“சுவாமியே சரணம் ஐயப்பா...” என்று நெக்குருகிய கமலா பாட்டியைப் பார்த்து, “என்ன பாட்டி… சபரிமலை போக ஏதாச்சும் பிளானா?’’ என்றாள் கனிஷ்கா.
“உங்க ரெண்டுபேரையும் கூட்டிட்டுப் போக பிளான் இருக்கு’’ என்று கமலா பாட்டி சொல்ல, கனிஷ்காவும் கல்பனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“சபரிமலையில் பெண் பக்தர்களை வயது வரம்பின்றி அனுமதிக்கணும், மாதவிடாய் என்பது இயற்கை சுழற்சி, பெண்களை ஐயப்பனே வெறுக்கவில்லை என்றெல்லாம் கேரளாவில் ஒரு விவாதம் கிளம்பியிருக்கு. எல்லோருக்கும் இதுபோன்ற புரிதல் ஏற்படணும். அதனால்தான் உங்களையும் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னேன்!’’
“பாட்டி நீங்க எப்பவுமே முற்போக்கா சிந்திக்கறீங்க, யு ஆர் கிரேட்! புகழ்பெற்ற மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகூட ரத்து செய்யப்பட்டுவிட்டது தெரியுமா?” என்றாள் கனிஷ்கா.
இருவரும் ஒரு ஹைஃபை தட்டிக்கொள்ள, “கோயிலுக்குள்ளே பெண்கள் போவது இருக்கட்டும். நம் நாட்டில் பெண் குழந்தை பிறப்பது இன்னும் சாபமாகவே கருதப்படுது. கருவில் வளரும் சிசு பெண் என்று தெரிந்ததால் மருமகள் வயிற்றில் மாமியாரே ஆசிட் ஊற்றி தீவைத்த கொலை முயற்சி சம்பவம் நெல்லூரில் நடந்திருக்கு. கருவில் இருக்கும்போதே வன்முறையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில்தான் பெண் சமூகம் இருக்கு என்பது எவ்வளவு பெரிய வேதனை” என்றார் கல்பனா ஆன்ட்டி.
“ம்... நம்ம மக்களுக்கு பெண்களோட பெருமை புரிய இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படுமோ தெரியலை. 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் பெருமையை, ஒலிம்பிக் அரங்கில் நிலைநாட்டியவங்க பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மகார்னு முத்தான மூணு பெண்கள்தானே?” என்றார் கமலா பாட்டி.
“அந்தப் பெருமை ஒரு பக்கம் இருந்தாலும் சுவாதி, சோனாலி, பிரான்ஸினா என்று ஒருதலை காதலுக்கு இரையான பெண்களின் கதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்பப் பயமா இருக்கு” என்றாள் கனிஷ்கா.
அவகாசமே தராமல், “பயம் கோழைத்தனம். எதையும் துணிச்சலோடு தட்டிக் கேட்கணும், எதிர்த்துப் போராடணும்” என்றார் கமலா பாட்டி.
“இந்த மாதிரி வன்முறைகள் பெருக நிறைய காரணம் இருந்தாலும் முக்கியக் காரணம் ஆணாதிக்க சிந்தனைதான். நம் சமூகத்தில் வீட்டில் இருந்து தொடங்குது பாலின பாகுபாடு. ஆண் குழந்தை பெரியவனாக இருந்தாலும் அவனைவிடச் சிறியதாக இருக்கும் பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லும்போது, ஆண் என்றால் ஒருபடி மேல் என்ற எண்ணம் ஆணித்தரமாகப் பதிந்துவிடுகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தன் மகனுக்குப் பெண்ணை மதிக்கக் கற்றுத் தரணும். ஆணும் பெண்ணும் சமம் என்ற புரிதலை உண்டாக்கணும். அதுக்கு முதலில் பெற்றோர் மனநிலை மாறணும். பள்ளி, கல்லூரிகளிலும் பாலின சமத்துவம் பேணப்படணும்” என்று விளக்கமாகவே சொன்னார் கல்பனா ஆன்ட்டி.
“சரியாக சொன்னீங்க ஆன்ட்டி! மங்களூருவில் இருபாலினத்தவரும் பயிலும் ஒரு கல்லூரியில் மாணவிகள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று பட்டியல் கொடுத்திருக்கிறார்களாம். மாணவிகள் சக மாணவர்களுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது, அருகில் அமரக் கூடாது. ஆடை கட்டுப்பாடு அவசியம். மீறினால் அபராதம். அதையும் மீறினால் ஏழு நாள்வரை இடைநீக்கம். இந்தக் கட்டுப்பாடுகள் நம்மைப் பின்னோக்கியே இழுத்துச் செல்லும்” என்றாள் கனிஷ்கா.
“ஆமாம் கனிஷ்கா. இதுபோன்ற கட்டுப்பாடுகள் தமிழ்நாட்டில்கூட நிறைய கல்லூரிகளில் இருக்கு. இன்னொரு கவலை தரும் விஷயம், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறுகிறது என்கிறது தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பகம். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகத் தமிழகம் குழந்தைத் திருமணங்களில் முதலிடத்தில் இருக்கிறது.’’
“ஆமாம் பாட்டி, நானும் படிச்சேன். அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது.”
ஒரு கையில் முறுக்கும் மற்றொரு கையில் காபியும் எடுத்தபடி வந்து அமர்ந்தார் கமலா பாட்டி.
“வால்பாறை முறுக்கா! செம டேஸ்ட்” என்றபடி சாப்பிட ஆரம்பித்தாள் கனிஷ்கா.
“ஒரு நல்ல சட்டம் வந்திருக்கே, நீங்க யாரும் கவனிச்சீங்களா?’’ என்றார் காபியைக் குடித்தபடி கமலா பாட்டி.
“நீங்களே சொல்லிடுங்க... நாங்க ரெண்டு பேரும் பிஸியா இருக்கோம்” என்று முறுக்கைக் காட்டியபடிச் சிரித்தாள் கனிஷ்கா.
“அரசாங்கத்தில் பணிபுரியும் பெண்களுக்குப் பேறுகால விடுமுறையை ஒன்பது மாதங்களாக உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்!’’
“இது நல்ல விஷயம்தான், ஆனால் மாநிலங்களவையில் கடந்த மாதம் பணிபுரியும் பெண்களுக்கு ஆறு மாத பேறுகால விடுப்பு வழங்குவதற்கான மசோதா நிறைவேறியது. மக்களவையில் இன்னும் இந்த மசோதா நிறைவேறவில்லை. இது நிறைவேறினால் குழந்தைகளைத் தத்தெடுக்கும் தாய்மார்களுக்கும் வாடகைத் தாய்மார்களுக்கும் 12 வாரங்கள் விடுமுறை கிடைக்கும்’’ என்றார் கல்பனா.
“ஆன்ட்டி, அரசாங்கத்தில் வேலை செய்யும் பெண்கள் குறைவாகத்தானே இருப்பார்கள்? பெரும்பாலானவர்கள் தனியார் மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் வேலை செய்யக் கூடியவர்கள்தான். அவர்களுக்குப் பேறுகால விடுப்பு கிடைக்குமா? ஒருவேளை இந்த விடுப்பு அவர்களுக்கும் செல்லுபடியானால், பெண்கள் வேலையை இழக்கும் ஆபத்துதான் அதிகரிக்கும்னு தோணுது” என்றாள் கனிஷ்கா.
“நீ சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம்தான். கொஞ்சம் பேருக்காவது இந்த மசோதா பயன்படும் என்ற விதத்துல நாம் இதை வரவேற்கலாம்” என்ற கல்பனா ஆன்ட்டி, வேகமாக எழுந்தார்.
“அதுக்குள்ள சபையைக் கலைக்கும் நேரம் வந்துவிட்டதா! சரி, அடுத்த வாரம் மீட் பண்ணுவோம்” என்றபடி டிவியில் இரவு செய்தியில் ஆழ்ந்தார் கமலா பாட்டி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago