நடனக் கலைஞர் சந்திரலேகா - சுதந்திரத்தின் எல்லைகளை விஸ்தரித்தவர்

By ஷங்கர்

20ஆம் நூற்றாண்டு, உலகளவில் பல மாற்றங்களையும், உடைப்புகளையும் கண்ட நூற்றாண்டாகும். அடிமைப்பட்ட தேசங்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்ததும், சிந்தனை மற்றும் கலைகள் ஜனநாயகப்படுத்தப்பட்டு, மரபின் தடைகள் உடைந்து நவீனத்துவம் கொண்டதும் இக்காலகட்டத்தில்தான். செய்யுளாக இருந்த கவிதை வடிவம், நவீன கவிதையாகியது. நவீன ஓவியமாக மாற்றம் கொண்டது. அந்தப் பின்னணியில் இந்தியாவில் மரபாக இருந்த நடன வடிவை அதன் பழைய அலங்காரங்களைக் களைந்து நவீன வடிவமாக்கியவர் சந்திரலேகா.

1928ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மகாராஷ்டிர மாநிலமான வாடாவில் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர் சந்திரலேகா பிரபுதாஸ் படேல். சிறு வயது முதலே நடனம் மற்றும் கலைகளில் ஈடுபாடுமிக்க அவர், சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, தனது வருங்காலம் நடனம்தான் என்று முடிவுக்கு வந்தார். பரதம் பயில்வதற்காகத் தனியாகக் காஞ்சிபுரத்துக்கு வந்தார். தேர்ந்த பரதநாட்டிய குருவான எல்லப்பப் பிள்ளையிடம் மாணவியாகச் சேர்ந்தார். 20 வயதில் சொந்த ஊரையும் பெற்றோரையும் பிரிந்து தனியாகச் சென்னை வந்தார். தனது தொப்புள்கொடி உறவுகளைத் துறக்க விரும்பிய அவர், தன் குடும்பப் பெயரைத் துறந்து வெறும் சந்திரலேகா ஆனார்.

குரு எல்லப்பப் பிள்ளையிடம் பரதநாட்டியத்தை முறையாகப் பயின்ற அவர், அப்போதைய பிரபல பரதநாட்டியக் கலைஞர்கள் ருக்மணி தேவி மற்றும் பால சரஸ்வதி போன்ற ஆளுமைகளின் நேரடித் தாக்கத்தையும் பெற்றார். 1950களின் மத்தியிலேயே இந்தியாவின் முக்கியமான நடனக் கலைஞராகப் புகழ்பெற்றார். அவரது தனி நடன நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளர்களின் வரவேற்பு அமோகமாக இருந்தது. பத்தாண்டுகளிலேயே தனது நடனத்தில், அவருக்குச் சலிப்பு ஏற்படத் தொடங்கியது. “ நான் யாருக்காக ஆடுகிறேன். ஏன் ஆடுகி றேன். என்னை ஒரு இந்திப் பட நடிகையின் உடலைப் பார்ப்பது போலத்தானே பார்வையாளர்கள் பார்க்கின்றனர்” என்றெல்லாம் கேள்விகள் தோன்றின.

ஒரு நிகழ்ச்சியில் ‘மதுரா நகரில்’ என்ற பாடலுக்கு அபிநயிக்கிறார் சந்திரா. அப்போது அவரது மனக்கண்ணில் காலிக்குடங்களுடன் வறண்ட முகங்கள் நாடெங்கும் அலைந்துகொண்டிருப்பதைக் காண்கிறார். அப்போது இந்தியா முழுவதும் வறட்சி நிலவிய காலகட்டம். “யமுனை நதியில் நடக்கும் நீர் விளையாட்டு மற்றும் நீர்ச் செழுமையை நான் பாவமாகக் காட்டி நடனமாடிக் கொண்டிருந்தேன். ஒரு வறட்சியான சந்தர்ப்பத்தில், பஞ்ச நிலையில், நான் எதை என் நடனத்தில் சித்திரித்துக்கொண்டிருக்கிறேன்?” என்ற கேள்வி எழுந்தது.

ஒரு கட்டத்தில் பரதநாட்டியத்தில் அலுப்படைந்த அவர் நடனத்தையே கைவிட்டார். அக்காலத்தில்தான் இந்தியாவில் பெண்ணிய இயக்கம் அரும்புவிடத் தொடங்கியிருந்தது. சந்திரலேகா அவர்களுடன் இணைந்து கொண்டார். தனது ஓவியங்கள் மற்றும் சுவரொட்டிகளை வரையத் தொடங்கித் தனது படைப்பாற்றலை வேறு திசைகளில் மடைமாற்றினார். அவர் 1980களில் வரைந்த சுவரொட்டிகள் அப்போதைய பெண்ணியக் குரலை மிகச் சிறப்பாகப் பிரதிநிதித்துவம் செய்தவை. இந்தியா பெண்களைக் கடவுளாகவும் வணங்குகிறது. அவர்களை அதிகபட்சமாக வன்முறைக்குள்ளாக்குவதும் இந்தியாதான் என்ற செய்தியுடன் இரு பக்கமும் பத்துக் கைகள் உள்ள காளியை, ஒரு பக்கம் கைகள் உடைந்தவராகச் சித்தரித்த சுவரொட்டி அக்காலத்திய பெண்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஓவியம், கவிதை மற்றும் நண்பர்களுடனான பயணங்களில் நடனம் பக்கம் வராமலேயே சந்திரலேகாவால் பல ஆண்டுகளை உற்சாகத்துடன் கழிக்க முடிந்தது. நடுவில் நவகிரஹா என்ற ஒரே ஒரு நாட்டிய நிகழ்ச்சியை மட்டுமே நடத்தினார்.

1985இல் அங்கீகா என்ற நடன நிகழ்வுடன் மீண்டும் நடனத்தை நோக்கித் திரும்பினார் சந்திரலேகா. இந்திய நடன வரலாற்றில் இது முக்கியமான திருப்பம். யோகா, களரி போன்ற உடற்பயிற்சி மரபையும் நடனக்கலையையும் அங்கீகாவில் சரியான விகிதத்தில் கலந்து புதுமையான வடிவைக் கொடுத்தார். அங்கீகா, பரதநாட்டியம் என்னும் வடிவம் தொடர்பாக உள்ள மரபார்ந்த கருத்துகளைக் கேள்விக்குள்ளாக்கியது.

சந்திரலேகாவின் அடுத்தடுத்த தயாரிப்புகள், இங்குள்ள நடனம் இந்திய வேருடனேயே நவீன முகம் கொள்ள முடியும் என்பதைக் காட்டின.

1991இல் அவர் இயக்கிய , பெண்களின் படைப்பாற்றலுக்கான அர்ப்பணிப்பாக இருந்தது. முதுகுத் தண்டுவடத்தைப் படிமமாகக் கொண்ட இந்நடன நிகழ்வு, காலம் காலமாகப் பெண்களின் தண்டுவடம் நொறுக்கப்படுவதையும், அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு எடுக்கும் முயற்சிகளையும் நடன வடிவில் காட்டியது.

ஒரு கட்டத்தில் அவரது படைப்புப் பயணம் ஒரு உடலுக்குள்ளேயே இருக்கும் ஆண்மையையும், பெண்மையையும் கண்டறிந்து முழுமைகொண்டது. “பெண்கள் நடக்கும்போதும், அமரும் போதும், ஒரு குழந்தையை இடுப்பில் தாங்கியிருக்கும்போதும் உடலை ஒரு ஆற்றல் வடிவமாய் நான் பார்க்கிறேன். நம் உடலுள் எவ்வளவு ஆற்றல் பொதிந் திருக்கிறது என்று நம்மால் அறிய முடிவ தில்லை. அதனால்தான் நான் நடனத்தில் எது செய்தாலும் அதை உடல் தொடர்பான அறிதலுக்காகவே செய்கிறேன்.”

சந்திரலேகா நடனத்தை வாழ்விலிருந்து தனியான பொழுதுபோக்கு வடிவமாகப் பார்க்கவில்லை. உடலுக்கும் இயற்கைக் கும் உள்ள உயிரோட்டமான உறவாகப் பார்த்தார். நடனம் ஒரு காட்சிப் பொருளாக மாறிவிட்டதாக அவர் உணர்ந்தார். அதனால் தன் படைப்பாற்றலைப் பயன்படுத்தி அவற்றி லிருக்கும் தடைகளைச் சிதறடித்துத் தற்கால வடிவமாக தன் நடனத்தை மாற்றினார்.

சந்திரலேகா, திருமணம் போன்ற எந்த சம்பிரதாய உறவுகளிலும் சிக்கிக் கொள்ளாமல் சுதந்திர ஜீவியாகவே தன் வாழ்வைக் கழித்தார். ஒரு நடன ஆளுமையாக அறியப்பட்ட அவர், தன் நடனத்தில் சலிப்பு வந்தபோது அதையும் துறந்தார். பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் அவர் உருவாக்கிய வீடு, வேப்ப மரங்களால் சூழப்பட் டது. 75 வேப்ப மரக்கன்றுகளைத் தன் கையால், நட்டு வளர்த்தார். தனது படைப்புகளைவிட அதிகமாக இவை குறித்து அவர் பெருமை கொண்டிருந்தார். இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் கூடி இளைப்பாறி உரையாடும் பொதுவெளியாக இருந்தது இவரது இல்லம். உலகப் புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர் ஹென்றி கார்ட்டியர் ப்ரெஸ்சானும், ஓவியர் தசரத் பட்டேலும் அவரது சிறந்த நண்பர்கள். வங்கக் கவி ஹரீந்திர சட்டோபாத்யாயா இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர். எழுத்தாளரும் கலை விமர்சகருமான சதானந்த் மேனன் சந்திரலேகாவின் தோழராக இருந்தார்.

தனது இறுதிக் காலம் வரை வயோதிகம் கொடுக்கும் முதுமை மனநிலையை அடையாமல் ஒரு குழந்தையின் உற்சாகத்துடனும், எழிலுடனும் இருந்தார். அவரின் அழகுக்கு முன்னால் வயது ஓடிப்போய்விட்டது என்று அவரைப் பற்றிய நினைவுக் கட்டுரை ஒன்றில் எழுத்தாளர்

ந. முத்துசாமி நினைவுகூர்கிறார். சந்திரலேகா 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி காலமானார்.

தமிழ் சினிமா சந்திரலேகாவை ‘தன் பாணியில்’ நினைவுகூர்ந்திருக்கிறது. மணிரத்னத்தின் ‘திருடா திருடா’ படத்தில் ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ பாடலில் வரும் சந்திரலேகாகாகாகாகாகா… இவர்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்