‘‘எனக்கு மரணத்தைக் கண்டு பயம் இல்லை; அநீதிக்கு எதிராக மவுனம் காக்கப்படுவதை கண்டே நான் அஞ்சுகிறேன். எந்த நேரமும் என் குரலை நசுக்கவும் என்னைக் கொல்லவும் உங்களால் முடியும். ஆனால் நான் வாழவே விரும்புகிறேன். ஒரு பூவைப் பிய்த்து எறிய முடிகிற உங்களால், வரப் போகும் வசந்த காலத்தைத் தடுத்து நிறுத்த முடியாது!” - மலாலை ஜோயாவின் இந்தப் பேச்சு ஒன்றே அவரைப் பற்றிச் சொல்லிவிடுகிறது!
12 ஆண்டுகள் போர் நடைபெற்று ஓய்ந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். தாலிபன்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பு, ஆப்கானிஸ்தான் அரசாங்கம் என்ற மூன்று சக்திகளையும் கடுமையாக எதிர்த்து வருபவர். பெண்ணுரிமை, பெண் கல்விக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். போராளி, எழுத்தாளர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்டவர்.
மலாலையின் தந்தை சோவியத் போரில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு காலை இழந்தவர். அகதியான மலாலையின் குடும்பம் ஈரானில் தஞ்சமடைந்தது. அங்கிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தது. அகதி முகாம்களில் வசித்த பெண் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவதற்காக ஆப்கானிஸ்தான் பெண்கள் புரட்சி அமைப்பு, பள்ளிகளை நடத்தியது. இந்த அமைப்பில்தான் மலாலை படித்தார். மிகச் சிறிய வயதிலேயே மக்களுக்கான போராட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.
“அகதி முகாம்களில் நான் சந்தித்த மக்கள்தான் என்னைப் போராளியாக மாற்றினார்கள். படிப்பறிவு இல்லாவிட்டாலும் அரசியல் தெரியாவிட்டாலும் அந்தப் பெண்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை அதிகம். ஒவ்வொரு அகதி முகாமிலும் வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான வாழ்க்கை. வறுமையின் காரணமாக எலும்பும் தோலுமாக இருந்த குழந்தைகளை மருத்துவரிடம் கொண்டு செல்லப் பணம் இல்லாமல், குழந்தையின் மரணத்தை எதிர் நோக்கிக் காத்திருந்த பெற்றோர்களை நீங்கள் சந்தித்ததுண்டா? அதுபோன்ற கொடூரமான விஷயங்களை எல்லாம் ஒரு திரைப்படத்திலோ, எழுத்திலோ கொண்டுவந்துவிடவே முடியாது. இது ஆப்கானிஸ்தானி யர்களுக்கு மட்டும் நேர்ந்த அவலமல்ல. பாலஸ்தீன், இராக் போன்ற நாடுகளில் உள்ள மக்களுக்கும் பொருந்தும்” - இப்படியான அனுபவங்களே மலாலை ஜோயாவைப் பொது வாழ்க்கைக்கு அழைத்துவந்தன.
மலாலை ஆப்கானிஸ்தான் வந்தபோது, தாலிபன்களின் ஆட்சி நடைபெற்றது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. பெண் குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. பல தன்னார்வ அமைப்புகளில் சேர்ந்து வேலை செய்தார் மலாலை. ரகசியமாகப் பெண்களுக்குக் கல்வி அளித்தார்.
தாலிபன்கள் பெண்களுக்கு இழைத்த கொடுமைகளை ரகசியமாக ஆவணப்படுத்தி, வெளியுலகுக்குத் தெரியவைத்தது ஆப்கன் பெண்கள் புரட்சிகர அமைப்பு. உலகமே அதிர்ந்துபோனது.
தாலிபன்களை அழிக்க வந்த அமெரிக்க, நேட்டோ படைகள், அதற்குப் பிறகு உருவான அரசாங்கம் எல்லாமே ஆப்கானிஸ்தான் மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆட்சிகள் மாறினாலும் வறுமை, வேலையின்மை, கல்வியறிவின்மை போன்றவை தொடர்ந்துகொண்டிருந்தன. ஆள்பவர்களை எதிர்த்துத் துணிச்சலாகப் போராடிக்கொண்டிருந்தார் மலாலை.
2003-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள லோயா ஜிர்கா எனப்படும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் நின்றார். பெரும்பான்மையான வாக்குகளை அளித்து, நாடாளுமன்றத்துக்கு மக்கள் அவரை அனுப்பிவைத்தனர். அப்போதுதான் மலாலை உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றார்.
“நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் பலர் போர்க் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டும். அப்பாவி ஆப்கானிஸ்தானியர்களை அழித்த அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளைச் சேர்ந்தவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும்” என்று பேசிய மலாலையின் பேச்சு, மத அடிப்படைவாதிகளையும் பிற்போக்குவாதிகளையும் ஆத்திரமூட்டியது. நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர் மீது தாக்குதல், கொலை முயற்சி போன்றவை நடத்தப்பட்டன. இதுவரை ஏழு கொலை முயற்சிகளில் இருந்து தப்பியிருக்கிறார் மலாலை. இன்றும் அவரை ஆபத்துகள் சூழ்ந்த வண்ணமே உள்ளன. குடியிருப்பை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறார். பாதுகாவலர்களுடன் பயணிக்கிறார். தன் கணவரின் பெயரையோ, புகைப்படத்தையோ இதுவரை வெளியிட்டதில்லை. நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது.
“ஒரு போராட்டக்காரருக்கு இப்படி வாழ்க்கை நடத்துவது சிரமம்தான். ஆனால் இப்படி இல்லாவிட்டால் எளிதாக அவர்களுக்கு இரையாகிவிடுவேன். இன்று நான் மரணமடைந்தாலும், அந்த மரணத்துக்கு நான், நீ என்று பொறுப்பேற்க இங்கே ஆட்கள் இருக்கிறார்கள்” என்று விளக்கம் தருகிறார் மலாலை.
தாலிபன்களை அழிப்பதுதான் அமெரிக்காவின் உண்மையான நோக்கமா?
“ஆசியாவின் இதயம் ஆப்கானிஸ்தான். எண்ணெய் வளம், காப்பர், யுரேனியம், லித்தியம் போன்ற இயற்கை வளங்களைப் பெற்ற நாடு. இரட்டைக் கோபுரத் தாக்குதல் என்ற காரணத்தை வைத்து அமெரிக்கப் படைகள் எங்கள் நாட்டிற்குள் நுழைந்தன. உண்மையில் அவர்களுக்கு எங்கள் வளங்கள் மீதுதான் ஆர்வம். லிபியா, சிரியா போன்ற நாடுகளில் நுழையும் நோக்கமும் இதுதான். மற்றபடி அமெரிக்காவுக்கு எங்கள் நாட்டின் மீது அக்கறை ஏதுமில்லை. எங்கள் நாட்டுக்கு என்று பெருமைப்படக்கூடிய வரலாறு இருக்கிறது. எங்களை நாங்களே முன்னேற்றிக்கொள்வோம்” என்று சொல்லும் இந்தத் தெளிவுதான் மலாலை ஜோயாவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாயைக் கொண்டாடுவதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா நோபல் பரிசு பெற்றபோது புகழ்பெற்ற அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி, “நோபல் பரிசு கமிட்டி உண்மையிலேயே தகுதியான நபருக்குப் பரிசு வழங்க வேண்டும் என்றால் ஆப்கானிஸ்தானின் மலாலை ஜோயாவுக்குத்தான் வழங்கியிருக்க வேண்டும்” என்று நியுயார்க் டைம்ஸில் எழுதினார்.
நோபல் பரிசு பெற்ற ஏழு பெண்கள் மலாலை ஜோயாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆள் பலமோ, பண பலமோ, மேற்குலக நாடுகளின் பலமோ இல்லாவிட்டாலும்கூட மலாலைக்கு மக்களின் ஆதரவும் நீதியும் பக்கபலமாயிருக்கிறது. 1880-ல் ஆங்கிலப் படைகளைச் சிதறடிக்கச் செய்த மலாலை என்ற வீராங்கனையின் பெயரைத்தான் மலாலை ஜோயாவுக்குச் சூட்டியிருக்கிறார்கள். இவரும் ஏகாதிபத்தியம், வறுமை, கல்வியறிவின்மை, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை விரட்டியடிப்பார்! என்ற நம்பிக்கையை இவரது செயல்கள் தருகின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago