“ஆபத்தான சூழ்நிலைகளில் ஆயுதங்களைத் தேட முடியாது. ஆனால் கையில் கிடைக்கும் சிறு தடியைக்கூட ஆயுதமாக மாற்ற முடியும்” என்கிறார் சிலம்பக் கலைஞர் புவனேஸ்வரி.
சிலம்பம் பல நூற்றாண்டுக் கால வரலாறு கொண்டது. ஈட்டி, வில், வேல், கத்தி போன்ற ஆயுதங்களுக்கு முன் தோன்றியது. விடுமுறையில் கராத்தே, ஓவியம், இசை, நடனம் போன்ற பயிற்சி வகுப்புகளுக்குக் குழந்தைகளை அனுப்புகிறார்கள். பாதுகாப்புக்காகவும் பாரம்பரியக் கலையைக் காக்கவும் குழந்தைகளுக்கு இந்தக் கலையில் பயிற்சியளிக்கலாம்.
பொறியியல் பட்டதாரியான புவனேஸ்வரி, சிறு வயதிலிருந்தே சிலம்பம் பயிற்சி பெற்றுவருகிறார்.
“நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தோழிகள் டைப் ரைட்டிங், ஓவியம் போன்ற வகுப்புகளுக்குச் சென்றனர். மாமா என்னைச் சிலம்பம் வகுப்பில் சேர்த்துவிட்டார். அந்த வயதில் சிலம்பம் என்றால் என்ன என்றே தெரியாது. முதலில் கம்பைத் தூக்கிச் சுழற்றவே கஷ்டமாக இருந்தது. கொஞ்ச நாளிலேயே லகுவாகக் கம்பைச் சுழற்றக் கற்றுக்கொண்டேன். இப்போது ஆண்களால்கூட என் கம்பின் சுழற்சிக்கு முன்னால் நிற்க முடியாத அளவுக்குச் சிலம்பத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்”என்று சொல்லும்போது புவனேஸ்வரியின் முகத்தில் பெருமிதம் தெரிந்தது.
தேசிய அளவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றிருக்கிறார். சிலம்பக் கலையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகத் தமிழக அரசின் ‘கலை இளம் மணி’விருதும் புவனேஸ்வரிக்குக் கிடைத்துள்ளது.
சிலம்ப வகைகளான சுருள் வாள் சிலம்பம், இரட்டைக் கம்பு சிலம்பம், வேல் கம்பு, கத்தி கம்பு, புலி வேஷம், மான் கம்பு, கயிறு பந்து சிலம்பம், வளையம், அடிமுறை சிலம்பம், அலங்காரச் சிலம்பம், செடி குச்சி, வால் கத்தி, கேடயம் சிலம்பம் போன்ற சிலம்பு முறைகளை மிக நேர்த்தியாகச் செய்கிறார் புவனேஸ்வரி.
“கையில் ஒரு தடியை வைத்துக் கொண்டு சுழற்றுவதுதான் சிலம்பம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். சிலம்பத்தில் சுமார் எழுபது வகைகள் இருந்தன. இப்போது முப்பதுக்கும் குறைவான சிலம்ப வகைகளே எஞ்சி யுள்ளன. கல்லூரி விழாக்களில் சிலம்பம் எடுத்து மேடையில் ஏறினால் அரங்கம் முழுவதும் கைத்தட்டல்களும் விசில் சத்தமும் எதிரொலிக்கும். தமிழகக் கல்லூரி விழாக்களில் நானும் என் சிலம்பமும் கட்டாயம் இருப்போம். பல கிராமியக் நிகழ்ச்சிகளில் என் குழுவினருடன் சேர்ந்து பங்கேற்றுவருகிறேன்” என்று சொல்லும் புவனேஸ்வரி, “தற்காப்புக் கலை ஆண்களுக்கானது என்ற தோற்றமே பொதுவாக உள்ளது. சிலம்பம் கற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவந்தாலும் பாரம்பரியம் மிக்க கலைகளைப் பாதுகாக்கத் தொடர் ஊக்குவிப்பு அவசியம்” என்கிறார்.
மாநில அரசு சிலம்பத்தை அங்கீகரித்துள்ளது. இதனால் கல்வி, வேலை வாய்ப்பபு ஆகிய துறைகளில் விளையாட்டு ஒதுக்கீட்டில் சிலம்பம் பயின்ற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். கராத்தே கலையை அங்கீகரித்துள்ள மத்திய அரசு சிலம்பத்தை அங்கீகரிக்கவில்லை. சிலம்பம் போன்ற கலைகளைப் பாதுகாப்பதில் அரசின் பங்கு முக்கியமானது என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் புவனேஸ்வரி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago