ஒரு காலத்தில் துருக்கி நாட்டில் பெண்களின் கால்களைச் சிறுவயதிலேயே கட்டிப்போட்டுக் குட்டைக் கால்களாக ஆக்கிவிடுவார்களாம். துருக்கியில் புரட்சியாளர் கமால் பாட்சா காலத்தில் அந்தக் கொடிய பழக்கம் ஒழிக்கப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. சிறு வயதிலேயே பெண்களின் வளர்ச்சியைத் தடுப்பது உலகெங்கும் பல்வேறு வடிவத்தில் நடைபெற்றிருக்கிறது. அதன் ஒரு கோரமான வடிவம்தான் இந்தப் பழக்கம்.
இதைப் போன்ற கண்ணுக்குத் தெரிகிற கொடுமைகள் இன்று அவ்வளவாக இல்லையென்றாலும் கண்ணுக்குத் தெரியாத, கருத்துக்குப் புலப்படாத பல்வேறு வடிவங்களில் பெண்ணின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி இரண்டுமே கட்டுப்படுத்தப்படுகின்றன.
ஆண் குழந்தை ஏக்கம்
ஆறு வயதுப் பெண் குழந்தைகள் கிராமங்களில் சோறு ஆக்கி குழம்புகூட வைத்துவிடுகிறார்கள் என்பதை நகர்ப்புறத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள் நம்ப மறுக்கலாம். ஆனால், பெரும்பாலான கிராமங்களின் அனுபவம் அது. ஒரு குழந்தை போதுமா, இரண்டாவது குழந்தை வேண்டுமா என்பதெல்லாம் ஆண் குழந்தையின் பிறப்பை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. கிராமங்களில் மட்டுமல்ல; நகரங்களிலும் இதே நிலைதான். இந்தக் காலத்தில்கூட நான்கைந்து குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்களா என்ற வியப்பு மிகுந்த கேள்விக்கு அவர்கள் சொல்லும் பதில், “ஆமாம் ஆம்பிளைப் பிள்ளை வேண்டுமே” என்பதாக இருக்கிறது.
நான்கு குழந்தைகளும் பெண் குழந்தையாகப் பிறந்தால் ஐந்தாவதாகப் பையன் பிறப்பான் என்று கர்ப்பம் தாங்க வேண்டிய நிலை பெண்ணுக்கு. சொத்தை ஆள்வதற்குத்தான் ஆண் வாரிசு என்றில்லை, சொத்தே இல்லாதவர்களும் சாகும்வரை உரிமையாய்ச் சோறு கேட்க ஆம்பிளைப் பிள்ளை வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆம்பிளைப் பிள்ளையிடம்தான் வாழ வேண்டும் என்ற சமூகக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு இவர்கள் நினைப்பில் குறை காண என்ன இருக்கிறது?
கொள்ளி போடவா பிள்ளை?
சொத்து இருக்கிறவர்களாவது சொத்தை வைத்துக்கொண்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்ளலாம். ஆனால், சொத்தே இல்லாதவர்களுக்கு அடிச்சாலும் பிடிச்சாலும் ஆம்பிளைப் பிள்ளை இருந்தால்தானே திண்ணையிலாவது உரிமையாக உட்கார முடியும்? இப்படியொரு நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து குழந்தை பெற்றுக்கொள்வதும், பெண் குழந்தைகளைப் பிறந்தவுடனேயே அழிக்க நினைப்பதும் தவறு என்றும் நாமும் அரசாங்கமும் சொல்லலாம். ஆனால், அங்கீகாரத்துடன் கூடிய உரிமையான சாப்பாட்டை நாமோ இந்த அரசாங்கமோகூடப் போட முடியாது. அப்படி யார் சோறு போட்டாலும் அதைப் பெறும் அந்த முதியவர்களின் மதிப்பு குறையுமே தவிர, கூடாது.
அப்படியே சோறு கிடைத்தாலும் கொள்ளி கிடைக்குமா? ஆம்பிளைப் பிள்ளை கொள்ளி போடலைனா கட்டை வேணா வேகலாம், ஆனால் ஆத்மா சொர்க்கம் போய்ச் சேருமா? - இப்படி மதம், கலாச்சாரம், பொருளாதாரம், சமுதாய உரிமை என்ற வலைப் பின்னல்களுக்குள் எளிய மனிதர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அந்தத் தவிப்பே அவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் பலர் நான்கைந்து குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். ஆண் குழந்தை வேண்டும் என்று நினைத்துப் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் அழிக்கிறார்கள்.
சாப்பிட்ட தட்டை யார் எடுப்பது?
இது ஒருபுறமிருக்க இந்தக் குடும்பங்களில் கூடும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையால் பெருகும் வீட்டு வேலைகளைத் தாங்குமாறு ஐந்து வயதிலிருந்தே பெண் குழந்தைகள் பயிற்சியளிக்கப்படுகிறது. இந்தச் சுமையுடன்தான் அவர்கள் படிக்க வேண்டும். கிராமங்களில் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட பிறகும்கூட அவர்கள் மீது ஏற்றப்பட்டிருக்கும் வீட்டு வேலைப் பளு குறைக்கப்படவில்லை. பல கிராமங்களில் வீட்டு வேலைப் பளுவால் பெண் குழந்தைகள் தனிப் பயிற்சிக்கெல்லாம் (Tuition) அனுப்பப்படுவதில்லை.
புகுந்த வீட்டில் தனது சுமைகளைப் பகிர்ந்துகொள்ள மகளின் வளர்ச்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் தாய்மார்கள். தாய் ஊட்டி விட்ட பருவம் முடிந்து அந்த ஏக்கம் மறையும் முன்பாகவே தான் சாப்பிட்ட தட்டையும் அப்பா சாப்பிட்ட தட்டையும் அண்ணன் சாப்பிட்ட தட்டையும் எடுக்க வேண்டும் என்ற முதல் கட்டளை பெண்ணுக்கு இடப்படுகிறது. வேலை செய்யப் பயிற்றுவிக்கப்படுவது தவறல்ல. ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் அவர்களால் இயன்ற வேலைகளை செய்யப் பழக்குவது அவர்களைச் சான்றோர்களாக்குவதற்கான முதல் படி. ஆனால், அதில் அடிமைத்தனமும் பாலின பேதமும் குழைத்துக் கொடுக்கப்படுவதே சோகம். அப்பாவும் அண்ணனும் அதன்பின் தம்பியும் அவரவர் சாப்பிட்ட தட்டை ஏன் எடுப்பதில்லை? அவரவர் துணிகளை ஏன் அவரவர் துவைப்பதில்லை?
பெண் என்னவாக வேண்டும்?
குடும்ப வேலைகளை ஜனநாயகப்படுத்துவது பற்றி விரிவாகப் பின்னர் விவாதிக்கலாம். பெண் குழந்தைகளின் வளர்ச்சியை முக்கியமாகக் கிராமங்கள், சிறு நகரங்களில் மேற்கண்ட அம்சங்கள் எந்த அளவுக்குப் பாதிக்கின்றன என்பது பற்றி மட்டும் பார்ப்போம்.
சிறு வயதிலேயே பிறவி உழைப்பாக வீட்டு வேலைகள் பெண் குழந்தைகளின் மீது சுமத்தப்படுகின்றன. இது அவர்கள் சிந்தனையில் போடப்பட்ட முதல் விலங்காக மாறிவிடுகிறது. நீ என்னவாக வரப்போகிறாய் என்ற கேள்வி இயல்பாகவே பெண்ணுக்கு அந்நியப்பட்டு விடுகிறது. ஏனெனில், நான் வீட்டைப் பராமரிப்பவளாக, குழந்தைகளை வளர்ப்பவளாக இருப்பேன் என்பது பெண்களுக்குத் தங்கள் வாழ்க்கை எல்லையை வகுப்பதற்குப் போதுமானதாக இருக்கிறது. இதனால் தான் என்னவாக வர வேண்டும் என்ற கேள்வி ஆணுக்கு உறுத்துவதுபோல் பெண்ணுக்கு உறுத்துவதில்லை. ஏனெனில், அந்தக் கேள்விக்கான பதில் அவள் மூளைக்குள் ஏற்கெனவே திணிக்கப்பட்டுவிடுகிறது. ஆம், வீட்டு வேலைகள் பெண்ணின் மூளைக்குப் போடப்படும் முதல் விலங்கு.
(இன்னும் தெளிவோம்)
கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago