பக்கத்து வீடு: தோற்றம் மட்டும்தான் அழகா?

‘உலகிலேயே அழகற்ற பெண்’என்ற பெயரில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாகரிமற்ற முறையில் இணையதளங்களில் பரப்பப்பட்டவர் லிஸீ வெலாஸ்கெஸ். அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு, இன்று எழுத்தாளராகவும் தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராகவும் உலகத்தின் பார்வையை தன் மீது திருப்பியிருக்கிறார்!

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் லிபோடிஸ்ட்ரோபி (Lipodystrophy) என்ற அரிய வகை குறைபாட்டுடன் பிறந்தார் லிஸீ. இந்தக் குறைபாடுடையவர்களின் உடலில் கொழுப்பு இருக்காது. எலும்பும் தோலுமாகக் காட்சியளிப்பார்கள். உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, முதுமையையும் விரைவிலேயே வரவழைத்துவிடும். ஒரு கண் பார்வையை முற்றிலும் இழந்தவர், இன்னொரு கண்ணில் குறைந்த அளவு பார்வையுடன் இருக்கிறார். எலும்புகளையோ உள் உறுப்புகளையோ பற்களையோ இது பாதிப்பதில்லை. உடலில் கொழுப்பு இல்லாததால் சக்தியைப் பெறுவதற்காக அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளைக் குறிப்பிட்ட இடைவேளைகளில் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

பள்ளிக்குச் செல்லும் வரை தன் உருவம் எப்படி இருக்கிறது என்று லிஸீக்குத் தெரியாது. வகுப்பில் எந்தக் குழந்தையும் இவர் அருகே அமரவில்லை, பேசவில்லை. தன்னை மட்டும் எல்லோரும் ஒதுக்குவதைக் கண்ட லிஸீ, பெற்றோரிடம் காரணத்தைக் கேட்டார். “உன்னிடம் எந்தக் குறையும் இல்லை. மற்ற குழந்தைகளைவிட கொஞ்சம் ஒல்லியாக இருக்கிறாய், அவ்வளவுதான்” என்று ஆறுதல் சொல்லி, பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்.

அறிவே அழகு

ஆண்டுகள் செல்லச் செல்ல மற்றவர்களின் கிண்டல்களால் தான் அழகாக இல்லை என்ற வருத்தம் லிஸீக்கு அதிகமானது. “நீ அழகாகவும் இருக்கே, புத்திசாலியாகவும் இருக்கே. உன்னால் எதையும் சாதிக்க முடியும்” என்று சொல்லி, பெற்றோர் தைரியமும் தன்னம்பிக்கையும் ஊட்டி வளர்த்தார்கள். இவரது கவனத்தைப் பல்வேறு விதங்களில் திசை திருப்பினார்கள்.

பள்ளியிலிருந்து வெளிவந்த செய்தித்தாளில் தொடர்ந்து எழுதினார் லிஸீ. இயர்புக்கில் புகைப்படக்காரராக நிறைய பங்களிப்புகளைச் செய்தார். சியர்லீடர் குழுவில் சேர்ந்து பிறருக்கு உத்வேகம் அளித்தார். பலரும் இவரது திறமைகளைக் கண்டு வியந்து பாராட்டினர்.

லிஸீ தன்னுடைய பதினேழாவது வயதில் சமூகத்தின் கோர முகத்தைச் சந்தித்தார். ‘உலகிலேயே அழகற்ற பெண்’என்ற தலைப்பில் லிஸீயை வைத்து யூடியூப் வீடியோ ஒன்று வெளியானது. விஷயத்தை அறிந்த லிஸீ, கம்ப்யூட்டரில் அந்த வீடியோவைப் பார்த்தார்.

“அது என் வாழ்க்கையின் மிக மிகத் துயரமான தருணம். வீடியோவைப் பார்த்துவிட்டு, பின்னூட்டங்களைப் படித்தேன். அதுபோன்ற புண்படுத்தும் வார்த்தைகளை யாருமே பார்த்திருக்க முடியாது. கம்ப்யூட்டர் திரையைக் கிழித்துக்கொண்டு எல்லோரும் என் முகத்தில் ஓங்கிக் குத்துவது போல் வலித்தது. என் கண்கள் வெளியே வரும் அளவுக்கு உரக்க அழுது தீர்த்தேன். நான் மட்டும் ஏன் இப்படிப் பிறந்தேன்? மருத்துவர்களையோ என் பெற்றோரையோ குறை சொல்ல மாட்டேன். என்னை நானே குற்றம் சுமத்திக்கொண்டேன். ஒருவரின் குறைபாட்டை இவ்வளவு மோசமாக உலகத்துக்குக் காட்ட எவ்வளவு குரூரமான மனநிலை வேண்டும்? யாரோ ஒருவர் பகிர்ந்த வீடியோவுக்குக் கண்டனம் தெரிவிக்காமல் பல லட்சம் முறை உலகம் முழுவதும் பரப்பியவர்களை என்ன சொல்வது?” என்று வேதனைப்பட்டார் லிஸீ. வழக்கம் போல அவரது பெற்றோர்கள் லிஸீயை ஆறுதல்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குக் கொண்டுவந்தனர்.

அன்பை விதையுங்கள்

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கம்யூனிகேஷன் படிப்பை மேற்கொண்டார். மூன்று சுய முன்னேற்றப் புத்தகங்கள் எழுதினார். கொடுமைப்படுத்துதலுக்கு (bullying) எதிரான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பரப்புரை செய்துவருகிறார். தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராகவும் இருக்கிறார். 2014-ம் ஆண்டு ‘எ பிரேவ் ஹார்ட் - லிஸீ வெலாஸ்கெஸ் ஸ்டோரி’என்ற தலைப்பில் சுயசரிதையை வெளியிட்டார். ஓராண்டு கழித்து அது ஆவணப்படமாகவும் வெளியிடப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

“ஒருபோதும் இதுபோன்ற துன்புறுத்தல்களை மேற்கொள்ளாதீர்கள். நாம் எல்லோரும் மனிதர்களே. கிண்டல்களும் துன்புறுத்தல்களும்தான் என்னை தைரியமான, எதையும் சாதிக்கத் தூண்டும் பெண்ணாக மாற்றியிருக்கின்றன. ஆனால் எல்லோராலும் இதைக் கடப்பது கடினம். நான் யார் என்ற தலைப்பில் உரையாற்றிய வீடியோவை 5.4 கோடிப் பேர் பார்த்திருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் அன்பு காட்டியிருக்கிறார்கள். இன்றும் நான் 30 கிலோ எடைக்கு மேல் இல்லை. என் எடை என்ன, நான் எப்படி இருக்கிறேன் என்பது முக்கியமில்லை. நான் என்னவாக இருக்கிறேன் என்பதுதான் முக்கியம்.

இனிமேலும் ஏதோ ஒரு புகைப்படத்தைப் பார்த்து மோசமான கருத்துகளை நீங்கள் கூறாமல் இருந்தாலோ, அதற்குக் கண்டனம் தெரிவித்தாலோ அதுவே மிகப் பெரிய விஷயம் எனப் பார்க்கிறேன். பிறரைத் துன்புறுத்தும் வார்த்தைகளை விட்டொழியுங்கள். அன்பை விதையுங்கள்; அன்பைப் பரப்புங்கள்” என்கிறார் லிஸீ வெலாஸ்கெஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்