இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் என அந்தக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் 2014-ம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசினார். அதன் மீது விளக்கம் கேட்க பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற்றேன். “விடுதலைக்காகப் போராடியவர்கள் எல்லோரும் காங்கிரஸ் கட்சியினர் என்றால், வெள்ளையரை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் உங்கள் கட்சி உறுப்பினரா?” எனக் கேட்டேன். விவாதம் மறுபக்கமாகத் திரும்பி, காங்கிரஸ் எப்போது தோன்றியது என்ற வரலாற்றுக்குள் சென்றது. அப்போது சபையிலிருந்த முதல்வர் ஜெயலலிதாவும் விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளிக்க, அது ஒரு சுவராசியமான நிகழ்வாக அமைந்தது.
அரசியல் பங்கேற்பு
அதே நேரம், பெண்களின் அரசியல் பங்கேற்பைத் தேசிய அளவில் தொடங்கிவைத்த பெருமை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அமைப்புகளுக்கு இருக்கிறது. அதன் தொடக்கம் இந்திய விடுதலைப் போராட்டமாக இருந்தது. பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும், பெண்கள் விடுதலைப் போரில் பங்கேற்க முன்வர வேண்டும் என காந்தி விடுத்த அறைகூவல் பெண்களை உத்வேகப்படுத்தியது. அகிம்சை வழியிலும் ஆயுதம் தாங்கியும் பல்லாயிரக்கணக்கில் பெண்கள் குடும்பத்தைத் துறந்து போராட்டப் பாதைக்கு வந்தார்கள்.
சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் செயல்பட்ட காங்கிரஸோடு இப்போதுள்ள காங்கிரஸை அவர்களே ஒப்பிட்டுக் கொள்வதில்லை. ஆனாலும் மதச்சார்பற்ற அரசியல் என்று வருகிறபோது, அதன் தொடர்ச்சி நீர்த்துப் போகவில்லை. பொருளாதாரக் கொள்கை சார்ந்த விஷயங்களில் எப்போதும் இந்திய முதலாளித்துவத்தின் நலன் சார்ந்த கொள்கையைத்தான் அந்தக் கட்சி கடைப்பிடித்துவருகிறது.
வேண்டாமே பிரதமர் பதவி
பெண்களின் அரசியல் பங்கேற்பில் முன்னோடியாக விளங்கிய பாரம்பரியத்தைக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி 20 ஆண்டுகளாக இருந்துவருகிறார். இத்தாலியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்திராவின் மருமகளாக, பின்னர் இந்தியாவின் மகளாக மாறியவர் என்று அந்தக் கட்சியினர் பெருமையோடு நினைவுகூர்கின்றனர்.
1999 நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி கண்டவர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். அடுத்துவந்த 2004 தேர்தலில் கார்கில் வெற்றியை மையமாக வைத்து, இந்தியா ஒளிர்வதாகக் கூறிவந்த பாஜகவை மக்கள் தோற்கடித்தார்கள். இந்தத் தேர்தல் களத்தில் சோனியாவைத் தனிப்பட்ட முறையில் வசைபாடியவர்களின் வரிசையில் அதிமுகவின் அப்போதைய பொதுச் செயலாளர், பாஜக கட்சியினர் முக்கிய இடத்தைப் பிடித்தார்கள். சோனியா பிரதமரானால் தான் மொட்டை அடித்துக்கொள்ளப் போவதாக சுஷ்மா சவால் விடுத்தார்.
ஆனால், நல்லவேளையாக அப்படி எதுவும் நடந்துவிடவில்லை! வெற்றிபெற்ற சோனியா, சுஷ்மாவின் நலன் கருதியோ என்னவோ வாய்ப்பு இருந்தும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
தோல்வியில் முடிந்த கூட்டணி
அந்த முறை இடதுசாரிக் கட்சிகளோடு செய்துகொண்ட பொதுச் செயல்திட்ட அடிப்படையில்தான் ஊரக வேலைவாய்ப்புச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், மலைவாழ் மக்களுக்கான நில உரிமைச் சட்டம், பெண்கள் பாதுகாப்புச் சட்டம் உட்பட பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், பொருளாதாரக் கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விரும்பவில்லை.
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரி அமைப்புகளின் கருத்துகளை நிராகரித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த நடவடிக்கையை ஆட்சேபித்த இடதுசாரியினர், அரசுக்கு வழங்கிவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றனர். அடுத்துவந்த தேர்தலின் வெற்றிக்குப் பிறகு இடதுசாரிகளின் ஆதரவின்றி இனிச் சுதந்திரமாகச் செயல்படுவோம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். ஆனால், எந்தத் தடையும் இல்லாமல் அந்த ஆட்சி அமல்படுத்திய பொருளாதாரக் கொள்கைகள் மீண்டும் அவர்களுக்கு 2014-ல் வெற்றி தேடித் தரவில்லை.
பொதுத்துறைகள் தனியார்மயம், ஊழல், விவசாயிகள் தற்கொலை, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்த நடவடிக்கைகள் போன்றவற்றைச் சுதந்திரமாக மேற்கொண்டதன் விளைவு, வரலாறு காணாத தேர்தல் தோல்வியை ஐ.மு. கூட்டணிக் கட்சிகள் சந்தித்தன.
கணக்கில் வராத பெண்களின் உழைப்பு
காங்கிரஸ் கடைப்பிடித்த உலகமயப் பொருளாதாரக் கொள்கைகள் பெண்களின் வேலைவாய்ப்பை ஈவிரக்கமில்லாமல் பறிக்கத் தொடங்கியிருந்தன. நம் நாட்டில் ஒரு பொருள் மிக மலிவான விலையில் கிடைக்கிறதென்றால், அது பெண்களின் உழைப்பாகத்தான் இருக்க முடியும். மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடு முழுதும் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை காங்கிரஸ் கட்சி அப்போது நிறைவேற்றி இருந்திருக்கலாம். ஆனால், பொருளாதார மேதையான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவை அந்தத் திசைக்கு அழைத்துச் செல்லவில்லை. சோனியாவும் அதற்கு வழிகாட்டவில்லை.
ஒரு நாட்டில் பெண்கள் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ, அந்த அளவுக்கே அந்நாடு முன்னேறும் என்றார் நேரு. ஆனால், பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவைக்கூட அவர்களது ஆட்சியில் சட்டமாக நிறைவேற்ற முடியவில்லை என்பதே யதார்த்தம்.
பாஜகவின் மதவெறியூட்டும் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் காங்கிரஸ், பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து எங்காவது போராட்டம் நடத்தியிருக்கிறதா என்று தேட வேண்டியுள்ளது.
காங்கிரஸுக்கு மாற்றாக வெற்றிபெற்று அரியணையில் அமர்ந்த பாஜக அரசோ, எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்துப் போராடிய அதே பொருளாதாரக் கொள்கைகளை முன்னிலும் தீவிரமாக இப்போது அமல்படுத்திவருகிறது. இந்த இரு கட்சிகளுக்கிடையில் புகுந்துகொண்ட மதவெறி, மக்கள் ஒற்றுமையைச் சீரழிப்பதோடு ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் கோடீஸ்வரர்களை மேலும் கோடீஸ்வரர்களாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறது.
நிறவெறியின் வெளிப்பாடு
சோனியா அந்நிய நாட்டைச் சேர்ந்தவர் என்ற விமர்சனத்தை பாஜக இன்னமும் கைவிடவில்லை. மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் 2015-ல், “வெள்ளை நிறத்தில் உள்ள சோனியாவுக்குப் பதிலாக ஒரு நைஜீரியப் பெண்ணை ராஜீவ் திருமணம் செய்திருந்தால், அவரை காங்கிரஸார் தங்கள் கட்சித் தலைவராக ஏற்றிருப்பார்களா?” என்றார். படுமோசமான இந்த விமர்சனத்தை இந்தியாவின் அனைத்துக் கட்சியினரும் கண்டித்தார்கள். இந்தியாவுக்கான நைஜீரியத் தூதுவரோ ‘எங்கள் பெண்களை நிறவெறி உணர்வோடு கேலி செய்ததற்கு அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கண்டித்தார். சோனியாவோ அமைச்சரின் கேள்விக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
அமைதியும் நிராகரிப்பும் அகிம்சைதான் என்றாலும் அதுவே கூராயுதமாகவும் பெண்ணின் பேராயுதமாகவும் மாறும் அல்லவா?
சமீபத்தில் குல்பர்காவில் நடந்த கூட்டத்தில், “எனக்குப் பதவி, அதிகார ஆசை கிடையாது. நாட்டு மக்களின் நலனுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறேன். தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் நல்வாழ்வுக்காக வாழ்வதே என் வாழ்க்கையின் நோக்கம்” என்றார் சோனியா. அத்தகைய நோக்கம் நிறைவேற வேண்டுமானால், காங்கிரஸ் கடைப்பிடித்துவந்த பொருளாதாரக் கொள்கைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தால்தான் முடியும். அந்தக் கட்சியின் தலைவர் என்ற முறையில் அத்தகைய மாறுதலுக்கு அவர் முயற்சி மேற்கொள்வாரா அல்லது தலைமை மாறுதலுக்கு மட்டுமே இடமளிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago