கியூபாவில் இருந்து ஃப்ளோரிடா வரை 180 கி.மீ. தூரத்தை 53 மணி நேரங்களில் நீந்திக் கடந்தவர் டயானா நியாட். சுறா பாதுகாப்புக் கூண்டு இல்லாமல், நீந்திக் கடந்த முதல் மனிதர் டயானாதான்! இத்தனை பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கும் டயானாவின் வயது என்ன தெரியுமா? “ஜஸ்ட் 64” என்று விரல் உயர்த்தி நம்பிக்கைச் சின்னம் காட்டுகிறார் டயானா.
நியூயார்க்கில் பிறந்த டயானா, பள்ளியில் படிக்கும்போதே நீச்சல் வீராங்கனையாக உருவாகிவிட்டார். 100 மீட்டர், 200 மீட்டர்களில் மாநில அளவில் மூன்று முறை சாம்பியன் பட்டங்களைப் பெற்றார். 1968-ம் ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்தில் கடுமையாகப் பயிற்சி செய்துவந்தார். ஆனால் இதயத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்று, அவரை மூன்று மாதங்களுக்குப் படுக்கையில் தள்ளிவிட்டது. மீண்டும் உடல்நிலை தேறி, பயிற்சியை ஆரம்பித்தபோது தன் வேகத்தை இழந்திருந்தார் டயானா. ஒலிம்பிக் கனவு கலைந்துபோனது.
எப்போதும் எதிர் நீச்சல்
“என் லட்சியம் நிறைவேறாததில் எனக்கு வருத்தம் இருந்தது. ஆனால் இதுபோன்ற தோல்விகள்தான் என்னை உறுதியான மனுஷியாக உருவாக்குகின்றன என்பதை உணர்கிறேன். என் வளர்ப்புத் தந்தை, நீச்சல் பயிற்சியாளர் இருவராலும் நான் சின்ன வயதிலேயே பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறேன். இதுபோன்ற கொடுமையான காலகட்டத்திலிருந்து முற்றிலும் என்னை மீட்டெடுத்தது நீச்சல்தான். துன்பம் என்று முடங்கிக் கிடப்பதால் எந்தப் பயனும் இல்லை. செய்யாத தவறுகளுக்கு நம்மை நாமே ஏன் தண்டித்துக்கொள்ள வேண்டும்?’’ என்று கேட்கும் டயானாவுக்குத் தண்ணீரில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் எதிர்நீச்சல் போடுவது பிடிக்கும்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஆண்டாரியோ ஏரியில் 16 கி.மீ. தூரம் கடந்ததுதான் டயானாவை மிக முக்கியமான நீச்சல் வீராங்கனையாக உருவாக வழிவகுத்தது. 74-ம் ஆண்டு 22 மைல்களைக் கடந்து பெண்கள் பிரிவில் புதிய சாதனை படைத்தார். அடுத்த ஆண்டு 28 மைல்களைக் கடந்து, தேசிய அளவில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டார். 78-ம் ஆண்டு ஹவானாவிலிருந்து கீ வெஸ்ட் பகுதிக்கு நீந்தும் முயற்சியில் இறங்கினார். சுறா பாதுகாப்புக் கூண்டுக்குள் நீந்திச் சென்ற அந்தப் பயணம், சூறாவளிக் காற்றால் முழுமையடையவில்லை.
சாதனைகளின் நாயகி
30 வயதில் தான் கலந்துகொண்ட கடைசிப் போட்டியில் ஆண்களோ, பெண்களோ இதுவரை படைக்காத உலக சாதனையை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கினார் டயானா. வட பிமினி தீவிலிருந்து ஃப்ளோரிடாவரை சுறா பாதுகாப்புக் கூண்டு இன்றி நீந்தினார். காலநிலை சீராக இருந்ததால், 164 கி.மீ. தூரத்தை வெற்றிகரமாகக் கடந்து முடித்தார். இதன் மூலம் பல்வேறு உலக சாதனைகள் நிகழ்த்திய பெண்ணாக வலம் வந்தார் டயானா.
நீச்சலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, வாழ்க்கை வரலாறு உட்பட 3 புத்தகங்களை எழுதி வெளியிட்டார். நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு உடற்பயிற்சி அளிக்கும் பயிற்றுநர், தன்னம்பிக்கை உரைகள், ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பல்வேறு பணிகளைத் திறம்படச் செய்துவந்தார்.
“பரபரப்பாக இருந்தாலும் ஏனோ மனம் சோர்வடைந்தது. ஒருநாள் காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது கண்ணாடியில் என் உருவத்தைக் கவனித்தேன். என் கண்கள் ஏதாவது செய் என்று சொல்வது போல் இருந்தது. 60 வயது எனக்குக் குறையாகத் தெரியவில்லை. உடனே களத்தில் இறங்கினேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீந்துவது அத்தனை எளிதான விஷயமாக இருக்கவில்லை. ஆனாலும் எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்கும் எண்ணமே எனக்குள் ஏற்படவில்லை’’ என்கிறார் டயானா.
வயது தடையில்லை
2010-ம் ஆண்டு டயானாவின் முதல் பயணம் ஆரம்பமானது. மோசமான வானிலை, ஜெல்லி மீன்களின் தாக்குதல், ஆஸ்துமா போன்ற பல காரணங்களால் நான்கு முயற்சிகள் தோல்வியைச் சந்தித்தன.
“நான்காவது முயற்சியில் உயிர் பிழைத்ததே அதிசயம். ஒன்பது முறை ஜெல்லி மீன்கள் கொட்டின. ஐந்தாவது முயற்சியில் இறங்குவேன் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். வயது காரணமாகத் தோல்வியடைந்ததாக யாரும் என்னை உதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த முயற்சியில் இறங்கினேன்’’ என்று சொல்லும் டயானா, 2013 ஆகஸ்ட் 31 அன்று கியூபாவிலிருந்து ஃப்ளோரிடாவுக்குப் பயணமானார். ஸ்பான்சர்கள், மருத்துவர்கள், நண்பர்கள், சேனல்காரர்கள் ஒரு கப்பலில் கிளம்பினார்கள். இரண்டு படகுகளில் உதவியாளர்கள் வந்தார்கள். கவச உடை, சுறா பாதுகாப்புக் கூண்டு எதுவுமின்றிக் கடலில் நீந்த ஆரம்பித்தார் டயானா. கரைகளில் நின்றிருந்த ஏராளமான மக்கள் உற்சாகமாக வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார்கள்.
“கடலுக்குள் இருந்து கரையைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. கரையில் குழுமியிருந்த மக்களில் மதம், இனம், மொழி, நாடு என்ற அடையாளங்களின்றி மனிதம் என்ற ஓர் அடையாளம் மட்டுமே தெரிந்தது! எத்தனை அழகான உலகம் என்பதைப் புரிய வைத்தது!’’
வானிலை சீராக இருந்தது. சாப்பிடும்போதும், தண்ணீர் குடிக்கும்போதும் மட்டும் நீந்துவதை நிறுத்துவார். இரவிலும் பகலிலும் மொத்தம் 52 மணி நேரம், 54 நிமிடங்கள் நீந்தி இலக்கை அடைந்தார் டயானா! நான்கு ஆண்டு உழைப்புக்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த வெற்றி! சுறா பாதுகாப்புக் கூண்டு இல்லாமல் கடந்த முதல் மனிதர், 64 வயதில் 180 கி.மீ. தூரத்தைக் கடந்த முதல் மனிதர் என்று வரிசையாகப் பல சாதனைகளை நிகழ்த்தியிருந்தார் டயானா!
“இந்தச் சாதனை மூலம் மூன்று விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். சாதனைக்கு வயது தடை இல்லை. எடுத்த முயற்சியில் ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. நான் மட்டுமே நீந்தினாலும் இது எனக்கு மட்டுமான வெற்றியில்லை. என்னோடு பயணம் செய்த 50 பேர் கொண்ட குழுவுக்குக் கிடைத்த வெற்றி!’’ என்கிறார் டயானா.
இதற்குப் பிறகும் டயானா ஓய்வெடுக்கவில்லை. ஹரிகேன் புயல் நிவாரண நிதி போன்றவற்றுக்காக, தனக்குத் தானே இலக்கு வைத்துக்கொண்டு, நீந்திவருகிறார். புத்தகம் எழுதிவருகிறார். அலைகள் ஒருபோதும் ஓய்வதில்லை!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago