே முழுமையாகக் கைவிடப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago