வான் பெண் மண் 16: பறவைகளுக்காக வாழ்ந்த நீலமலைப் பெண்!

By ந.வினோத் குமார்

றவைகளை யாருக்குத்தான் பிடிக்காது? பறவைகள் குறித்து வெளிநாட்டிலும் இந்தியாவிலும் பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள். பறவையியல் துறையில் ஆய்வு செய்த ஆண்களை நினைவு வைத்திருக்கும் வரலாறு, பெண்களை ஏனோ இருட்டடிப்பு செய்தே வந்திருக்கிறது.

அதற்கு நம் நாட்டையே உதாரணமாகச் சொல்லலாம். அன்றைய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சர் ஹென்றி வில்லிம்மின் மனைவி லேடி எலிசபெத் வில்லிம் (1763 – 1807), வாரென் ஹேஸ்டிங்க்ஸ் காலத்தில் வங்கத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சர் எலிஜா இம்பேயின் மனைவி லேடி மேரி இம்பே (1749 – 1818) ஆகியோரின் வரிசையில் வருபவர்தான், மார்கரெட் புஷ்பை லாசெல்லஸ் காக்பர்ன்.

ஓவியப் பாவை

மார்கரெட், 1829 ஜூலை 2 அன்று சேலத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மாண்டேக் டுண்டாஸ் காக்பர்ன், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். 1843-ம் ஆண்டில் கோத்தகிரியில் உள்ள கணுஹட்டியில் முதன்முதலாக காபி எஸ்டேட்டை உருவாக்கியவர் என்ற பெருமை காக்பர்னுக்கு உண்டு. மார்கரெட்டின் தாய் கேத்தரின் ஜேன் லாசெல்லஸ். இவரது நினைவாகவே கோத்தகிரியில் உள்ள அருவிக்கு கேத்தரின் அருவி என்று பெயரிடப்பட்டுள்ளது.

சிறு வயதிலிருந்தே தன் வீட்டைச் சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளை வரைவதில் மார்கரெட் ஆர்வம் காட்டி வந்தார். அதிலும் பறவைகள் மீது அவருக்கு அலாதிப் பிரியம். வளர வளர பாடம் செய்யப்பட்ட பறவைகளைப் பார்த்துத் தத்ரூபமாக வரையப் பழகிக்கொண்டார். அவர் வரைந்த பறவை ஓவியங்கள் அவற்றின் துல்லியத்தன்மைக்காகப் பாராட்டப்பட்டன.

முதல் பெண் பறவையியலாளர்

லேடி இம்பேவுக்கு, ‘இந்தியாவின் முதல் பெண் பறவையியலாளர்’ என்ற பெருமை உண்டு. அதுபோல, மார்கரெட்டுக்கு, ‘நீலகிரியின் முதல் பெண் பறவையியலாளர்’ என்ற பெருமை உண்டு.

30penindru_margaret3.jpg

1840-ம் ஆண்டு வாக்கில் பிரிட்டிஷ் மருத்துவரும் பறவையியலாளருமான டி.சி.ஜெர்டான், நீலகிரியை விட்டு வெளியேறினார். அவர் போன பிறகு அந்த மாவட்டப் பறவைகள் குறித்த அதிக ஆய்வுகள் நடைபெறவில்லை.

அந்தப் பகுதியில் நிறைந்திருந்த பறவை வளத்தையும் மற்ற ஆய்வாளர்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் 1858-ம் ஆண்டு வாக்கில் அந்த மாவட்டத்தில் உள்ள பறவைகளைத் தொடர்ச்சியாக வரைய ஆரம்பித்தார் மார்கரெட். அந்த ஓவியங்கள் நாட்டின் இதர பகுதியிலிருக்கும் பறவையியலாளர்களை மட்டுமல்லாது, உலகம் முழுக்க உள்ள ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தன.

இவ்வாறு அவர் வரைந்த படங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு ‘நீல்கெரி பேர்ட்ஸ் அண்ட் மிஸ்ஸலேனியஸ்’ என்ற தலைப்பில் புத்தகமாக அவர் வாழ்ந்த காலத்தில் வெளியிடப்பட்டது. பிறகு பல காலம் வெளிச்சத்துக்கு வராமலிருந்த அந்தப் புத்தகத்தை லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சமீபத்தில் புதுப்பித்து வெளியிட்டிருக்கிறது.

மறுக்கப்பட்ட அங்கீகாரம்

மார்கரெட் எப்படி இருப்பார் என்பதை அறிந்துகொள்ள இன்று அவரின் ஒளிப்படம் ஒன்றுகூட நம்மிடையே இல்லை. ஆனால், அவர் செய்த சாதனைகளை அறிவிக்கும்விதமாக, அவர் வரைந்து சென்றிருக்கிற ஓவியங்கள் இருக்கின்றன. நீலகிரி மாவட்டத்தின் பறவைகளை, முறைப்படி வகைப்படுத்திய பெருமை ஜெர்டானைச் சேரும் என்றால், அந்தப் பறவைகள் கூடுகட்டும் விதத்தை முறையாக ஆவணப்படுத்திய பெருமை மார்கரெட்டையே சேரும்.

அதுபோல சுமார் 61 பறவை இனங்களின் இனப்பெருக்க முறைகளை மார்கரெட் ஆவணப்படுத்தியிருக்கிறார். இவற்றில் பெரும்பாலான பறவைகளின் இனப்பெருக்க முறைகள், முதன்முறையாக வெளியானவை. இந்த மாவட்டப் பறவைகளின் இனப்பெருக்கம் தொடர்பான தகவல்கள், ‘இந்தியப் பறவையியலின் தந்தை’ என்று போற்றப்படுகிற ஆலன் ஆக்டேவியன் ஹியூம் எழுதிய ‘தி நெஸ்ட்ஸ் அண்ட் எக்ஸ் ஆப் இந்தியன் பேர்ட்ஸ்’ (1889) எனும் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

30penindru_margaret6.jpg மார்கரெட்டின் கல்லறை

இப்படியான பெருமைகளைக் கொண்ட மார்கரெட்டின் நினைவாக, ‘ரூஃபஸ் ராக் பிபிட்’ எனும் பறவையின் அறிவியல் பெயர், ‘அந்தஸ் காக்பர்னியே’ என்று சூட்டப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக இன்று அந்த அறிவியல் பெயர், செல்லத்தக்கதில்லை என்று பறவையியலாளர்கள் கருதுகின்றனர். இப்படி, காக்பர்னுக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரமும் நாளடைவில் மறுக்கப்பட்டு மறக்கப்பட்டுவிட்டது.

தன்னுடைய இறுதிக் காலத்தைக் கோத்தகிரியில் கழித்த அவர், 1928 மார்ச் 26 அன்று இந்த உலகை விட்டு மறைந்தார். அவரது நினைவாகக் கோத்தகிரியில் அவரின் சமாதி மட்டுமே உள்ளது. அதில் இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளது:

“நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்” (சங்கீதம் 17.15)

இங்கு ‘உமது சாயல்’ என்பது பறவையாகவும் இருக்கலாம் இல்லையா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்