ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் நாள் - மருத்துவத் துறை பெண்களுக்கானது இல்லையா?

By எல்.ரேணுகா தேவி

பிற துறை நிபுணர்களைவிட மருத்துவர்களுக்கு மக்களிடம் அதிக மதிப்பு உண்டு. காரணம், உயிரைக் காப்பாற்றும் அரும்பணியில் அவர்கள் ஈடுபட்டிருப்பதே. அதனால்தான் மருத்துவர்களைக் கடவுள்போல் பெரும்பாலானோர் பார்க்கிறார்கள். புகழ்பெற்ற மருத்துவர் டாக்டர் பிதான் சந்திர ராயின் நினைவைப் போற்றும் விதமாகக் ஜூலை முதல் நாள் தேசிய மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டுவருகிறது.

மருத்துவர்களைக் கொண்டாடும் அதேநேரம் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தேவைகள் குறித்தும் கவனிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக மருத்துவத் துறையில் பெண்களின் பங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதிக மதிப்பெண் எடுக்கும் பெரும்பாலான மாணவிகள் தேர்ந்தெடுக்கும் துறையாக மருத்துவம் உள்ளது. மருத்துவப் படிப்பைத் தேர்வுசெய்யும் மாணவிகளில் 17 சதவீத பெண்கள் மட்டுமே மருத்துவப் பணியில் உள்ளனர் என மருத்துவ ஆய்வு இதழான லான்செட் தெரிவிக்கிறது.

அதிலும் கிராமப்புறங்களில் 6 சதவீதத்தினர் மட்டுமே பெண் மருத்துவர்களாக உள்ளனர் என்பது வேதனை தரும் விஷயம். அதிகமான பெண்கள் மருத்துவம் படித்தாலும், மருத்துவப் பணியில் பெண்களின் பங்கு என்பது தற்போது மருத்துவத் துறையில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பத்தாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர்

ஆயிரம் பேரு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல். ஆனால், நம் நாட்டில் இதை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சுணக்கம் உள்ளது. நாடு முழுவதும் சுமார் பத்தாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்திதான் மருத்துவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. அதிலும் பெண் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே உள்ளது. அதிக எண்ணிக்கையில் பெண்கள் மருத்துவம் படித்தாலும் மருத்துவப் பணிச் சூழல் என்பது ஆண்களின் பிடியில்தான் உள்ளது.

“அறுவை சிகிச்சை, எலும்பியல் சம்பந்தமான பாடங்கள் நடத்தும்போது பொதுவாகவே ஆண் மாணவர்களுக்குதான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். இந்தத் துறைகளில் பெண் மருத்துவர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபட மாட்டார்கள் என்ற காரணத்தால், இதுபோன்ற பாரபட்சம் நிலவுகிறது. இதனுடைய தாக்கம் இந்தத் துறைகளில் ஆர்வமுள்ள மாணவிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக மாறிவிடுகிறது.

அதேபோல் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக ஒவ்வொரு மருத்துவ மாணவரும் மேற்படிப்பு படிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பொதுவாக எம்.பி.பி.எஸ். படித்து முடிக்கவே ஐந்தரை வருடங்கள் ஆகிவிடும். மருத்துவப் படிப்பின் இறுதி ஆண்டு நெருங்கும் போதே பல மாணவிகளின் வீட்டில் திருமணப் பேச்சை ஆரம்பித்துவிடுவார்கள். மேற்படிப்பு என வரும்போது மருத்துவ மாணவிகளுக்கு குடும்பரீதியான பிரச்சினைகள் உருவாகின்றன. இதுபோன்ற காரணங்களால் மருத்துவ மாணவிகள் பலர் இளநிலைப் படிப்புடன் நின்றுவிடுகிறார்கள். பேராசிரியர் பணி என்றால் குடும்பத்தையும் ஓரளவுக்குக் கவனிக்க முடியும் என்பதால் சிலர் மருத்துவப் பேராசிரியர் பணியைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒரு பெண் மருத்துவர் மருத்துவ துறையில் உள்ள ஒருவரையே திருமணம் செய்துக் கொண்டாலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. பெண்களால் மட்டும்தான் குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள முடியும் என்ற கண்ணோட்டம் மாற வேண்டும். அப்போதுதான் பெண்கள் மருத்துவத்தை படிப்புடன் மட்டும் நிறுத்தால் பணியிலும் ஈடுபடும் ஆரோக்கியமான சூழல் உருவாகும்” என்கிறார் தனியார் மருத்துவ மாணவி ஷில்பா.



“தமிழகத்தை பொருத்தவரை அதிகளவில் பெண் மருத்துவர்கள்தான் உள்ளனர். குறிப்பாக மகப்பேறு துறையில் பெண் மருத்துவர்களின் எண்ணிக்கைதான் அதிகளவில் உள்ளது” என்கிறார் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தலைவர் வசந்தாமணி. மேலும் அவர் “ மருத்துவ துறையில் பெண்களின் எண்ணிக்கை குறைவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று பெரும்பாலான மருத்துவ மாணவிகள் தற்போது காலம்தாழ்த்தி திருமணம் நடைபெறுகிறது. இதன்காரணமாக குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் அவர்களுக்கு உண்டாகிறது. அதனால் அவர்களின் உடல்நலனை பாதுகாக்க வேண்டிய பல பெண் மருத்துவ மாணவிகள் பணிக்கு வரமுடியாத நிலைமை உள்ளது” என்கிறார்.

வேலையும் வீடும்

அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் என்.லட்சுமிநரசிம்மன் கூறுகையில்“அதிகபடியான வேலையின் காரணமாக மிகவும் இளம் வயதிலேயே பல பெண் மருத்துவர்கள் வேலையை விட்டு சென்றுவிடுகிறார்கள். மத்திய அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு என்ற சலுகை உள்ளது. இதுபோன்ற சலுகையை மாநில அரசும் குறிப்பாக பெண் மருத்துவர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருட விடுமுறையுடன் கூடிய சம்பளத்தையாவது வழங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம்.

நாடு முழுவதும் பெண் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதற்கு காரணம் குடும்ப சிக்கல், குழந்தை பராமரிப்பு, வேலை நேரம் ஆகியவற்றில் முழுமையாக கவனம் செலுத்த முடியாத காரணத்தால் பல பெண்கள் மருத்துவ பணியில் இருந்து இடையில் நிற்கும் போக்கு உள்ளது. குடும்பமா, தொழிலா என்ற இக்கட்டான சூழல் பெண்களை நெருக்கும் போது பலர் குடும்பத்தைதான் தேர்வு செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பெண் மருத்துவர்களின் எண்ணிக்கையை வளர்ச்சியின் போக்கில் கொண்டு செல்வது அரசின் கையில்தான் உள்ளது. அப்போதுதான் பெண் மருத்துவர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்கான சாத்தியங்களை உருவாக்க முடியும்”

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்