அறிவும் அழகுதான்

By ஆர்.சி.ஜெயந்தன்

அபிராமியை அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியாது. பல தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் ‘விருமாண்டி’யில் கிராமத்து அன்னலட்சுமியாக அபிராமிக்குக் கிடைத்த அடையாளம், அவரது இயல்பான நடிப்புத் திறனுக்குக் கிடைத்த சன்மானம். இன்றும் தமிழ் ரசிகர்களை வசீகரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்தமுறை நடிப்பின் மூலமோ அழகின் வாயிலாகவோ அல்ல. அறிவு சார்ந்த விவாதத் தளத்தில் ஒரு நடிகையால் இயங்க முடியும் என்பதை நிரூபித்ததன் மூலம்.

தமிழ்த் தொலைக்காட்சி உலகின், வெற்றிகரமான விவாத நிகழ்ச்சிகளில் முதன்மைப் பட்டியலில் இருந்துவருகிறது விஜய் டிவியின் ‘நீயா? நானா?’ விவாத அரங்கம். இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் ஆக்கப்பூர்வமான தலைப்புகள், மனத்தடையின்றி பேசும் பங்கேற்பாளர்கள், தலைப்பை மேலும் கூர்மையாக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகிய அனைத்து அம்சங்களோடு, தனது பேச்சுத்திறனாலும், அனைவரையும் லாவகமாகக் கையாளும் ஆளுமையாலும், நிகழ்ச்சியைத் தனது வலுவான தோள்களில் சுமந்து நிற்பவர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத். எத்தனையோ விவாத அரங்குகளில் தனித்து நிற்கும் இந்த ‘நீயா நானா’வுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடிய அளவுக்கு விரைவிலேயே வளர்ந்திருக்கிறது புதுயுகம் டிவியின் ‘ரிஷிமூலம்’. இந்த வளர்ச்சிக்கு அதன் தொகுப்பாளர் அபிராமி ஒரு முக்கியக் காரணம் என்று சொல்ல வேண்டும்.

அறிவும் நடிகையின் அடையாளமே

திரை நடிகை என்றால் கவர்ச்சியின் அடையாளம், அவர்கள் அழகே காட்சி ஊடகத்துக்கான கச்சாப்பொருள் என்று பொதுமனதில் ஊறிப்போன பார்வையை அபிராமிக்கு முன்பே அசைத்துப் பார்த்தவர்கள் பலர். சுஹாசினி, ரோகிணி, அனுஹாசன் ஆகியோர் அதில் முக்கியமானவர்கள். அபிராமி இவர்களது பங்களிப்புக்குச் செழுமை சேர்த்திருக்கிறார். ஆழமான தலைப்புகளில் அழுத்தமான விவாதங்களைத் திறம்பட ஒருங்கிணைப்பதன் மூலம் நடிகைகள் பற்றிய பொதுவான பார்வையை வலுவாகக் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்.

கேரளத்தில் பிறந்து வளர்ந்து, மலையாள சினிமாவில் முகம்காட்டித் தமிழ்சினிமாவுக்கு வந்த அபிராமியின் தாய்மொழி தமிழ் அல்ல. ரிஷிமுலம் நிகழ்ச்சியில் ஆங்கிலச் சொற்களை அங்கங்கே தூவிக்கொண்டாலும் தமிழ்ச் சொற்களை உடைக்காமலும் சிதைக்காமலும் பேசும் அழகில், ஒரு நடிகையால் அறிவார்ந்த அரங்கில், மொழியைச் சிதைக்காமல் உரையாட முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்.

பிசிறில்லாத கணீரென்ற குரல். கோர்வையாகப் பேசும் திறன், பங்கேற்பாளர்களிடம் கருத்துகளைப் பிடுங்க முயற்சிக்காமல், அவர்களைத் தேவையான அளவு பேசவிட்டு, தேவைப்படும் இடத்தில் நாசூக்காகக் கத்தரித்து விவாதத்தை நகர்த்திச் செல்லும் பாங்கில் பளிச்சிட முடிகிறது அபிராமியால். விவாதத்தை ஒவ்வொரு கணமும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்த ஊடாட்டத்துக்கு அபிராபியின் தோழமை நிரம்பிய தோற்றமும் மட்டுமல்ல, அழகான அணுகுமுறையும் அடித்தளமாக அமைந்துள்ளன.

உரையாடல் அரங்கில், தொகுப்பாளரின் உறுத்தாத உடல்மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதில் கச்சிதமான இயல்பு கைகூடி வந்திருக்கிறது. உடல்மொழியின் முக்கிய அங்கமாக இருக்கும் புன்னகையும், அளவான, ஆனால் மலர்ச்சியான சிரிப்பும் அபிராமியின் கூடுதல் பலம்.

வெற்றியின் காரணகர்த்தாக்கள்

விருமாண்டிக்குப் பிறகு திரையிலிருந்து விலகியிருந்த அபிராமி ரிஷிமூலம் நிகழ்ச்சிக்கு எப்படித் தேர்வு செய்யப்பட்டார்? “எந்தத் திட்டமிடலும் இல்லை. அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்துவருகிறேன். விஸ்ரூபம் 2 படத்தில் நடிக்க கமல் சார் அழைத்திருந்தார். நான் நடித்த காட்சிகளுக்குக் குரல் கொடுப்பதற்காகவே சென்னை வந்தேன். அப்போதுதான் அழைத்தார்கள். தொலைக்காட்சியில் வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் என் பொழுதுகளை வீணாக்க நான் விரும்பவில்லை. இதை அவர்களிடம் சொன்னபோதுதான் ரிஷிமூலம் நிகழ்ச்சியைப் பற்றி எனக்குச் சொன்னார்கள். எனக்கு நம்பிக்கை வந்தது” என்று சொல்லும் அபிராமி, இந்த நிகழ்ச்சி தன்னால் மட்டும் ஜெயிக்கிறது என்று சொல்ல முடியாது என்று மறக்காமல் குறிப்பிடுகிறார். இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் இயக்குனர் செல்வகுமார், உள்ளடக்கத்தையும் ஸ்கிரிப்டையும் உருவாக்கும் குழுவை வழிநடத்துபவரகளான தேவிபாரதி, எம். சுசித்ரா என்று நிறைய பேரின் உழைப்பு பின்னால் இருக்கிறது என்று பணிவு காட்டுகிறார் அபிராமி.

இத்தனை குறுகிய காலத்தில் தடங்கல் இல்லாமல் உரையாட எப்படிக் கற்றுக்கொண்டார் என்னும் வியப்புக்கு அவரிடமிருந்து முதலில் ஒரு புன்னகை பதிலாக வருகிறது. தொடர்ந்து, “என் அம்மா, அப்பா இருவருமே யோகா ஆசிரியர்கள். எங்கள் வீட்டில் வாயடக்கம் ரொம்ப முக்கியம். ஆனால் அந்த ஒரு விதியை மட்டும் நான் சிறு வயது முதலே உடைத்து நொறுக்கிவிட்டேன். சின்ன விஷயமாக இருந்தாலும் விவாதிப்பதும், எதிர்க்கேள்வி கேட்பதும்தான் என் குணம். அப்பா, நீ வக்கீல் ஆகிவிடு; உனக்கு சரியாக இருக்கும் என்பார். எதிர்பாராமல் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்ததில் அதன் தொடர்ச்சியாக ஹீரோயின் ஆனேன்” என்று சொல்லும் அபிராமி, திரைக்கு வருவதற்கு முன் கேரளத்தின் ஏசியா நெட் தொலைகாட்சிக்காக ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவமும் இருக்கிறது என்கிறார்.

இவருக்கான ரோல் மாடல் யார்? “பொதுவெளியில் தயங்காமல் கருத்துக்களைச் சொல்லும் குஷ்பூவின் துணிச்சலும் ரோகிணியின் தமிழ் உச்சரிப்பும் என்னைப் பாதித்திருக்கின்றன. இடைவிடாமல் இயங்கிக்கொண்டே இருப்பதை சுஹாசினியிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லும், அபிராமியிடம் உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். நீங்கள் யாருக்கு ரசிகை என்றால், “கோபிநாத்” என்று பளிச்சென்று பதில் தருகிறார். “ஆனால் கோபிநாத்துடன் என்னை ஒப்பிட்டு எழுதிவிடாதீர்கள். அவரது இடத்தை நான் எட்ட வேண்டுமானால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். பயணத்தின் ஆரம்பத்தில்தான் இருக்கிறேன்” என்கிறார் எச்சரிக்கையாக.

யார் சொன்னது அழகும் புத்திசாலித்தனமும் ஒன்றாக இருக்காது என்று?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்