தவிச்ச வாய்க்கு தண்ணியில்லை என்றாலும் பல வீடுகளில் தாய்மார் கள் சலிப்புடன் கெஞ்சுவது இதுதான். “பாப்பா தண்ணி குடிம்மா….”. ஆனால், தண்ணீர் குடிப்பதைக் குறிப்பாகப் பெண் பிள்ளைகள் தவிர்க்கிறார்கள். பள்ளிகளுக்குக் கொடுத்தனுப்பும் தண்ணீர் புட்டிகள் பெரும்பாலும் அப்படியே திரும்பி வருகின்றன. அவர்களுக்குத் தாகம் எடுப்பதில்லையா? பல குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே சிறுநீர் கழிப்பது தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவர்களிடம் செல்ல நேரிடுகிறது. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால், இந்தப் பெண் பிள்ளைகளுக்குத் தண்ணீர் குடிப்பதில் என்ன பிரச்சினை? பல குழந்தைகள் சொன்ன பதில்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. “தண்ணீர் குடித்தால் பாத்ரூம் வருது” என்பது அவற்றில் முக்கியமானது.
“பெண் குழந்தைகளுக்குச் சிறுநீர் தொற்று அதிகம் ஏற்படுகிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாகின்றன. சிறுநீரை நீண்ட நேரத்துக்கு அடக்கிவைப்பதுதான் இதற்கான முக்கியக் காரணம். ஆண்களைவிடப் பெண்களுக்குச் சிறுநீர்ப்பாதை சிறியதாக இருப்பதால் அவர்கள் உடனுக்குடன் சிறுநீர் கழித்துவிட வேண்டும்” என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
பள்ளிகளில் கழிப்பறை அவசியமில்லையா?
ஆம், சிறுநீர் கழிப்பதுதான் பெண் பிள்ளைகளின் பிரச்சினை. பெண்ணின் உடலே அவளின் மிகப் பெரிய பிரச்சினையாக வாழ்க்கை முழவதும் ஆக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொடர்கதையின் முதல் அத்தியாயம் குழந்தைகளின், ‘பாத்ரூம் வருமே’ என்ற கவலையில் தொடங்குகிறது. எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க நமது பெற்றோர்கள் பள்ளி வாசல்களில் தவமிருக்கிறார்கள். சில குறிப்பிட்ட பள்ளி, கல்லூரிகளில் படித்தால்தான் படிப்பு வரும் அல்லது படிப்பு வருகிறதோ இல்லையோ பிற்காலத்தில் வேலைவாய்ப்புச் சந்தையில் மதிப்பிருக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் பெற்றோரில் பலருக்கும் அந்தப் பள்ளி வளாகத்தில் கழிப்பறை இருக்கிறதா என்றும் அது போதுமான அளவில் இருக்கிறதா என்றும் பார்க்கிற நினைவுகூட வருவதில்லை. எந்தப் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பிலும் பெற்றோர் தரப்பிலிருந்து இது ஒரு பிரச்சினையாக்கப்படுவதில்லை. ஆனால், உண்மை என்னவெனில் புகழ்பெற்ற பல பள்ளி வளாகங்களில்கூடப் போதுமான கழிப்பறைகள் கிடையாது. கிட்டத்தட்ட எந்தப் பள்ளியிலும் மாணவர் எண்ணிக்கை விகிதத் துக்கு ஏற்ப கழிப்பறைகள் இல்லையெனத் துணிந்து சொல்லலாம். அப்படியே இருக்கும் கழிப்பறைகளும் சரிவரப் பராமரிக்கப்படுவது கிடையாது.
அறியாப் பருவத்தில் தொடங்கும் பிரச்சினை
இந்தக் கொடுமை நகரங்களில் விவரம் அறியாப் பிஞ்சுப் பருவத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. பிளே ஸ்கூல் என்றழைக்கப்படும் மழலையர் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகள் மலஜலம் கழிப்பது தவறு என்ற உணர்வைத்தான் முதலில் பெறுகிறார்கள். இதற்காக ஏன் நாம் ஆசிரியர்களிடமோ ஆயாக்களிடமோ திட்டு வாங்குகிறோம் என்பது அந்தப் பிஞ்சு உள்ளங்களுக்குப் புரிவதேயில்லை. இந்தக் கொடுமைக்கு ஆண் குழந்தைகளும் ஆளாகிறார்கள். ஆனால், பெண் குழந்தைகளுக்கு அது அவர்களது வாழ்நாள் வன்முறையின் தொடக்கப் புள்ளியாக அமைந்து, தொடரும் வன்முறையாகிவிடுகிறது. அதன் பின் பள்ளிகளில் தெருக்களில் பேருந்து நிறுத்தங்களில் பேருந்து கள் நிற்குமிடங்களில் கழிப்பறை என்பது பெண்களுக்குத் தொடரும் பிரச்சினையாகவே ஆகிவிடுகிறது.
சிறுவயதிலிருந்தே பெண் குழந்தை களுக்குத் தங்கள் உடல் குறித்து மனதில் ஓர் இருண்ட இடம் உருவாக்கப்படுவதும் இங்கிருந்துதான். தங்கள் உடல் சார்ந்த பிரச்சினைகள் பொதுவெளியில் வைத்து பேசப்படவோ விவாதிக்கப்படவோ உரியவை அல்ல என்று அந்தக் குழந்தைக்கு இந்தச் சமுதாயம் இப்படித்தான் உணர்த்துகிறது. இருவேறு பாலினத்தவரோடு மூன்றாம் பாலினத்தவரும் இணைந்து இயங்கும் ஓர் இடத்தில் ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழிக்கலாம். இரண்டாம் பாலினத்தவ ராகிய பெண்களுக்குப் பேருந்து நிறுத்தம் போன்ற சில இடங்களில் மட்டுமே பொதுக் கழிப்பறை இருக்கிறது. மூன்றாம் பாலினத்தவருக்குக் கழிப்பறைகளே இருப்பதில்லை. இந்த லட்சணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம், மக்களை வீடுகளில் கழிப்பறை கட்ட ஊக்குவிக்கும் வேதனையை யாரிடம் போய் முறையிடுவது? அதற்கு பொதுவான வரி போதாதென்று தனி வரி வேறு. கொடுமை!
இன்றே தொடங்குவோம் மாற்றத்தை
இதற்கான பரிகாரத்தை நாம் பள்ளிகளிலிருந்தே தொடங்க வேண்டும். ஒரு குழந்தை போதுமான அளவில் தண்ணீர் குடிக்கிறதா, முறையாகச் சிறுநீர் கழிக்கிறதா என்பதை மழலையர் பள்ளி தொடங்கி ஐந்தாம் வகுப்புவரை கல்வி நிலையங்களே உறுதி செய்யும் பொறுப்பெடுக்க வேண்டும். இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை மருத்துவ நிபுணர்கள், உளவியலாளர்கள் துணையோடு குழுக்கள் அமைத்து ஆலோ சனை பெறலாம். உண்மையில் நாம் விவாதிக்கும் இந்தப் பிரச்சினை இன்றைய பெண்களின் அடிப்படை பிரச்சினைகளில் ஒன்று.
முக்கியமாக நகர்ப்புறப் பெண்கள். அதிலும் நடுத்தட்டு மக்கள். வயல்வெளிகளில் வேலை செய்யும் பெண்கள், வீதிகளில் வியாபாரம் செய்யும் பெண்கள் கிடைத்த இடத்தில் ஒதுங்கிக்கொள்வதை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம். அடக்கிக் கொள்வது என்ற சிக்கல் அவர்களுக்கில்லை. ஆனால், நகர வளர்ச்சியும் ஓரளவு பெண்களின் உடை மாற்றமும்கூட இந்தப் பிரச்சினையை அவர்களுக்கு மேலும் சிக்கலாக்கியிருக்கின்றன. நடைபெறும் நாகரிக மாற்றங்கள் பெண்களின் இருத்தலையும் அவர்களின் தேவையையும் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. திட்டமிடுகிறவர்களின் மூளையில் பெண்கள் இடம்பெறுவதில்லை.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி ஏவுகணைச் சோதனை நிலையம் அல்லது நிறுத்தங்களில் ஆரம்பத்தில் பெண் ஊழியர்களுக்குக் கழிப்பறை கட்டப்படவில்லை. பெண் ஒருவர் பேருந்து ஓட்டுநராக நியமிக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்துத் துறையை நாங்கள் அணுகிய போது அவர்கள் சொன்ன பதில்களில் ஒன்று அவர்களுக்கென்று நாங்கள் தனிக் கழிப்பறையெல்லாம் கட்ட முடியுமா என்பதுதான். இந்த இரண்டு உதாரணங்களை இங்கு சுட்டிக்காட்ட காரணம், திட்டமிடும் இடத்தில் இருப்பவர்களின் சிந்தனையில் பெண்களுக்கு இடமில்லை என்பதை உணர்த்தவே.
(இன்னும் தெளிவோம்)
கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago