பெண்ணும் ஆணும் ஒண்ணு 15: ஒருமுறைதான் பூக்குமா காதல்?

By ஓவியா

கா

க்கா, குருவி தொடங்கி எந்த உயிரினமும் இயல்பாகக் கடந்துபோகும் பதின் பருவம் மனித இனத்தில் பெரும் சிக்கலுக்காளாகி நிற்கிறது. மனிதன் தவிர்த்த மற்ற உயிரினங்களில் செயற்கைத் தூண்டல்களும் இல்லை, இயற்கை தேவைக்குத் தடையுமில்லை. ஆனால், மனித சமுதாயத்தில் இதற்கு நேர்மாறாக ஒருபுறம் தொலைக்காட்சிப் பெட்டிகள், திரைப்படங்கள், சுவரொட்டிகள், இதழ்கள் போன்றவை வாயிலாகக் காம உணர்வும் காதல் உணர்வும் மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மறுபுறம் சமுதாய அமைப்பும் வாழ்க்கை முறையும் அவற்றைத் தவறு எனக் கண்டித்துத் தடைசெய்கின்றன. மீறினால் தண்டிக்கின்றன. இந்த விநோதமான சூழல், குழந்தைகளின் பதின்பருவப் பிரச்சினைகள் பலவற்றுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகிறது.

பாலியல் வடிகாலா குழந்தைகள்?

இது பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; ஆண் குழந்தைகளுக்கும் பொருந்தக்கூடியதுதான். ஆனால், இயல்பாகவே அதிகமான நேரடி கண்காணிப்பில் இருக்கிற பெண் குழந்தைகள் இதில் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்தச் சமுதாய அமைப்பின் முரண்பாட்டில் சிக்கி வக்கிரக் குணமடைகிற பெரியவர்கள், அறியாமையும் ஏழ்மையும் நிரம்பிய பதின்பருவப் பெண் குழந்தைகளைப் பாலியல் வடிகாலாகப் பயன்படுத்திக்கொள்வதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட பெரும்பாலான பெண்களின் மனதில் சிறு வயதில் யாரோ ஒரு பெரியவர் மூலமாகப் பாலியல் சீண்டலுக்கு ஆளான வடு இருக்கிறது.

சில குழந்தைகளின் பெரிய அளவிலான உளவியல் பாதிப்புகளுக்கு, இது போன்ற திரைமறைவுச் சம்பவங்கள் காரணமாக அமைகின்றன என்றும் சொல்லப்படுகிறது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது குடும்பத்துக்கு நெருங்கிய, செல்வாக்கான ஆண்களாகவே இருக்கிறார்கள். அடுத்தபடியாக இந்தத் தவறைச் செய்யக்கூடியவர்களாகப் பள்ளி ஆசிரியர்களில் சிலர் அல்லது பள்ளிக்கூடங்களோடு தொடர்புடைய பணியாளர்கள் அமைகிறார்கள்.

இவையெல்லாம் அவ்வப்போது பத்திரிகைச் செய்திகளாக வரும்போது, நாம் அதிர்ந்துபோகிறோம். ஒருவிதப் பாதுகாப்பின்மை உணர்வுக்கு ஆட்படுகிறோம். அதன் பின் மறந்துபோகிறோம். ஆனால், சமுதாயத்தில் பெரிய கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இது மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.

வலிமையே தேவை

தொடர்ச்சியாக பாதுகாப்பின்மை பற்றி நிறையப் பேசப்படும். ஆனால், அதிகம் பேசப்பட வேண்டியது, பெண் குழந்தைகளை வலிமையானவர்கள் ஆக்குவதுதான். உண்மையில் அவர்களது பலவீனமே இத்தகைய கொடுமைகளுக்கு அடிப்படைக் காரணம். வலிமை என்பதை உடல் வலிமையோடு மட்டும் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ளக் கூடாது. மனதளவில் அவர்கள் சுதந்திரமானவர்களாக இருக்க வேண்டும். ஆனால், இந்த இடத்தில் நமது சமுதாயத்தைப் பொறுத்தவரை நாம் வெகு தொலைவில் இருக்கிறோம். காரணம் நமது உணர்வுப் பிணைப்பு. நமது குழந்தைகளை நமது உடலின் இன்னொரு அங்கமாகவே பார்க்கிறோம்.

இந்த வகையில் ஐரோப்பியர்களின் வாழ்க்கை முறையிலிருந்து ஆசிய நாடுகளின் வாழ்க்கை முறை அடிப்படையில் வேறுபடுகிறது. ஐரோப்பிய சிறுவர்களுக்கான கதைகளை வாசித்தால், இதைத் தெளிவாக உணர முடியும். ‘புகழ்பெற்ற ஐவர்’ என்ற சிறுவர் கதையை உதாரணத்துக்குச் சொல்லலாம். நான்கு குழந்தைகளும் ஒரு நாயும் சேர்ந்து ஒரு தீவில் தங்கத்தைத் தேடும் கதை. கற்பனைதான். ஆனால், அந்தக் குழந்தைகள் உலகம் சுதந்திரமாக இயங்குவதை நம்மால் உணர முடியும். பெரியவர்களை அவர்கள் தெளிவாக வேறுபடுத்திப் புரிந்துகொள்கிறார்கள்.

குழந்தைகளுக்கும் சுதந்திரம் உண்டு

எந்தச் சமுதாயத்தில் குழந்தைகள் உலகத்தின் சுதந்திரத்தை நாம் புரிந்துகொள்கிறோமோ, அந்தச் சமுதாயத்தில்தான் குழந்தைகளின் உரிமையையும் பாதுகாப்பையும்வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும். ஆனால், சார்புத்தன்மையே நமது வளர்ப்பின் சாராம்சமாக இருக்கிறது. ஏனெனில், குழந்தைகள் நம்மைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்கிற பெருவிருப்பம் நமக்கிருக்கிறது. அதற்குக் காரணம் நாம் அனைவருமே குழந்தைகளை உணர்வுபூர்வமாகச் சார்ந்திருக்கிறோம் என்பதுதான். உண்மையில் சார்ந்திருப்பவர்கள் பெற்றோர்தானே தவிர, குழந்தைகளல்ல. பெரியவர்கள் தங்கள் சார்புத்தன்மையைக் குழந்தைகள் மீது ஏற்றிவிடுகிறார்கள். சார்ந்தே இருக்கப் பழகிய குழந்தையோ, இக்கட்டான தருணங்களை எதிர்கொள்ளத் திணறுகிறது.

தூண்டிவிடும் கட்டுப்பாடுகள்

உண்மையில் தனது சுதந்திரம் பற்றிய எந்தவிதமான உணர்வுபூர்வமான அனுபவமும் இல்லாத, முடிவெடுத்தல் பற்றிய எந்தப் பயிற்சியுமில்லாமல் வளர்க்கப்படும் இந்தக் குழந்தைகள் பதின்பருவச் சிக்கல்களுக்கு இயற்கையாக ஆட்படத் தொடங்கும்போது, அவர்களுடன் சேர்த்து குடும்பங்களும் ஆட்டங்கண்டு விடுகின்றன.

பையன்களும் பெண்களும் பேசிக்கொள்ளக் கூடாது என்று கல்லூரி வளாகங்கள் கட்டுப்பாடு விதிக்கின்றன. உண்மையில் இந்தக் கட்டுப்பாடுகளே மறைமுகத் தூண்டல்களாகின்றன. ஆண், பெண் உறவு தடை செய்யப்பட்ட இடத்தில்தான் காதல் என்ற சொல்லே பிறந்தது என்று அறிஞர் ஏங்கெல்ஸ், ‘குடும்பம் தனிச்சொத்து அரசு’ என்ற நுலில் குறிப்பிடுகிறார். ஆமாம், சமுதாயத் தடைகளிலிருந்துதான் காதல் பிறக்கிறது.

அதனால்தான் ‘இன்பாக்சுவேஷன்’ என்று சொல்லப்படுகிற எதிர்பாலின ஈர்ப்பு, காதல் அல்ல என்று இங்கு மீண்டும் மீண்டும் வகுப்பெடுக்கப்படுகிறது. அது பதின்பருவச் சிக்கல் என்று விளக்கமளிக்கப்படுகிறது. ஐம்பது வயதில் எதிர்பாலின ஈர்ப்பு அற்றுப்போய்விடுமா என்ன? அப்போது அதற்கு என்ன பெயர் சொல்வது? உண்மை என்னவென்றால் காதல் தோன்றவும், கடந்து போகவும் நாம் அனுமதிப்பதில்லை. ஒரு செல் உயிரியிலிருந்து பல படிகள் பரிணாம வளர்ச்சியில் உச்சிக்கு வந்துவிட்ட மனித இனத்துக்கு, ‘ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா’ என்று பாடல் எழுதியது தவறு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பதறும் பெற்றோர்கள்

ஒரு பையனுடன் ஒரு பெண் திரைப்படத்துக்குப் போய் வந்துவிட்டாலே, இவன்தான் எத்தனை பிறவி எடுத்தாலும் நான் காதலிக்க வேண்டிய மனிதன் என்று முடிவுசெய்து ஒருவருக்கொருவர் முடிச்சு போட்டுக்கொள்வது சமுதாய நிர்பந்தத்தினால்தானே தவிர காதலால் அல்ல. ஒரு பையனுடன் பழகுவதற்கான சிறு வெளியையும் அனுமதிக்காத சமுதாயத்தில் திருமண வயதுகூட வராத சிறுமிகள், வீடுகளைவிட்டு வெளியேறித் தாங்களாகக் காதல் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

இது ஒரு புறமிருக்க குழந்தைகளுக்காகவே வாழ்வதான பிம்பத்தை எழுப்பி உண்மையாகவே அதற்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் பெற்றோர், குழந்தைகள் காதலிக்கிறார்கள் என்ற செய்தியில் அதிர்ந்துபோய் விடுகிறார்கள். யாரைக் காதலிக்கிறார்கள் என்பது இரண்டாவது. முதலில் அவர்களாகக் காதலித்துவிட்டார்கள் என்பதே பெற்றோருக்குப் பிடிக்காத செய்திதான். ஏனெனில், அது அவர்களின் சார்புத்தன்மையை நம்பகமற்றதாக்கிவிடுகிறது. அவர்களின் தொடர்பில்லாமல் அந்தக் குழந்தைகள் எடுக்கிற முதல் பெரிய முடிவாக, இங்கு காதல் மட்டுமே இருப்பதுதான் பிரச்சினை.

(இன்னும் தெளிவோம்)

கட்டுரையாளர்,

பெண்ணியச் செயல்பாட்டாளர்

தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்