வரலாற்றில் தடம் பதித்த தாப்பர்

By ஆதி வள்ளியப்பன்

வரலாறு என்றாலே, "அசோகர் மரம் நட்டார், குளம் வெட்டினார் என்பதைப் படிப்பது தானே" என்று பலரும் கிண்டல் அடிப்பார்கள். இன்றைக்கு வரலாறு என்றாலே சட்டென்று முதல் எடுத்துக்காட்டாக அசோகர் ஞாபகம் வருவதற்குக் காரணமான ஆதாரங்களை கண்டறிந்து கூறியவர், புகழ்பெற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர் ரொமிலா தாப்பர்.

"மக்கள் தங்களையே புரிந்துகொள்ளவும், கடந்த காலத்தைப் புரிந்துகொள்ளவும், சமூகத்தையும் தனிமனிதர்களையும் புரிந்துகொள்ளவும் வரலாறு அவசியம். எப்படி மனிதர்கள் இருக்கும் வரை சுயசரிதை அழியாதோ, அதுபோலவே வரலாறும் அழியாது'' என்று வரலாற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ரொமிலா தாப்பர், வரலாற்றை மீள் விசாரணைக்கு உட்படுத்தத் தூண்டியவர்.

பள்ளி இறுதி வகுப்புகளில் ரொமிலா படித்துக் கொண்டிருந்தபோது, அவரது அப்பா தென்னிந்திய வெண்கல சிற்பங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். அவற்றின் பின்னணி பற்றியும் அவற்றின் வரலாற்றையும் படிக்க ஆரம்பித்தபோது, தாப்பருக்கு வரலாற்றின் மீது ஆர்வம் உருவானது. அவரது திருமணத்துக்கு வரதட்சிணையாக கொடுப்பதற்காக, அவரது அப்பா சேமித்து வைத்திருந்த பணத்தைக்கொண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்தார். பிறகு அங்கேயே ஆராய்ச்சி செய்வதற்கு உதவித்தொகையும் பெற்றார். லண்டன் அவரது ஆர்வத்துக்கு தீனி போட்டு, அறிவை விரிவு செய்துகொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கியது.

பேராசிரியர் பணி

லண்டனில் இருந்து திரும்பிய பிறகு, 1960களில் தில்லி பல்கலைக்கழகத்தில் அவர் பேராசிரியர் பணியில் சேர்ந்தபோது, ஒரு சிலர் மட்டுமே பேராசிரியைகளாக இருந்தனர். 1970இல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது, அதில் சேர தாப்பருக்குக் கிடைத்த வாய்ப்பு, அவரது கல்விப் பணியில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தார். அவரிடம் வரலாற்றைக் கற்றுக்கொண்ட எண்ணற்ற மாணவர்கள், தற்போது நாடு முழுவதும் பேராசிரியர்களாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் உள்ளனர்.

பண்டைய இந்திய வரலாற்றில் நிபுணத்துவம் பெற்ற ரொமிலா தாப்பர், கி.மு. 6ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாறு பற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறார். பேரரசர் அசோகர் பற்றிய அவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பண்டைய இந்தியா பற்றி History of India: Past and Prejudice, Ancient Indian Social History, Sakuntala: Texts, Readings, Histories ஆகிய முக்கியமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

அசோகர்

"அசோகரின் பிரகடனங்கள், அவரைப் பற்றி படிக்கத் தூண்டின. சமூக ஒழுங்கு வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், அவற்றை அமல்படுத்தவும் முயற்சித்தார். போர் தொடுத்து நாட்டைக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருந்த அசோகர், கலிங்கப் போருக்குப் பின் படையெடுப்பைக் கைவிட்டார். அவர் இப்படிச் செயல்படுவதற்கு பெளத்த மதம் துணைபுரிந்ததா, அவரது செயல்பாடுகள் அனைத்துக்கும் பெளத்த மத பின்னணி உண்டா என்பதைப் பற்றி ஆராய நினைத்தேன்.

பெளத்த மதத் தாக்கத்தைவிடவும் ஆட்சியாளராக தனது கடமையை அவர் மிக முக்கியமாகக் கருதினார். இப்படியாக இந்திய வரலாற்றின் தொடக்கக் காலத்தில் அரசாட்சி, நகர்மயமாக்கம், அரசியல் சூழ்நிலை மாற்றம் போன்றவை முன்பு இல்லாத வகையில் நடந்திருப்பது முக்கியமானது" என்று தனது புகழ்பெற்ற ஆராய்ச்சி குறித்து ரொமிலா கூறுகிறார்.

அதேநேரம், அரசர்களது வரலாற்றை மட்டும் மையப்படுத்தாமல், சமூக வரலாற்றை மையப்படுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். பண்பாடு, சமூகம், வரலாறு இவற்றுக்கு இடையிலான தொடர்பு பற்றியும், வரலாறுகள் எப்படி உருவாக்கப்படுகின்றன, எப்படி முன்வைக்கப்படுகின்றன என்பதைப் பற்றியும் ஆராய்ந்துள்ளார். தொடர்ந்து ஆராய்ச்சி, எழுத்து, கௌரவ பேராசிரியர் பணிகளில் ஈடுபட்டு வரும் தாப்பர், இந்தியாவின் உள்ளடங்கிய பகுதிகளுக்குச் செல்வது தனக்கு புதிய விஷயங்களை கற்றுத் தருவதாகக் கூறுகிறார்.

இந்து-முஸ்லிம் பிரிவினை

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் 1947 ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரு வாரங்களில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த துயரச் சம்பவங்கள் தாப்பருக்கு மிகவும் முக்கியமாக அமைந்தன. அப்பொழுது அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் வாழ்ந்த இந்துக்கள்-முஸ்லிம்கள் இடையிலான உறவில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டிருந்தது. அது இன்று வரை தொடர்கிறது.

இந்த இடத்தில் அரசியல் லாபங்களுக்காக வரலாற்றைத் திரிப்பது பற்றி தொடர்ந்து எச்சரித்து வந்ததிலும், நமது சமூகத்தில் மதச்சார்பின்மையின் தேவையை சரியாக உணர்த்தியதிலும் ரொமிலா தாப்பரின் பங்கு மிக முக்கியமானது. பாபர் மசூதி தொடர்பாக வரலாற்று ஆதாரம் இல்லாத விஷயங்கள் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு எதிரான ஆதாரங்களுடன் வலுவான வாதத்தை தாப்பர் முன்வைத்தார். இந்தியாவை ஒற்றை மதத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அவர் கடுமையாக எதிர்த்தார்.

தேவை விவாதம்

''இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை போன்ற துயர் நிறைந்த சம்பவங்கள் பற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சரியான பார்வையை முன்வைக்க வேண்டும். இந்திரா காந்தி கொல்லப்பட்டவுடன் தில்லியில் சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரம், 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் போன்ற உணர்ச்சிகரமான பிரச்சினைகள் பற்றி வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். இவற்றின் பின்னணி, இந்தச் சம்பவங்கள் குறித்து ஒவ்வொரு பிரிவினரது கருத்தையும் பரிசீலிக்க வேண்டும்.

பகைமையும், காழ்ப்புணர்வும் நூற்றாண்டு காலமாக நம்மிடையே இருக்கும் விஷயமல்ல. சமீபத்தில் உருவாக்கப்பட்ட சூழ்நிலையால் நேரிட்டவை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

சிந்திப்பது அறிவைத் தூண்டிவிடும் என்பதால், சிந்தனையைத் தூண்டும் கல்வியை தரக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. சமூகத்தை நோக்கி கேள்வி கேட்கத் தூண்டும் வரலாறு, சமூக அறிவியலை பயிற்றுவிக்காமல் தடுக்க முயற்சிக்கப்படுகிறது'' என்று ரொமிலா தாப்பர் கவனப்படுத்துகிறார்.

அமெரிக்க சிகாகோ பல்கலைக்கழகம், இலங்கை பெரடெனியா பல்கலைக்கழகம், பாரிசில் உள்ள ஓரியண்டல் நாகரிக தேசிய நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவை அவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. அதேநேரம் விருதுகள் விஷயத்தில் தாப்பர் கறாரான கருத்துகளைக் கொண்டவர். 1992, 2005ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கத் தயாராக இருந்த பத்மபூஷண் விருதை அவர் நிராகரித்துள்ளார். "என்னுடைய ஆராய்ச்சிப் பணிக்காக கல்வி நிறுவனங்கள் வழங்கும் விருதையே ஏற்றுக்கொள்வேன். அரசு விருதுகளை நான் ஏற்பதில்லை" என்று தெளிவான விளக்கத்தையும் அதற்கு அளித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்