சமத்துவமும் சம உரிமையும் வேண்டும் என்ற முழக்கத்துடன் புரட்சிக் குரல்கள் ஒலித்த ரஷ்யாவிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகை ஒன்று சமீபத்தில் இப்படி எழுதியிருக்கிறது: ‘தங்கள் கணவர் ஏற்படுத்திய காயங்களுக்காகப் பெண்கள் இனி பெருமிதப்பட்டுக்கொள்ள வேண்டும்’. குடும்ப வன்முறை தொடர்பான சில கிரிமினல் குற்றங்களைத் தகுதி குறைப்பு செய்து ரஷ்ய அரசு வெளியிட்ட சட்டத் திருத்தத்தையொட்டி அந்தப் பத்திரிகை வெளியிட்ட பகடி கட்டுரையின் சில வரிகள் அவை.
ரஷ்யா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பெண்கள் குறித்த பார்வையும் அணுகுமுறையும் பிற்போக்குத்தனத்தின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. ரஷ்யாவைப் போல விமர்சனக் கட்டுரை வெளியிடும் அளவுக்கு, இங்கே நிலைமை இன்னும் மோசமாகவில்லை. ஆனால் அதற்கான அத்தனை சாத்தியமும் இருக்கிறது என்பதைத்தான் அதிகரித்துவரும் பெண்கள் மீதான வன்முறைகளும் நிலுவையில் கிடக்கும் வழக்குகளும் உணர்த்துகின்றன.
எவையெல்லாம் வன்முறை?
இந்தியாவில் அனைத்து விதமான வன்முறைகளிலிருந்தும் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அந்தச் சட்டங்கள், அனைத்துத் தரப்புப் பெண்களும் பயன்படுத்தும் வகையில் இருக்கின்றனவா? அல்லது எல்லாக் கொடுமைகளுக்கும் சட்டத்தின் துணையை ஒரு பெண் நாடிவிட முடிகிறதா? அதற்கு முன் எவையெல்லாம் வன்முறையில் அடங்கும் என்ற தெளிவு எல்லாப் பெண்களுக்கும் இருக்கிறதா? அம்மா, மனைவி, மகள், மாமியார், மருமகள் இப்படி குடும்பத்துக்குள் இருக்கும் பெண்களை வார்த்தைகளால் காயப்படுத்துவதும் வன்முறையில் அடங்கும் என்கிறது சட்டம்.
ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்கள் மீது வீசப்படும் அவச்சொற்களைப் பொறுத்துக்கொள்கிறார்களே தவிர, ஏன் என்று கேள்விகூட கேட்பதில்லை. காரணம் அப்படிக் கேட்கிறவர்களை குடும்பப் பெண்ணாக ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்ற பயம். மீறி கேட்கிற பெண்களையும், “என்ன இப்போ? கோவத்துல ஒரு வார்த்தை பேசிட்டான். இதைக் கண்டுக்காம விடுவியா? அதை விட்டுட்டு பெருசுபடுத்தினா நமக்குதான் நஷ்டம்” என்று அறிவுரை என்ற போர்வையில் மிரட்டுவார்கள்.
அனைத்தையும்பொறுத்துக்கொள்ளணுமா?
எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் எப்போதும் உற்சாகமாக இருப்பார். ஒருநாள் முகமெல்லாம் வீங்கி, அழுது சிவந்த கண்ணோடு இருந்தார். காரணம் கேட்டபோது, “அவருக்கும் எனக்கும் நேத்து சண்டை. ரெண்டு பேரும் மாறி மாறி பேச, என்னை பெல்ட்டாலயே அடிச்சு வெளுத்துட்டார்” என்று சொன்னார். “அவர் அடிக்கும்போது நீங்க சும்மாவா இருந்தீங்க?” என்று கேட்டதற்கு, “எதிர்த்துப் பேசுனா கோவத்துல அடி அதிகமா விழும். என்ன இருந்தாலும் பொண்ணுங்க அடங்கித்தானே போகணும்? நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது,” என்றார். “சரி, இப்போ அவர் எங்கே?” என்றேன். “அவர் காலையிலேயே கிளம்பி ஆபீஸுக்குப் போயிட்டார். அவருக்குப் பிடிக்குமேன்னு கறி வாங்கிட்டு வந்திருக்கேன்.
கோலா உருண்டை குழம்புன்னா அவருக்குப் பிடிக்கும்” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்றார். தன்னை அடித்து ஓய்ந்து போன கணவரைச் சமாதானப்படுத்த இந்தப் பெண் கறி சமைத்துக் காத்திருக்கப்போகிறார். இவர் மட்டுமல்ல, நம் சமூகத்தில் பெரும்பாலான பெண்கள் இவரைப் போலவோ அல்லது இவருக்கு ஒரு படி மேலேயோ நடந்துகொள்கிறார்கள். பிறகு அந்தக் கணவனுக்கு, மனைவியை அடிப்பது வன்முறை என்று எப்படிப் புரியும்? பெண்களுக்கு அப்படி இருக்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும் என்று ஆயிரம் விஷயங்களைக் கற்றுத்தருகிறோம். ஆனால் துயரப்பட்டால், வன்முறைக்கு ஆளானால் அதை வெளியே சொல்லுங்கள் என்று சொல்லித் தந்திருக்கிறோமா?
இதெல்லாம் சின்னச் சின்ன சங்கடங்கள். இதைக்கூட பொறுத்துக்கொள்ளவில்லை என்றால் குடும்ப அமைப்பு சிதைந்துபோகும் என்று பலர் வாதிடலாம். உண்மைதான். குடும்ப உறவுகள் சார்ந்த விஷயத்தில் பொறுமையும், விட்டுக்கொடுத்தலும் அவசியமே. ஆனால், அது ஒருவழிப் பாதையாக இருக்கக் கூடாது இல்லையா? விட்டுக்கொடுப்பதில் ஆண்களும் சம பங்கு வகிக்கும்போதுதானே, அது நியாயமானதாக இருக்க முடியும்? பெண்கள் மீது அனைத்து வன்முறைகளையும் செயல்படுத்திவிட்டு, இது குடும்ப அமைப்பின் ஓர் அங்கம்தான் என்று அவர்களை நம்பவைப்பதைவிட மோசடி வேறு ஏதாவது இருக்கிறதா?
எது அந்தரங்கம்?
திட்டுவது, அடிப்பது, வரதட்சிணை கேட்டுக் கொடுமைப்படுத்துவது இவற்றையெல்லாம் பொதுவெளியிலோ, உறவுகளிடமோ சொல்லி முறையிடும் பெண்கள், தங்கள் மீது ஏவப்படுகிற அந்தரங்க வன்முறையை யாரிடமும் சொல்வது இல்லை. அப்படிச் சொல்வது ஒழுக்கக் கேடானது என்றே நம்புகிறார்கள். ‘கணவனாக இருந்தாலும் மனைவியின் அனுமதி இல்லாமல், அவரிடம் அத்துமீறக் கூடாது’ என்று சட்டம் சொல்லும்போது, பெண்கள் ஏன் அந்த வன்முறையை ஏற்றுக்கொள்கிறார்கள்? ‘திருமண வல்லுறவு’ என்ற வார்த்தையை உச்சரிப்பதே தகுதி குறைவானது என்ற பிற்போக்குத்தனம் பலரிடம் இருக்கிறது. உறவுகளையும் பெண்களையும் போற்றும் இந்தியா போன்ற நாடுகளில் திருமண வல்லுறவு நடப்பதே இல்லை என்று சாதிக்கிறவர்களும் உண்டு.
கணவன், மனைவி இருவருமே மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறவர்கள். ஆதர்ச தம்பதி என்று பெயரெடுத்தவர்கள். மற்றவர்கள் முன்னிலையில் தன்னைக் கண்ணியவானாகக் காட்டிக்கொள்ளும் கணவன், தனிமையில் தன் மனைவியிடம் நடந்துகொள்ளும் விதம் வார்த்தைகளால் சொல்லமுடியாதது. தனக்கு நேர்ந்த கொடுமைகளை அந்தப் பெண் சொன்னபோது எப்படி ஒருவனால் இந்த அளவுக்கு வக்கிரமாகச் சிந்திக்க முடியும் என்று தோன்றியது. “உங்கள் கணவரைப் பற்றி புகார் செய்யலாமே?” என்று கேட்டதற்கு, “குடும்ப விஷயத்தை நாலு பேருக்கு நடுவுல பேசலாமா?” என்று பதிலுக்குக் கேட்டார் அந்தப் பெண். கல்வி கற்று, சமூகத்தில் மேம்பட்ட நிலையில் இருக்கும் பெண்ணே இப்படிச் சிந்திக்கும்போது, அன்றாட வாழ்க்கையே பெரும்பாடாக இருக்கும் பெண்களின் நிலை எப்படியிருக்கும்?
ஏன் இந்தத் தயக்கம்?
சட்டம் உங்களுக்குத் துணை புரியும் என்று என்னதான் மேடை போட்டுக் கூவினாலும் அந்தச் சட்டத்தைத் துணிச்சலுடன் கையில் எடுக்கிற உறுதியை நாம் பெண்களுக்கு ஏற்படுத்தித் தருவதில்லை. எப்போதும் பிறரைச் சார்ந்து வாழும்படியே வளர்க்கப்படும் பெண்கள், கணவரின் துணையில்லாமல் வாழ முடியாது என்ற அச்சத்திலேயே பிரச்சினைகளைச் சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள். நடைமுறையில் தனித்து வாழும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் நெருக்கடிகளுமே இந்த அச்சத்துக்குக் காரணம்.
படித்து, வேலைக்குச் செல்லும் பெண்கள்கூட சொந்தக்காலில் நிற்பது குறித்து யோசிப்பதில்லை. கணவரைப் பிரிந்து தனியாக வாழும் பெண்களை இந்தச் சமூகம் எப்படி நடத்துமோ என்ற பயமே பல பெண்களைப் புதைகுழியிலேயே வைத்திருக்கிறது. இந்தத் தடைகளை எல்லாம் மீறி வெளியே வரும் பெண்களை, சுற்றியிருப்பவர்கள் அத்தனை மரியாதையுடனும் உவப்புடனும் நடத்துவதில்லை. அவர்களைத் தள்ளிவைத்தே செயல்படுவார்கள். திரும்பும் திசையெல்லாம் இப்படி அவமானப்படுத்தப்பட்டோ, புறக்கணிக்கப்பட்டோ வாழ்வதற்கு, புகுந்த வீட்டுக் கொடுமைகளே மேல் என்றுதான் பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள்.
அரசுக்குப் பொறுப்பு இல்லையா?
எவையெல்லாம் குடும்ப வன்முறை என்ற தெளிவு ஏற்படும் வகையில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் தீர்வுக்கான முதல் படியாக அமையும். கல்லூரிகளில் இதற்கென விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தலாம். ஆலோசனை மையம் அமைக்கலாம். ஆண், பெண் இருவருக்கும் திருமணத்துக்கு முந்தைய ஆலோசனை அவசியம். இவற்றையும் மீறி குடும்பத்துக்குள் சிக்கல் வளர்ந்தால் கணவன், மனைவி இருவருமே குடும்பநல ஆலோசனைகளைப் பெற வேண்டும். இப்படியான ஆலோசகர்களைச் சந்திப்பதே மாபெரும் குற்றம் என்ற மாயை தேவையற்றது. இவையெல்லாமே ஆரம்பகட்டச் செயல்பாடுகள்தான்.
வன்முறையின் தீவிரம் அதிகரிக்கிறபோது, சட்டத்தின் துணையை நாடுவது அவசியம். பாதிக்கப்பட்ட பெண்கள், சட்டத்தின் துணையோடு பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. பெண்கள் காவல் நிலையத்துக்குப் போகாமலேயே புகார் தரும் வகையில் உதவி மையங்கள் அமைக்கப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் சொல்லப்பட்டது.
ஆனால், அப்படி எந்தவொரு மையமும் இன்றுவரை அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கிராமப்புறப் பெண்களும் பயன்பெறும் வகையில் இலவச சட்ட அலோசனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அதுதான் சட்டத்தின் மீதான நம்பிக்கையைப் பெண்களிடம் அதிகரிக்கும்.
நீங்க என்ன சொல்றீங்க?
கணவன் கொடுமைப்படுத்தினால் குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்க வேண்டும் என்கிறோம். ஆனால் பொருளாதார ரீதியாக கணவனை மட்டுமே சார்ந்திருக்கும் பெண்களின் உடனடி பாதுகாப்புக்கு இங்கே என்ன உத்தரவாதம் இருக்கிறது? புகார் கொடுத்ததுமே வீட்டை விட்டு வெளியேற்றப்படும் பெண்கள், தங்குவதற்குப் போதுமான தங்கும் இல்லங்கள் இருக்கின்றனவா? குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அவர்களின் நிலை என்ன? பொருளாதார நெருக்கடியில் இருந்து அவர்கள் மீள்வதற்கான வழி என்ன? தனித்து வாழும் பெண்களை இந்தச் சமூகம் எப்படி நடத்துகிறது? குடும்ப வன்முறைகள் இல்லாத சூழல் ஏற்பட என்ன செய்ய வேண்டும்? உங்கள் கருத்து என்ன? அனுபவம் என்ன? எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago