கிரிக்கெட் பெண்கள்: முத்திரை பதித்த மூவர்!

By டி. கார்த்திக்

இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் இந்தியா இன்று களமிறங்குகிறது. ஏற்கெனவே மூன்று முறை வெற்றிக் கோப்பையை முத்தமிட்ட இங்கிலாந்து அணியும் ஒருமுறைகூடக் கோப்பையை வெல்லாத இந்தியாவும் கோப்பையை வசப்படுத்த மோத உள்ளன. கோப்பை யாருக்கு என்பது இன்று (23-ம் தேதி) இரவு தெரிந்துவிடும். இந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியிலுமே நம் வீராங்கனைகளில் ஒருவர் ஜொலித்திருக்கிறார்கள். அதுதான் இந்தியாவை இறுதிப் போட்டிவரை அழைத்து வந்துள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட்டிலும் இந்த உலகக் கோப்பைத் தொடரிலும் சாதித்த சில வீராங்கனைகள்:

ஹர்மன்பிரீத் கவுர்

வலிமையான ஆஸ்திரேலியா அணியை ஓரங்கட்டி இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துவந்த வீராங்கனை. டெர்பியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கட்டுக்கோப்பான ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்கு எதிராக இந்தியா மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. மிகக் குறைந்த ரன்னே இந்தியா எடுக்கும் என எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் களமிறங்கினார் ஹர்மன்பிரீத் கவுர். அவருடைய சூறாவளி ஆட்டம் ஆஸ்திரேலியாவை நிலைகுலைய வைத்தது. 20 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் எனப் பந்துகளை நாலா பக்கமும் சிதறடித்த ஹர்மன்பிரீத் கவுர், 115 பந்துகளில் 171 ரன் குவித்து ஆஸ்திரேலியாவை அலற வைத்தார்.

பஞ்சாபைச் சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுர் கூடைப்பந்தாட்ட வீரர் ஹர்மந்தரின் மகள். அப்பாவைப் போல அல்லாமல் கிரிக்கெட்டை நேசித்தவர். 20 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்தார். 4-வது விக்கெட்டுக்குக் களமிறங்கி நேர்த்தியாகவும், தேவைப்படும்பட்சத்தில் அதிரடியாகவும் விளையாடுவதில் தேர்ந்தவர். மகளிர் அணியின் கேப்டனாகவும் பதவிவகித்திருக்கிறார். சிறந்த பேட்ஸ்வுமனான ஹர்மன்பிரீத் கவுர் 3 சர்வதேச சதங்களை விளாசியிருக்கிறார். இனிமேல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்மன்பிரீத் விளாசிய 171 ரன், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனி மகுடமாக ஜொலிக்கும்.

தீப்தி சர்மா

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது வீராங்கனை. மூன்றாவது ஆட்டக்காரராகக் களமிறங்கி இந்திய அணிக்குப் பலமுறை கைகொடுத்திருக்கிறார். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 4 நாடுகள் கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக 188 ரன் குவித்து மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார். இந்தியர் ஒருவரின் அதிகபட்ச ஒரு நாள் போட்டி ரன்னாகவும், உலக அளவில் இரண்டாவது அதிகபட்ச ஒரு நாள் போட்டி ரன்னாகவும் இது பதிவானது.

கிரிக்கெட்டில் ஆப் சைடில் விளாசுவதிலும், சுழற்பந்துகளை சிக்ஸருக்கு அனுப்புவதிலும் சவுரவ் கங்குலி வல்லவர். அவரது பாணியை பின்பற்றுகிறார் வலது கை ஆட்டக்காரரான தீப்தி. சிறந்த ‘ஆப் பிரேக்’ பந்துவீச்சாளரும்கூட. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இக்கட்டான நேரத்தில் இலங்கை, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக முறையே 60, 78 ரன்களைக் குவித்த தீப்தி, சிறந்த பந்துவீச்சாளராகவும் உருவெடுத்திருக்கிறார். இந்தத் தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் இவர், அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார்.

ஜூலான் கோஸ்வாமி

ஒரு வெறிபிடித்த கால்பந்து ரசிகையான ஜூலான், 15 வயதில்தான் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து பந்துவீச ஆரம்பித்தார். ஆனால், 19 வயதிலேயே இந்திய அணியில் இடம்பெற்றுவிட்டார் என்றால், எவ்வளவு வேகம். அதனால்தானோ என்னவோ வேகப்பந்து வீச்சாளராகப் பரிணமித்துக்கொண்டிருக்கிறார். சக வீராங்கனை மித்தாலி ராஜ் உடன் இணைந்து பல வெற்றிகளை ஜூலான் இந்தியாவுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார். 2006-07 கிரிக்கெட் சீசனில் உச்சத்தில் இருந்த ஜூலான், அந்த வருடத்தின் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டவர்.

தொடர்ந்து 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிவரும் ஜூலான், ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 158 ஒரு நாள் போட்டிகளில் 186 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார். மேலும், தற்போதைய வீராங்கனைகளில் அதிக வேகத்தில் (மணிக்கு 120 கிலோ மீட்டர்) பந்துவீசக் கூடியவர் இவர் மட்டுமே. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 7 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இன்றைய இறுதியாட்டத்தில் இந்தியா கோப்பை வென்றால், 34 வயதான ஜூலான் கோஸ்வாமியின் கிரிக்கெட் பயணத்தில் அது மைல்கல்லாக அமையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்