அமுதசாந்தி - தனக்கு ஒரு கை இல்லா விட்டாலும், மதுரையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண்கள் பலருக்கு இப்போது இவர் தான் தன்னம்பிக்கை தரும் ஊன்று கோல்!
சாதிக்க நினைப்பவர்களுக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பார்கள். அதற்கு அக்மார்க் உதாரணம் அமுதசாந்தி. தடைகளை கடந்து, தான் சாதித்தது மட்டுமல்லாமல் தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளி பெண்களுக்கும் நம்பிக்கை கீற்றாய் தெரிகிறார் அமுதசாந்தி. மதுரை எஸ்.எஸ்.காலனியில் அவரது இல்லத்தில் அமுதசாந்தியை சந்தித்துப் பேசினேன்.
"பிறவியிலேயே எனக்கு இடது கை பாதிக்கு மேல இல்ல. முழங்கை வரை மட்டுமே கை இருந்ததால, ஆரம்பத்துல எந்த வேலையும் செய்ய முடியாம ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஏழை குடும்பங்கிறதால, பெத்தவங்களுக்கும் என்னால ரொம்ப சிரமம். ஆனாலும், மத்த புள்ளைங்கள மாதிரி எப்படியாச்சும் என்னையும் படிக்கவைச்சு ஆளாக்கிடணும்னு அவங்களுக்கு ஒரு ஆசை. ஆனா, அதுக்கான வசதி வாய்ப்பு எங்ககிட்ட இல்ல. வெறும் கையில எப்படி முழம் போடுறது?
எனக்கும் பெரிய படிப்பெல்லாம் படிக்கணும்னு ஆசைதான். ஆனா, வீட்டுச் சூழலால அந்த ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டேன். அப்பத்தான், என்னை மாதிரி பிள்ளைங்களுக்கு காந்தி கிராமம் கிளை நிறுவனமான அவ்வை ஆசிரமத்துல படிப்புக்கு உதவி செய்யுறாங்கன்னு சொன்னாங்க. அங்க, இங்க ஆளப் புடிச்சு. என்னைய எங்க அப்பா அங்க கொண்டு போய் சேர்த்துவிட்டுட்டாங்க. பி.காம். முடிக்கிற வரைக்கும் அங்கேயே படிச்சேன். அதுக்கப்புறம், தொலைதூரக் கல்வியில எம்.பி.எம். (மாஸ்டர் ஆஃப் பேங்கிங் மேனேஜ்மென்ட்) படிச்சேன். என்னோட திறமைக்கு, படிச்சு முடிச்சதுமே தனியார் கம்பெனியில அக்கவுன்ட்டன்ட் வேலை குடுத்தாங்க.
மத்த சராசரி பொண்ணுங்கன்னா அத்தோட திருப்தி அடைஞ்சிருப்பாங்க. வேலைக்கு போனோமா மாசம் பொறந்தா சம்பளத்த வாங்குனோமான்னு இருந்துருப்பாங்க. ஆனா, நான் அப்படி நினைக்கல. என்னை மாதிரி, கை இல்லாம, கால் இல்லாம, கண் தெரியாம எத்தனையோ மாற்றுத் திறனாளிகள் படுற கஷ்டம் எனக்கு தெரியும். சராசரி மனுஷங்களுக்கு அவங்களோட வலியும் வேதனையும் முழுசா தெரியாது. ஆனா, அது அத்தனையையும் நான் அனுபவிச்சுத் தெரிஞ்சுக்கிட்டவ. நான் துணிச்சலா வெளியில வந்து போராடி ஜெயிச்சுட்டேன். ஆனா, என்னைப் போல இருக்கிற எத்தனையோ பெண்கள் சோறு கிடைச்சா போதும்ணு வெளியில் வரவே கூச்சப்பட்டுக்கிட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்குறாங்க.
அதுமாதியான அப்பாவி புள்ளைங்கள பாக்குறப்ப மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அவங்களுக்காக ஏதாச்சும் செஞ்சே ஆகணும்னு நெனச்சேன். குறிப்பா மாற்றுத் திறனாளி பெண்களுக்கு ஒரு ஊன்றுகோலா இருக்கணும்னு எனக்குள்ளேயே ஒரு தாகம். உடனே, யாரோட யோசனையையும் கேக்காம நானே வீடு வீடாக போய் பெண் மாற்றுத் திறனாளிகள சந்திச்சு பேசுனேன். என்னோட நம்பிக்கையான பேச்சுல அவங்களுக்கும் பிடிப்பு வந்து, மெல்ல மெல்ல வெளியில வர ஆரம்பிச்சாங்க. அது எனக்கு கிடைச்ச முதல் வெற்றி.
முன்னுக்கு வரணும், நாமும் மத்தவங்க மாதிரி தலை நிமிர்ந்து நிக்கணும்னு நினைச்சு என் பின்னால வந்த மாற்றுத் திறனாளி பெண்களை வைத்து 'தியாகம்’னு ஒரு அமைப்பை ஏற்படுத்தினோம். தியாகத்துல மெம்பரா சேர்ந்தவங்க, தங்களையும் உயர்த்திக்கிட்டு மத்தவங்களுக்கும் உதவிகளை செஞ்சாங்க. தியாகத்தின் மூலமா இதுவரை 3,500 மாற்றுத்திறனாளிப் பெண்களைச் சந்திச்சு கவுன்சிலிங் கொடுத்திருக்கோம்.
கடந்த ஏழு வருஷத்துல 178 பேருக்கு தையல் பயிற்சியும், 112 பேருக்கு கம்ப்யூட்டர் பயிற்சியும் கொடுத்து அவங்களோட வாழ்வாதாரத்துக்கு வழி செஞ்சிருக்கோம். இலவச மையம் அமைச்சு 129 மாற்றுத் திறனாளி பெண்களை பராமரிச்சுருக்கோம். மதுரைக்கு பக்கத்துல இருக்கிற 20 கிராமங்கள்ல 3000 ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமா டியூஷன் சொல்லிக் குடுத்து அறிவுக் கண்களை திறந்திருக்கிறோம்.
எங்கக்கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்ட மாற்றுத் திறனாளி பெண்களில் பலபேர் கம்ப்யூட்டர் சென்டர்களிலும் டெய்லரிங் கடைகளிலும் வேலை செய்யுறாங்க. சிலபேர் சொந்தமாவே தொழில் பண்றாங்க. இந்தப் பெண்களின் மறுமலர்ச்சிக்காக காலமும் பொழுதும் கழிஞ்சுட்டதால கல்யாணம் பண்ணிக் கணும்கிற நினைப்பே எனக்கு வரல. மத்தவங்களுக்கு கையா இருக்கிறோமேங்கிற சந்தோஷமே, நமக்கு கை இல்லையேங்கிற வருத்தத்தை மறக்கடிச்சிருச்சு". நிம்மதி பெருமூச்சு விட்ட அமுத சாந்தி, தொடர்ந்தும் பேசினார்.
எங்க சேவைக்காக 2 முறை மத்திய அரசு விருதும், 8 முறை மாநில அளவிலான விருதும், 21 முறை மாவட்ட அளவிலான விருதும், 2 முறை பல்கலைக்கழக விருதும் கிடைச்சிருக்கு. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இந்தக் கைய தொட்டுப்பிடிச்சுகிட்டு 'இன்னும் நிறைய சாதிக்கணும்மா’ன்னு வாழ்த்துனது என் மனசுல பசுமரத்து ஆணியா பதிஞ்சு கெடக்கு.
சில நல்ல உள்ளங்களோட தயவால மதுரை பக்கத்துல மேலக்கால் கிராமத்தில ஒரு ஏக்கர் நிலம் இலவசமாக கிடைச்சிருக்கு. அங்க சீக்கிரமே மாற்றுத்திறன் பெண்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம் அமைக்கிறதுதான் எங்களோட அடுத்த பிளான்" அசத்தலாய் சொன்னார் அமுத சாந்தி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago