கமலா கல்பனா கனிஷ்கா: ஊழல்வாதிகளைப் புறக்கணிக்கணும்

By பாரதி ஆனந்த்

ஒரு கல்யாண ரிசப்ஷனுக்காக கமலா பாட்டி, கல்பனா ஆன்ட்டி, கனிஷ்கா மூவரும் சென்றிருந்தார்கள்.

“ரொம்ப ஆடம்பரமான கல்யாணமா இருக்கே! அலங்காரத்திலிருந்து சாப்பாடு வரை ஒவ்வொரு விஷயத்திலும் ஆடம்பரம் கண்ணை உறுத்துது” என்றார் கமலா பாட்டி.

“இதுக்காக ரஞ்சித் ரஞ்சன் எம்.பி. ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியிருக்காங்க. பண பலத்தைக் காட்ட உடை, ஆபரணங்கள், சாப்பாடுன்னு ஆடம்பரமா செலவழிக்கிறதுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். 5 லட்சம் ரூபாய்க்கு மேல ஒரு திருமணத்துக்குச் செலவு பண்ணினால் அதில் 10% தொகையை ஏழைப் பெண்களின் திருமண நிதிக்காகக் கொடுக்கணும் என்பதுதான் அந்த மசோதாவோட சாராம்சம். இது அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தனிநபர் மசோதாவாகத் தாக்கல் ஆகும்” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“அட, நல்ல முயற்சிதான்! கனிஷ்கா, உன் பெரியப்பா பொண்ணோட காதலை ஏத்துக்கிட்டாங்களா அவங்க வீட்ல?”

“ம்ஹும். வீட்டில் ஒத்துக்கலை. ரொம்ப மிரட்டினதில் எம்பிஏ படிச்ச அக்கா, வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லிட்டா, பாவமா இருக்கு”

“நம்ம நாட்டில் 65% பெண்கள் படிச்சவங்க. ஆனால் இவங்களில் 5% பெண்கள் மட்டுமே தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருக்காங்கன்னு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கு. மருத்துவமனைக்குச் செல்வதற்கு அனுமதி கேட்டு, 80% பெண்கள் காத்திருக்காங்கன்னும் சொல்லுது இந்த அறிக்கை. என்னதான் படிச்சாலும் பெண்கள் இன்னும் அடிமையாதான் இருக்காங்க” என்று வருத்தத்துடன் சொன்னார் கமலா பாட்டி.

“அருமையான மகனை இழந்த ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா, நீதி கேட்டுப் போராடிக்கிட்டிருக்காங்க. அவர் தலித் என்பதை நிரூபிக்க 15 நாட்கள் கெடு கொடுத்திருக்கு அரசாங்கம். கணவரைப் பிரிஞ்சு வாழ்ந்த அந்தம்மா, பொருளாதாரத் தேவையை எப்படி சமாளிச்சாங்கன்னு விசாரணையில் கேட்டிருக்காங்க. என்ன கொடுமையான அமைப்பு இது?” என்று கொதித்தார் கல்பனா ஆன்ட்டி.

“கணவரைப் பிரிந்து வாழும் பெண்களை இழிவாதான் பார்க்குது இந்தச் சமூகம். ராதிகா தனியாளா ரெண்டு மகன்களையும் நல்லா படிக்க வச்சு ஆளாக்கினதைப் பாராட்டாமல், செலவுக்கு என்ன செஞ்சீங்கன்னு கேட்கறது அநியாயம், அக்கிரமம்” என்றாள் கனிஷ்கா.

“சாப்பிடப் போகலாமா?” என்று கேட்ட கமலா பாட்டியிடம், “கூட்டம் குறையட்டும். ஆந்திராவில் பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதன் மூலம், ஜனநாயகத்தை வலிமையடையச் செய்யலாம் என்ற கருத்தை மையமா வச்சு, ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதில் சபாநாயகர் சிவபிரசாத், ‘உங்க காரை ஷெட்லயே வச்சிருந்தா விபத்து நடக்காது. அதே காரை 50 கி.மீ. வேகத்துல ஓட்டும்போது விபத்து நடக்க வாய்ப்பிருக்கு. அதையே 100 கி.மீ. வேகத்துல ஓட்டுனா விபத்துக்கு அதிக வாய்ப்பு. அந்தக் காலத்துல பெண்கள் வீட்டோட இருந்தாங்க, அவங்க மீதான பாலியல் சீண்டல்களும் குறைவா இருந்துச்சு. இப்போ படிச்சு வேலைக்குப் போறாங்க, பாலியல் சீண்டல்களும் அதிகமாயிருச்சு’ன்னு அபத்தமா பேசியிருக்கார். உடனே எதிர்ப்புக் கிளம்பியதும் பெண்கள் தைரியத்தை வளர்த்துக்கணும், தற்காப்புக் கலை களைக் கத்துக்கணும்னு சொல்லி சமாளிச்சி ருக்கார்” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“தெலங்கானா அரசாங்கம் அமில வீச்சுக்கு எதிரா கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்திருக்கு. இதனால் அமில வீச்சில் ஈடுபடுபவர்கள் குறைந்தது 10 ஆண்டு காலம், அதிகபட்சம் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியிருக்கும். பாதிக்கப்பட்டவரின் முழு மருத்துவச் செலவையும் குற்றவாளி ஏத்துக்கணும். பெயிலில் வெளிவர முடியாது போன்ற திருத்தங்களுடன் சட்டசபையில் சட்டத்தை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கு.”

“இந்த மாதிரி குற்றங்களுக் கெல்லாம் சட்டம் கடுமையாக்கப் படணும். பாகிஸ்தானின் மெளரிபூரில் ‘லேடீஸ் தாபா’ ஆரம்பிச்சிருக்காங்க. இங்கே பெண்களுக்கு மட்டுமே அனுமதி. தோழிகளுடன் பெண்கள் தேநீர் குடித்துக்கொண்டே அரட்டையடிக்கலாம். பொழுதுபோக்குவதற்கு செஸ், கேரம் விளையாடலாம். புத்தகங்கள் படிக்கலாம். இந்தத் தாபாவில் வேலை செய்பவர்களும் இதை நடத்துபவர்களும் பெண்களே. ரெண்டு வருஷத்துக்கு முன்னால சில பெண்ணியவாதிகள் கூடி, பெண்கள் தாபாக்களை உருவாக்க முயற்சி செஞ்சாங்க. அதில் இந்த ஒரு தாபாதான் ஆரம்பிக்கப்பட்டு, நல்லா செயல்பட்டுவருது. பாகிஸ்தான் பெண்கள், தாபாவுக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்காங்க!” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“நம்ம ஊரிலும் பெண்கள் தாபா வந்தால் நாம நிம்மதியா அரட்டையடிக்கலாம். கனடாவைச் சேர்ந்த 32 வயது ஷாவ்னா பாண்ட்யா மருத்துவர், இப்போ நாசாவின் விண்வெளிப் பயணத்துக்குத் தேர்வாகியிருக்கார். கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸுக்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்றாவது பெண்ணாக விண்ணில் பறக்கப் போறாங்க ஷாவ்னா!” என்ற கனிஷ்காவின் முகத்தில் பெருமிதம் தெரிந்தது.

“சூப்பர்! உத்தர் காசியில் டாங் கிராமத்துப் பெண்கள் சேர்ந்து சாலை போட ஆரம்பிச்சிட்டாங்க. எத்தனையோ பேருக்கு ஓட்டு போட்டும் அவர்களின் சாலை பிரச்சினை தீரலை. அப்படியே சாலை போடறேன்னு சொல்றவங்களும் கிராம மக்கள் வளர்த்துவரும் மரங்களை வெட்டிட்டுப் போடறதா சொல்றாங்க. மரங்களை வெட்டி, நீண்ட நேரம் சுத்திக்கிட்டுப் போறதுக்குப் பதிலா, சுருக்கமான வழியைத் தேர்வுசெய்து பெண்களே சாலை போட ஆரம்பிச்சிட்டாங்க. என்ன கொடுமை பாருங்க. அரசாங்கத்தோட வேலையை அரசாங்கம் தான் செய்யணும். ஏழை எளிய பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக உழைப்பாங்களா, அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளையும் செய்வாங்களா? ஓட்டு போட்டு அவங்களைப் பதவியில உட்கார வச்சிட்டு, நம்ம தேவையை நாம பார்த்துக்கணும்னா அரசாங்கம் எதுக்கு?” என்று கோபமாகக் கேட்டார் கமலா பாட்டி.

“உங்க கோபத்தில் நியாயம் இருக்கு பாட்டி. மக்களின் தேவைகளைச் செய்து கொடுக்கவும் சமூகத்தை முன்னேற்றவும்தான் நாம ஓட்டு போட்டு ஆட்சியாளர்களை பதவிகளில் உட்கார வைக்கிறோம். ஆனா இப்போ வருகிற பெரும்பாலான அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கத்தான் பதவிக்கு வர்றாங்க. இதில் ஆண், பெண் பேதமெல்லாம் இல்லை. அம்மா, அம்மான்னு கொண்டாடின முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் முதல்வர் பதவி வகிக்க முயற்சி செய்த அவரது தோழி சசிகலாவும் குற்றவாளிகள்னு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கு. இனி வருகிற அரசியல்வாதிகள் தண்டனைக்குப் பயந்தாவது நேர்மையா நடந்துக்கணும்” என்றாள் கனிஷ்கா.

“நீதிமன்றம் சொல்லும்வரை அவங்க வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தது எல்லோருக்கும் தெரியாதா? அப்படியும் கடந்த தேர்தலில் அவங்களைத்தான் முதல்வரா உட்கார வச்சாங்க. அரசியல்வாதிகளும் நேர்மையா இருக்கணும். நீதிமன்றங்களும் வழக்கில் வேகத்தைக் கடைபிடித்து, குற்றவாளிகள் தப்பிக்காமல் பார்த்துக்கணும். மக்களும் தெளிவான அரசியல் பார்வை வச்சிருக்கணும். 21 வருஷமா வழக்கு நடந்தது. மக்களும் திரும்பத் திரும்ப பதவியில் உட்கார வச்சிக்கிட்டிருந்தாங்க. அப்படின்னா ஊழல்வாதிகளுக்கு எப்படி மக்கள் மேல பயம் வரும்? அரசியல்வாதி, மக்கள், நீதித்துறை எல்லாமே நேர்மையா செயல்படும்போதுதான் ஆரோக்கியமான அரசியல் சாத்தியம்” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“கரெக்ட் ஆன்ட்டி. கூட்டம் குறைஞ்சிருச்சு. வாங்க சாப்பிடலாம்” என்று கனிஷ்கா பந்திக்கு அழைக்கவும் இருவரும் கிளம்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்