தண்டனைக்குட்பட மறுக்கும் பாலியல் குற்றங்கள்!

By த.நீதிராஜன்

“தீவிரவாதிகளைத் தேடுவதாகச் சொல்லிக்கொண்டு எனது வீட்டுக்குள் ராணுவத்தினர் வந்தார்கள். என்னையும் என் எட்டு வயது மகளையும் பாலியல் வல்லுறவு செய்தார்கள். நான் ஊர் மக்களிடம் நியாயம் கேட்டேன். மக்கள் திரண்டுபோய் காவல் துறையை நெருக்கினார்கள்.

மூன்று நாட்கள் தயக்கத்துக்குப் பிறகு புகாரை ஏற்றுக்கொண்டது காவல் துறை. காவல் துறையை எல்லாம் மதிக்க முடியாது என்றார்கள் ராணுவத்தினர். இரண்டாண்டுகளாக நீதிமன்ற அடுக்குகளில் ஏறினோம். ஆனால் கடைசியில் ராணுவ நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்லிவிட்டார்கள்” என்று ஒரு ஆய்வு மாணவியிடம் குமுறியிருக்கிறார் அந்தக் காஷ்மீரத்துத் தாய்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் அவை தண்டனைக்குட்படுத்தப்படாத நிலையும் பங்காளாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஐந்து நாடுகளில் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக நடத்தப்பட்ட ஆய்வுகளைத் தொகுப்பு நூல்களாக வெளியிட்டிருக்கிறது டெல்லியைச் சேர்ந்த ஜுபான் பதிப்பகம். அதற்கான வெளியீட்டு விழாவில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி பகிர்ந்துகொண்ட அனுபவம்தான் இது.

சிறையா, பணிநீக்கமா?

சிங்கத்தின் குகைக்குள்ளிருந்து மீண்ட ஆடுகளைப்போல இருந்துள்ளது அந்தக் குடும்பம். ராணுவ நீதிமன்றம் போனதையும் அந்தப் பெண்கள் விவரித்திருக்கின்றனர். “எங்கே பார்த்தாலும் ராணுவம், ராணுவம், ராணுவம் மட்டும்தான். ஏழு நாள் அங்கே தங்கியிருந்தோம். 30 பேருக்கும் மேல் இருந்த ராணுவ அதிகாரிகளுக்கு முன்னாலே ராணுவ நீதிமன்றம் தினமும் விசாரித்தது.

நாங்க சொல்றதுதான் உண்மைன்னு ஏத்துக்கிட்டாங்க. என் கணவரிடம் ‘தப்பு செஞ்சவங்கள ஜெயிலுக்கு அனுப்பவா, டிஸ்மிஸ் செய்யவா?’ ன்னு கேட்டார் நீதிபதி. ‘டிஸ்மிஸ் செய்யுங்கள் ஐயா, அப்போதான் எங்கள மாதிரி வேற யாரும் பாதிக்கப்படாம இருப்பாங்க’ என்றார் அவர். அவங்கள டிஸ்மிஸ் செஞ்சுட்டாங்க” என்று சிங்கத்தை ஜெயித்த கதையை கண்கள் பளபளக்க சிலிர்ப்புடன் சொன்னார்களாம் அவர்கள்.

காஷ்மீரத்து மாணவி கஜாலா வழியாக அந்தத் தாயின் சிலிர்ப்பு அரங்கில் அமர்ந்திருந்தவர்களின் உடல்களுக்குள்ளே பாய்ந்தது. கஜாலா அதோடு விடவில்லை. பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தேடியிருக்கிறார். அவர்கள் மீண்டும் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர் என்பதை அவர் அறிந்தார். ஆனால் அதை இன்றுவரை அந்தக் குடும்பத்தினருக்கு அவர் தெரிவிக்கவில்லை.

குற்றமா, ஒழுங்கீனமா?

பணியில் ஒழுங்கீனம் என்ற அடிப்படையில்தான் ராணுவ நீதிமன்றம் பாலியல் குற்றங்களை விசாரிக்கிறது. அதை ஒரு குற்றமாகப் பார்க்கவில்லை என்று கஜாலா புரிந்துகொண்டார். அதனால்தான் ராணுவத்தினர் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட மனித உரிமை மீறல்களின் குற்றங்களை ராணுவ நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

காஷ்மீரத்துத் தாய் வெளியே வந்து போராடினார். ஆனால், தன்னைத்தானே தனக்குள்ளே புதைத்துக்கொள்பவர்கள்தானே அதிகம். அதனால் பாலியல் வன்முறை பற்றிய புள்ளிவிவரங்கள் உலக அளவில்கூடத் துல்லியமாக வெளிவருவது கடினம்.

1994- ல் ருவாண்டா நாட்டின் இனப் படுகொலைகளின்போது 2,50,000 முதல் 5,00,000 பெண்கள் வரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கின்றனர். சியாரா லியோன் உள்நாட்டுப் போரின்போது சுமார் 6,00,000 பேர். போஸ்னியா, ஹெர்சகோ யுத்தத்தில் 20,000 லிருந்து 50,000 வரை. 1996-லிருந்து காங்கோ நாட்டில் குறைந்தது 2,00,000 பேர் என்கிறது ஐ.நா சபையின் உத்தேசக் கணக்கு.

“குடும்பத்துக்குள்ளே நடக்கிற பாலியல் வன்கொடுமைகள் மட்டுமல்ல, பொது சமூகத்தில் உருவாகும் திட்டமிட்ட, திட்டமிடாத கலவரங்களின்போதும் பெண்ணின் உடல்கள் தாக்கப்படுகின்றன. அவற்றில் தலித் பெண்கள், ஆதிவாசிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ராணுவங்களின் செயல்பாட்டில் பெண்களின் மீதான பாலியல் கொடுமைகள் திட்டமிட்ட செயல்களாக இருக்கின்றன. இத்தகைய பெருமளவிலான குற்றங்கள் தண்டிக்கப்படாமலேயே போகின்றன. அவற்றைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்பதே இன்றைய முன்னுரிமை” என்கிறார் ‘அன்டூயிங் இம்ப்பியூனிட்டி’ (தண்டனைக்குட்பட மறுக்கும் நிலையை நீக்குவது) நூலாசிரியர் வ.கீதா.

பெண்ணிய வரலாற்றாளர் பேராசிரியர் உமா சக்ரவர்த்தி புத்தகங்களை வெளியிட்டுப் பேசுகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்பாரிகளை ஒடுக்குவது என்ற போர்வையில் பழங்குடிப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைச் செய்கிற நிலை இன்னமும் தொடர்வதைச் சுட்டிக்காட்டினார்.

தண்டனைக்குட்பட மறுக்கும் நிலை

தெற்காசிய நாடுகளில் பாலியல் வன்முறைகளும் அவற்றுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட மறுக்கும் நிலையையும் பற்றிய விவரங்களைத் தொகுக்கும் முயற்சி முதன்முதலாக நடந்துள்ளது. 1971-ல் வங்கதேச சுதந்திரப் போரின்போதும் 1947-ல் இந்தியப் பிரிவினையின் போதும் 2,00,000 லிருந்து 4,00,000 பேர்வரை பாலியல் வன்முறைக்கு ஆளானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான குற்றங்களில் எவரும் தண்டிக்கப்படவில்லை.

இலங்கையில், 26 ஆண்டுகால உள்நாட்டுப்போரில் பெண்களின் மீதான குற்றங்களும் உள்ளன. போரின் முடிவில் 90,000 பெண்கள் விதவைகளாகியுள்ளனர் என்றும், பெண் தலைமையிலான 50,000 குடும்பங்கள் ஆதரவற்ற வறுமையில் உள்ளன என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களின் மீதான பொதுச் சமூகத்தின் பார்வையை மாற்ற வேண்டும் என்றார் இந்த வெளியீட்டு விழாவில் இலங்கை பற்றிய புத்தகத்தை அறிமுகம் செய்த கவிஞ ரும் மொழிபெயர்ப்பாளருமான ப்ரேமா ரேவதி.

இலங்கையில் பாலியல் வன்முறைக் குள்ளாக்கப்பட்ட பெண் உடல்கள் தேசியவாதப் பிரச்சாரத்தின் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அந்தப் பெண்களுக்கான நீதிதான் கிடைக்கவில்லை என்றார் ப்ரேமா ரேவதி.

இலங்கையில் 20 ஆண்களுக்கும் 20 பெண்களுக்கும் எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் அந்த ஆண் உடல்கள் தமிழ் தேசியத்தின் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்படவில்லை. இது பெண்கள் மீதான வன்முறையின் மீதான பார்வை மாற வேண்டும் என்பதைக் காட்டுகிறது என்றார்.

பெரும்பாலும் நமது நீதித்துறை, சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகிறது. பாலியல் வல்லுறவு கொண்டுவிட்டு பிறப்புறுப்பில் வெடிகுண்டு வைத்தும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலைகள் நடந்துள்ளன. அந்த உடல்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு என்ன வகையான சாட்சியங்களை வைக்க முடியும்?

இதுதான் பாலியல் குற்றம் என்று நீதிமன்றம் செய்துவைத்துள்ள வரையறைகளுக்கு அப்பால் எத்தனையோ பரிமாணங்களில் பாலியல் குற்றங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன அவற்றை எப்படிக் கூண்டில் ஏற்றுவது என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

இத்தகைய தொடக்கங்கள் பெருகி நதியாக வேண்டும். அதன் பிரவாகத்தில்தான் பாலியல் குற்றங்களிலிருந்து விடுதலை பிறக்கும். இந்த தொகுப்பு நூல்களுக்குள்ளே இருக்கும் ஆய்வுகள் அதற்கு உதவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்