‘மருத்துவர்கள்தான் மக்களைத் தேடி வரவேண்டும். மருத்துவர்கள் நோயாளிகளின் எஜமானர்கள் அல்ல, சேவகர்கள்’என்று வலியுறுத்தியவர் சீனாவில் பணியாற்றிய உலகப் புகழ்பெற்ற மருத்துவர் நார்மன் பெத்யூன். அவருடைய கருத்தைக் களத்தில் செயல்படுத்திவருகிறார் பொன்னேரி அரசு மருத்துவமனைத் தலைவர் (பொறுப்பு) மருத்துவர் அனுரத்னா.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தார் அனுரத்னா. மருத்துவராக வேண்டும், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே இவரது லட்சியமாக இருந்தது.
“கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைந்த காரணத்தால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டின் எந்தப் பகுதியிலும் மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. மருத்துவராகும் கனவு அவ்வளவுதானா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். என் அப்பா ரஷ்யாவில் மருத்துவம் படிக்கிறாயா என்று கேட்டார். மாஸ்கோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து, மருத்துவம் படிக்க வாய்ப்பும் கிடைத்தது. ரஷ்யாவில் ஆறரை ஆண்டுகள் மருத்துவம் படிக்கச் சென்றேன். எனக்கு மொழி ஒரு பிரச்சினையாகவே இல்லை. தமிழ் வழிக் கல்வியில் படித்துவிட்டதால் எந்த விதத்திலும் நான் கஷ்டப்பட்டதில்லை. எந்த மொழியில் படித்தாலும் தமிழில்தான் உள்வாங்கிக்கொள்வேன். தாய்மொழியில் படிப்பது பெருமையான விஷயம்தான்” என்கிறார் அனுரத்னா.
மருத்துவப் பணி
படிப்பு முடித்த பிறகு சிவகங்கையில் உள்ள பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த மருத்துவராகச் சேர்ந்தார். திருமணத்தால் தேனிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு மருத்துவர்கள் பற்றாக்குறை. மருத்துவப் பணிக்கு விண்ணப்பம் செய்ததும் கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த மருத்துவராக மீண்டும் பணியில் சேர்ந்தார். தமிழக அரசு சார்பில் மருத்துவர்களுக்காகச் சிறப்பு மருத்துவத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நிரந்தர அரசு மருத்துவராகத் தகுதி பெற்றார் அனுரத்னா.
எம்.பி.பி.எஸ். படிப்பு மட்டும் மக்களுக்குச் சேவை செய்யப் போதாது என்பதால், மகப்பேறு மருத்துவப் படிப்பை முடித்தார். ‘‘மகப்பேறு படிப்பு இரண்டு உயிர்களைக் காப்பாற்றுவதற்கான படிப்பு!. பணி நியமனக் கலந்தாய்வில் நான் விரும்பும் எந்த மருத்துவமனையையும் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு என்னிடம் இருந்தது. ஆனால் சக மருத்துவர்கள் பொன்னேரிக்கு மட்டும் போகாதே, மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்றனர். ஆனால் நான் பொன்னேரியைத்தான் தேர்வு செய்தேன். மக்கள் பிரச்சினை செய்கிறார்கள் என்றால், அதில் ஒரு நியாயம் இருக்கும். அதை என்னால் சரி செய்ய முடியும் என்று நம்பினேன்” என்கிறார் அனுரத்னா.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் செய்ய முடியாமல் போகும் சிகிச்சைகளுக்காக, அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பும் சூழ்நிலை இருந்தது. இதுதான் மக்களின் பிரச்சினை என்று புரிந்துகொண்டார் அனுரத்னா. மருத்துவமனையின் தலைவர் (பொறுப்பு) பதவிக்கு வந்தவர், அரசு உதவியோடு பல விஷயங்களை மேற்கொண்டார். மாதத்துக்கு 40 பிரசவங்கள் மட்டும் பார்க்கப்பட்டு வந்த மருத்துவமனையில் தற்போது 100 பிரசவங்கள் பார்க்க முடிகிறது. மூட்டு மாற்று அறுவைசிகிச்சை, தோல், பல், காது, மூக்கு, தொண்டை போன்ற சிகிச்சைகள் தற்போது பொன்னேரி அரசு மருத்துவமனையிலேயே நடைபெறுவதால் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
தேடிவந்த விருதுகள்
“2015-ம் ஆண்டு டிசம்பரில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. பல முகாம்களில் பிரசவ வலியால் பெண்கள் அவதிப்பட்டனர். முகாம்களிலேயே சிசேரியன்கூடச் செய்ய வேண்டிய
நிலை ஏற்பட்டது. எங்கள் மருத்துவக் குழுவினருடன் தைரியமாகச் செய்து முடித்தேன். வர்தா புயல் பாதிப்பின் போதும் ஒருநாள்கூட விடுமுறை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவமனையிலேயே தங்கிப் பணிகளை மேற்கொண்டேன்” என்கிறார் அனுரத்னா.
அவசரக் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தால் அனுரத்னாவுக்கு இரண்டு முறை சிறந்த மருத்துவருக்கான மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப்பட்டுள்ளது. பென்னேரியில் அதிக அளவில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதற்காகவும் மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
“வர்தா புயலின்போது பொன்னேரி இருட்டில் மூழ்கியிருந்தது. ஆனால் எங்கள் மருத்துவமனையில் மட்டும் ஜெனரேட்டர் வைத்து இரவு, பகலாக மருத்துவ உதவி செய்தோம். அந்த நேரம் நான் உட்பட அனைத்து மருத்துவ ஊழியர்களும் தொய்வின்றி வேலை செய்தோம். அதை இப்போது நினைத்தாலும் நெகிழ்ச்சியாக உள்ளது. பொன்னேரி மருத்துவமனைக்குப் பெரும்பாலும் பின்தங்கிய மக்கள்தான் வருவார்கள். அவர்களுக்கு மருத்துவத் தேவை அதிகமாக உள்ளது. தொலைவிலிருக்கும் இருளர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு விடுமுறை நாட்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ முகாம்களை நடத்துவோம். திருநங்கைகளுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியிருக்கிறோம். நான் படித்த மருத்துவம் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த எண்ணமே என்னைச் சோர்வடையாமல் வைத்துள்ளது” என்று உற்சாகமாகக் கூறுகிறார் அனுரத்னா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago