நாடற்றுத் துரத்தப்படும் எழுத்தாளர்

By ஆர்.ஜெய்குமார்

அவள் பதின்மூன்று வயதுக் குழந்தை. ஆனால், சமூகத்தின் முன்னால் பெண். பெண்கள் வெளியே சுற்றுவது முறையானதல்ல என அவளுடைய அம்மா, அவளை வீட்டுக்குள்ளே இருக்கச் சொன்னார். பிரார்த்தனைகள், நோன்புகள் இவற்றுடன் திரைகளுக்குப் பின்னே வாழச் சொல்லிக்கொடுத்தாள். அம்மாவின் அறிவுரையைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில், அவள் வயதை ஒத்த பையன்கள் ஆற்றங்கரையில் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

இவற்றையெல்லாம் அந்தக் குழந்தையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெண்ணாகப் பிறந்ததால் தான் வீட்டிற்குள் இருக்க வேண்டுமா? என அவள் தனக்குள்ளே கேட்டுக்கொண்டாள். அந்தக் குழந்தையால், இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அம்மாவின் அறிவுரைகளைப் புறந்தள்ளிவிட்டு, மூச்சடைத்துக் கிடக்கும் இருட்டறையைவிட்டு வெளியே வந்தாள். பிரம்மாண்டமான வானுக்குக் கீழே விரிந்து கிடக்கும் அழகான ஆற்றுச் சமவெளியை நோக்கி ஓடினாள். மக்கள் அவரை, "மரியாதை தெரியாதவள்" என்றனர். வீடும், உறவுகளும் அதையே சொன்னது. இந்தப் புறக்கணிப்புகளையெல்லாம் அவர் தன் எழுத்தின் மூலம் கடக்க முயன்றார். தொடர்ந்து கவிதைகள், கதைகள் எழுதினார். இன்று இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறியுள்ளார். அவர்தான் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.

1962ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசத்தில் மைமென்ஷிங் என்னும் நகரத்தில் இஸ்லாமியக் குடும்பத்தில் தஸ்லிமா நஸ்ரின் பிறந்தார். மத அடிப்படைவாதக் கருத்து ஆட்சி செலுத்திய சூழலில்தான், அவரின் குழந்தைப் பருவம் கழிந்தது. இம்மாதிரியான கட்டுகளை உடைத்து வெளியேற நஸ்ரின் கவிதையை ஆயுதமாக்கிக்கொண்டார். தன் 13ஆம் வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார்.

நஸ்ரினின் தந்தை ஒரு மருத்துவர். அதனால் அவரைப் பின்பற்றி அவரும் மைமென்ஷிங் மருத்துவக் கல்லூரியில் பயின்றார். அங்கும் இலக்கியச் செயல்பாட்டில் தீவிரமாக இருந்தார். 1984ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தார். மருத்துவப் படிப்பை முடித்த பிறகு மைமென்ஷிங்கில் ஒரு மருத்துவமனையில் சில காலம் பணியாற்றினார்.

பிறகு தாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத் துறையில் பயிற்சி மருத்துவராகப் பணிக்குச் சேர்ந்தார். அங்கு 8 ஆண்டுகள் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்திய அனுபவம் அவரை பெரிதும் பாதித்தது. அங்கு பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களையும், பெண் குழந்தை பிறந்ததற்காகப் பிரசவ அறையிலேயே அழுது புலம்பும் பெண்களையும் கண்டார். மருத்துவத் துறை சம்பந்தமாகக் கற்றுக்கொண்டதைவிட பெண்ணியச் சிந்தனையாளராக, படைப்பாளராக பல விஷயங்களை அங்கே அவர் தெரிந்துகொண்டார்.

நஸ்ரினின் முதல் கவிதைத் தொகுப்பு 1986இல் வெளிவந்து, ஓரளவு கவனம் பெற்றது. அதன் பிறகு எழுதியவை அவரைக் கூர்மையாக்கியன. 1989இல் வெளிவந்த அவரது 2ஆவது தொகுப்பு மிகப் பெரிய கவனத்தைப் பெற்றது. வங்கதேசத்தின் முன்னணிப் பத்திரிகைள் பலவும் நஸிரினிடம் கட்டுரை எழுதுமாறு கேட்டுக்கொண்டன. அவரும் அதைப் பயன்படுத்தி, பெண்களுக்கு எதிரான மத அடக்குமுறைகள் குறித்துத் தொடர்ந்து எழுதினார். ஆணாதிக்கத்திற்கு எதிரான அவரின் வலுவான மொழிக்கு மிகப் பெரிய ஆதரவு உருவானது. அதேபோல, ஒரு சாரரின் கடுமையாக விமர்சனத்துக்கும் அவர் ஆளானார்.

1990ஆம் ஆண்டு மதவாதிகள் நஸ்ரினுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினர். தெருமுனை ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டனர். அவரது கட்டுரைகள் வரும் பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்பட்டன. அதன் ஆசிரியர்கள் மிரட்டப்பட்டார்கள். பொதுஇடங்களில் நஸ்ரின் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன. அவர் தலைக்கு விலையும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் வீட்டுக்குள் முடங்கினார். மேலும் அவர் பணிபுரியும் மருத்துவமனை, எழுத்தை நிறுத்திக்கொள்ளாவிட்டால் வேலையில் நீடிக்க முடியாது என மிரட்டியது. வேலையிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இதற்கிடையில் அவர் நாவலான 'லஜ்ஜா'வெளிவந்தது. 1993ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நாவல் இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் வெடித்த மத வன்முறையைக் கதைக்களமாகக் கொண்டது. இந்துச் சிறுபான்மையினருக்கு எதிராக மனிதாபிமானமற்ற முறையில் தொடுக்கப்பட்ட வன்முறையை, நாவலில் நஸ்ரின் விவரித்திருந்தார். இந்நாவல் வெளிவந்து வங்கதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதவாதிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மக்கள் உணர்வுகளைப் புண்படுத்துவதாக வங்கதேச அரசு, நாவலுக்குத் தடை விதித்தது. பிணையில் வரமுடியாத கைது உத்தரவையும் பிறப்பித்தது. அந்தச் சமயத்தில் அவர் தலைக்குக் கூடுதல் விலையை ஒரு மதவாத அமைப்பு விதித்தது.

சில மாதங்கள் தலைமறைவாக இருந்தார் நஸ்ரின். பிறகு 1994இல் ஸ்வீடன் அவருக்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்ததன் பேரில், அங்கு சென்றார். அதன்பிறகு இந்தியாவில் கொல்கத்தாவில் வசிக்க விரும்பினார். இந்தியா அவருக்கு குடியுரிமை அளிக்க மறுத்து, இருப்பிட உரிமம் மட்டும் வழங்கியது. ஆனாலும், இந்தியாவிலும் அவரால் நிம்மதியாக வாழ முடியவில்லை. மும்பையிலும், ஹைதராபத்திலும் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் நஸ்ரின் தாக்கப்பட்டார். இந்தியாவில் 3 ஆண்டுகள் மட்டுமே அவரால் வாழ முடிந்தது. அவர் இந்தியாவை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். "புத்ததேவ் பட்டாச்சார்யா சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக என்னை வெளியேற்றிவிட்டார்" என நஸ்ரின் குறிப்பிட்டார். தாய்நாட்டில் வாழ முடியாமல் வேற்று நிலத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்டது, அவருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய வன்முறை.

இவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகும் தளர்ந்துவிடாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டு, அடக்குமுறையாளர்களுக்குப் பெரும் சவாலாக இருந்துவருகிறார். "எனக்கு முன்னால் வேறெதுவும் இல்லை/ஒரு நதி மட்டும்தான்/நான் அதைக் கடப்பேன்/எவ்வாறு நீந்துவதென்பதும் எனக்குத் தெரியும்" என்கிறார் தஸ்லிமா நஸ்ரின்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்