மிரிண்டா, ஃபான்டா என்ற இரண்டு குளிர்பானப் பெயர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் உள்ளர்த்தங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தமிழகத்தில் உள்ள பல ஸ்கேனிங் மையங்களில் பயன்படுத்தப்படும் சங்கேத வாத்தைகள் இவை. மிரிண்டா (எம்) என்றால் ஆண் குழந்தை, ஃபான்டா (எஃப்) என்றால் பெண் குழந்தை. இதைக் கண்டுபிடித்துச் சொல்வதற்கென்றே பெயர்போன டாக்டர்களும், தனி ஸ்கேனிங் மையங்களும் இருக்கின்றன. அதன்படி பார்த்தால் மிரிண்டாக்கள் பெருகுகின்றன. ஃபான்டாக்கள் அழிக்கப்படுகின்றன.
இந்தியாவில் ஆண்டுதோறும் 5 லட்சம் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றன என்கின்றன சில அறிக்கைகள். பெண் குழந்தையை வளர்த்து, கட்டிக்கொடுப்பது எளிதான காரியமல்ல என்ற அவநம்பிக்கையே, பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுவதற்கு முதன்மைக் காரணம். கிராமங்களில்தான் பெண் சிசு கொல்லப்படுவது அதிகம் என்று முன்பு நம்பப்பட்டது. இது முற்றிலும் தவறு. சிற்றூர்களிலும், நகரங்களிலும்தான் கரு நிலையிலேயே பெண் குழந்தைகள் பெருமளவு அழிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன சமீபத்திய ஆய்வுகள்.
உயர் கல்வி, சமூக அந்தஸ்து, பொருளாதார அந்தஸ்து ஆகியவற்றுக்கும் பெண் குழந்தை விகிதம் குறைவாக இருப்பதற்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறியப்பட்டு கருச்சிதைவு செய்யப்படுவதே பெண் குழந்தை விகிதம் குறைவதற்கு முதன்மைக் காரணம்.
பொருளாதார வசதியும், படிப்பறிவும் பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் இல்லை. நவீன அறிவியல் தொழில்நுட்பமும் அதை எளிதாகப் பயன்படுத்துவதற்கான நகர்ப்புற வாய்ப்பு வசதியும், படிப்பறிவுமே பெண் குழந்தைகளுக்கு எதிராக முடிகின்றன.
கணக்கெடுப்பு சொல்லும் உண்மை
ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் பெண் குழந்தை விகிதம் குறைந்துவருவது பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்புகளிலேயே 2011இல் பெண் குழந்தை விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 என்ற அளவுக்கு மிகக் குறைவாக இருக்கிறது. 2001 கணக்கெடுப்பில் இது 927ஆக இருந்தது. பெண் குழந்தை விகிதம் மிசோரத்தில் மிக அதிகமாக 971ஆகவும், ஹரியானாவில் மிகக் குறைவாக 830 ஆகவும் இருக்கிறது. பெண் குழந்தை விகிதம் குறைவாக இருப்பது பாலினத் தேர்வு அடிப்படையில் கருக்கலைப்பு செய்யப்படுவதற்கான தெளிவான அடையாளம்தான்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள மிகக் குறைவான பெண் குழந்தை விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 935 பெண் குழந்தைகள். இந்த எல்லையைத் தாண்டியிருப்பவை இந்தியாவின் 10 முக்கிய மாநிலங்கள். அனைத்தும் கிழக்கிலும் தெற்கிலும் இருப்பவை.
பெண் குழந்தை விகிதம் குறைவாக இருக்கும் மாநிலங்களில் பெரும்பாலானவை மேற்கு, வடக்குப் பகுதியைச் சேர்ந்த மாநிலங்கள்தான். இதில் எல்லோராலும் புகழப்படும் குஜராத், மகாராஷ்டிரம், ஹரியானா ஆகியவை இருக்கின்றன.
1991 மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெண் குழந்தை விகிதம் குறைவாக இருந்ததால் நடைபெற்ற போராட்டங்களின் அடிப்படையில்தான், கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வெளிப்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டமே கொண்டு வரப்பட்டது. ஆனால், 2001 மக்கள்தொகை கணக் கெடுப்பில் பெண் குழந்தை விகிதம் முந்தைய கணக்கெடுப்பை விடவும் குறைந்திருந்தது. அதே நேரம், அந்தச் சட்டம் வந்த பிறகு ஸ்கேனிங்கில் கருவிலிருப்பது ஆணா, பெண்ணா என்பதைச் சொன்ன குற்றத்துக்காக இதுவரை யாரும் தண்டிக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை.
சுடும் மற்றொரு நிஜம்
மற்றொருபுறம் 2012இல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 74,000 பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகளைவிட அதிக எண்ணிக்கையில் இறந்துள்ளன. நாட்டில் பொருளாதார வசதியில் உயர்ந்த மாநிலங்களில் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றன என்றால், ஏழை மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறந்த பிறகு உயிர் வாழ்வதில் சிக்கலைச் சந்திக்கிறார்கள். கீழ்க்கண்ட ஆய்வு இதை உறுதிப்படுத்துகிறது.
மும்பை சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தைச் (IIPS) சேர்ந்த பேராசிரியர் உஷா ராம், டொரன்டோ பல்கலைக்கழக உலக சுகாதார ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரபாத் ஜா ஆகியோர் மாவட்ட அளவில் குழந்தை இறப்பு விகிதம் தொடர்பாக நடத்திய ஆய்வு லான்செட் குளோபல் ஹெல்த் இதழில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின்படி ஏழை மாநிலங்களில் 5 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.
சத்தீஸ்கர், பிகார், ஜார்கண்ட், ஒடிசா, அசாம் போன்றவைதான் இந்த வகையில் மிகவும் மோசமான மாநிலங்கள். இந்த ஐந்து மாநிலங்களில்தான் 77 சதவிகித இறப்பு நடக்கிறது. எல்லோரும் போற்றும் குஜராத்திலும் பெண் குழந்தை இறப்பு விகிதம் அதிகம்.
5 வயது வரையிலான குழந்தைகள் என்று பார்க்கும்போது, நாட்டில் மொத்தமுள்ள 597 மாவட்டங்களில் 430 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் இறப்பு, ஆண் குழந்தைகளைவிட அதிகமாக இருக்கிறது. உலகம் முழுவதும் பெண் குழந்தைகளின் பிழைப்பு விகிதம் அதிகம் என்பதால், ஆண் குழந்தைகளே அதிகம் இறந்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் பெண் குழந்தைகள் இறப்பு அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணம் பாலினப் பாகுபாட்டின் அடிப்படையில் தொடர்ந்து வரும் பண்பாடும் பழக்கவழக்கங்களும்தான்.
இப்படிப் பெண் குழந்தை விகிதம் குறைவாக இருப்பதும், பெண் குழந்தை இறப்பு விகிதம் அதிக மாக இருப்பதும் பிற்காலத்தில் ஏழைப் பெண்கள் கடத்தப்படுதல், வன்முறைக்கு உட்படுத்தப்படுதல், வலுக்கட்டாயமாக பலதார மனம் புரிய வற்புறுத்தப்படுதல் போன்ற பிரச்சினை களுக்குக் காரணமாக அமைகின்றன.
சமூகத்தில் ஆழ வேரூன்றியுள்ள ஆணாதிக்கத்தை வேரறுப்பதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல், வெறுமனே கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தால் மட்டும் பெண் இனத்துக்கு மறுவாழ்வைத் தந்துவிட முடியாது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
ஒரு வேளை சட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டால் பெண் குழந்தைகள் பிறப்பதை வேண்டுமானால் பாதுகாக்க முடியுமே தவிர, அதன்பிறகு இறப்பதைத் தடுக்க முடியவில்லை. பெண்களுக்கு எதிராக இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மனோபாவத்தை மாற்றாமல், வேறு மாற்றங்கள் சாத்தியமில்லை. பெண் இனத்துக்குச் சுமூகமான சூழ்நிலையை உருவாக்கித்தர வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago