களம் புதிது: முள்கிரீடம் சூட்டப்பட்ட ராணி

By ஆதி

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி பயிற்சி நடைபெற்ற பெங்களூரு முகாம் அது. முதன்முறையாக ஒலிம்பிக் ஹாக்கிக்குத் தகுதிபெற்ற உற்சாகத்துடன் வீராங்கனைகளின் மட்டைகள் சுழன்று சுழன்று பந்தை விரட்டுகின்றன. ரியோவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் முனைப்புடன் ஹாக்கி நுணுக்கங்களையும் வியூகத் தாக்குதலையும் வீராங்கனைகள் ஒவ்வொரு நாளும் பட்டைத்தீட்டிக் கொண்டிருந்தனர். ஜூலை மாதம் முதல் வாரத்தின் காலைப் பொழுதில் ஒரு வீராங்கனையை அழைத்த இந்திய ஹாக்கி நிர்வாகம், ‘இந்த முறை நீங்கள் கேப்டன் இல்லை, ஒலிம்பிக்குக்கு நீ்ங்கள் போகவும் இல்லை' என்று குண்டைத் தூக்கிப்போட்டது. ஒரு திரைப்படத்தின் அதிரடித் திருப்பம் போலத்தான், அது அமைந்திருந்தது.

ரியோ ஒலிம்பிக், இந்தியப் பெண்களுக்கு மகிழ்வையும் வருத்தத்தையும் ஒரே நேரத்தில் தந்திருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி. ஷாருக் கான் நடிப்பில் புகழ்பெற்ற ‘சக்தே இந்தியா' கதையைப் போலவேதான் நிஜத்திலும் இது நடந்துள்ளது. 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஏற்கெனவே பங்கேற்றிருந்தாலும், தகுதி அடிப்படையில் இல்லாமல் ரஷ்யாவின் அழைப்பின் பேரிலேயே அப்போது பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் முறையாகத் தகுதி பெற்று, ஒலிம்பிக்கில் நமது தேசிய விளையாட்டைத் தூக்கிப் பிடிக்கப்போகிறது இந்திய மகளிர் ஹாக்கி அணி.

இதில் என்ன வருத்தம் என்று தோன்றுகிறதா? இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக்குக்கு தகுதிபெற முக்கியக் காரணமாக இருந்தவர் நான்கு வாரங்களுக்கு முன்னால்வரை கேப்டனாக இருந்த ரிது ராணி. மேலே விவரிக்கப்பட்ட சம்பவத்தில் கேப்டன் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டவரும் இதே ரிது ராணிதான். ரியோவுக்குப் புறப்படுவதற்கு முன்னால் ஏன் அவர் விலக்கப்பட்டார் என்பதற்கு, அதிகாரப்பூர்வமாக எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை.

ஹாக்கிக்கு அர்ப்பணிப்பு

ஒடிசலான தேகமும் உறுதியான மனமும் கொண்ட ரிது, ஹரியாணா மாநிலம் மர்கந்தா நதிக்கரையில் உள்ள ஷாபாத் நகரைச் சேர்ந்தவர். திரும்பக் கிடைக்காத நினைவுகளைத் தரக்கூடிய பதின்ம வயதுகளின் தொடக்கத்தில் பள்ளி வாழ்க்கைக்குப் பதிலாக, ஹாக்கியை வாழ்க்கையாக்கிக்கொண்டார். 14 வயதில் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்காக ஆசிய விளையாட்டுப் போட்டி, உலகக் கோப்பை ஆகியவற்றில் விளையாடத் தொடங்கினார். இன்றுவரை ஹாக்கி ஒன்றே கதியாகக் கிடக்கிறார்.

இந்த அர்ப்பணிப்பு அவரை 2011-ல் கேப்டனாக உயர்த்தியது. அவரது தலைமையில் 2013 கோலாலம்பூர் ஆசிய கோப்பையில் இந்திய அணி மூன்றாவது இடம் பிடித்தது. 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றது. 2015-ல் ஆண்ட்வெர்பில் நடந்த உலக லீக் அரையிறுதிப் போட்டிகளில், தங்களைவிட தரவரிசையில் முன்னிலையில் இருந்த ஜப்பானைத் தோற்கடித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்ததன்மூலம், ஒலிம்பிக் வாய்ப்பை இந்திய அணி பெற்றது. இத்தனைக்கும் முதன்மைக் காரணமாக இருந்தவர், அணியை வழிநடத்திச் சென்றவர் ரிது. இந்தப் பத்தாண்டுகளும் இரவு பகல் பாராமல் ஒலிம்பிக் கனவுடனே ஆடிவந்ததற்கு, ஒரு அர்த்தம் கிடைத்ததுபோல் இருந்தது.

ஏன் இந்தத் திடீர் மாற்றம்?

இரண்டு மாதங்களுக்கு முன்பு அர்ஜுனா விருதுக்காக ரிது ராணியை ஹாக்கி நிர்வாகம் பரிந்துரை செய்தது. பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க அழைப்புவிடுக்கப்பட்ட ஒலிம்பிக் குழுவிலும் ரிது இடம்பெற்றிருந்தார். இந்நிலையில்தான் ஜூலை மாதத் தொடக்கத்தில் திடீரென ரிது விலக்கப்பட்டுள்ளார். தவறான மனோபாவமும் உடல் தகுதியின்மையும் இதற்குக் காரணமாக கூறப்படுகின்றன. ஒரு சில நாட்கள் இடைவெளியில் அவரது விளையாட்டுத் திறத்திலும் மனோபாவத்திலும் என்ன மாற்றத்தை ஹாக்கி நிர்வாகம் கண்டுபிடித்திருக்கிறது என்பதுதான் புரியவில்லை.

ஒலிம்பிக்கில் அணியை வழிநடத்தும் கனவுடன் ஆடிவந்த அவரது நம்பிக்கை ஒரே நாளில் சுக்குநூறாக உடைக்கப்பட்டது.

“ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்பதுதான் என் ஒரே கனவு. ஆனால், இப்போதோ ஹாக்கி மட்டையையே இனி தொடக் கூடாது என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன்” என்று மனம் வெதும்பிக் கூறுகிறார் ரிது.

எது முதிர்ச்சியின்மை?

ஒலிம்பிக் பயிற்சி முகாமுக்கு முன்னதாக ஜூன் 12-ம் தேதி ரிது ராணிக்கும் பாடகர் மற்றும் டி.ஜே.வுமான ஹர்ஷ் ஷர்மாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் காரணமாக ரிதுவின் கவனம் சிதறியது, அவருடைய முதிர்ச்சியின்மை வெளிப்பட்டுவிட்டது என்று ஹாக்கி நிர்வாகம் குற்றம்சாட்டுகிறது. சில வாரங்களுக்கு முன் ‘எப்போது குழந்தை குட்டியுடன் நீங்கள் செட்டில் ஆகப் போகிறீர்கள்?’ என்று டிவி பேட்டியில் சானியா மிர்ஸாவிடம் ராஜ்தீப் சர்தேஸாய் கேள்வியுடன் நிறுத்திக்கொண்டார். ஆனால் இந்திய ஹாக்கி நிர்வாகமோ, அதேபோன்றதொரு உப்புச் சப்பில்லாத காரணத்தைக் கூறி, தன் அணியின் கேப்டனை விலக்கிவைத்திருக்கிறது.

ஆணுக்குத் தனிச் சட்டமா?

இந்த கவனச் சிதறல் குற்றச்சாட்டு எத்தனை பெரிய ஏமாற்று வேலை என்பதை ரிது ராணியே சுட்டிக்காட்டுகிறார். மூன்று வாரங்களுக்கு முன்வரை இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்தவர் சர்தார் சிங். இப்போது அவர் கேப்டன் இல்லை. ஆனால், அணியின் தேவை கருதி ஒலிம்பிக் அணியில் அவர் இடம்பெற்றிருக்கிறார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஒழுங்குமீறல் குற்றச்சாட்டுகளே, கேப்டன் பதவி பறிக்கப்பட்டதற்குக் காரணம்.

ஹரியாணா காவல்துறையில் டி.எஸ்.பியாக இருக்கும் சர்தார் சிங், பத்மஸ்ரீ விருது பெற்றவர். அதேநேரம், அவருடன் தனக்குத் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதாகக் கூறும் பிரிட்டிஷ்-ஆசிய ஹாக்கி வீராங்கனை ஒருவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்தார் சிங்குக்கு எதிராகப் பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

அணியை அவமதித்த வகையிலும் சர்தாருக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டு இருக்கிறது. அவரும் சந்தீப் சிங்கும் 2011-ம் ஆண்டில் தேசிய ஹாக்கி பயிற்சி முகாமிலிருந்து, சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறினர். தொடர்ந்து, அவர்களுக்கு எதிராக ஒழுங்குமீறல் குற்றச்சாட்டும், இரண்டு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டது. இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

தொடரும் அகங்காரப் போக்கு

சர்தார் சிங்குக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. ஆனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக இந்திய ஹாக்கி நிர்வாகம் பாதுகாக்கிறது. அதேநேரம் ரிது ராணியோ பெண் என்பதாலேயே அவமதிக்கப்படுகிறார். இப்போதுவரை ரிது விலக்கப்பட்டதற்கு, எந்த அதிகாரப்பூர்வ காரணமும் கூறப்படவில்லை.

இந்திய ஹாக்கி நிர்வாகத்தின் இந்த மனோபாவத்தை, ‘பெண்கள் விளையாட்டுக்கு லாயக்கில்லை. அவர்களுடைய திறமைக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை’ என்ற அகங்காரப் போக்கின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. சானியாவுக்கு எதிரான கேள்விகளுக்குப் பெரிய விவாதத்தைக் கண்ட நாம், விளையாட்டு அதிகார மட்டங்களில் இருப்பவர்களின் அரசியல் கணக்குகளால் ரிது ராணி காரணமின்றிப் பழிவாங்கப்பட்டதற்கு எந்த எதிர்வினையையும் பார்க்க முடியாமல் இருப்பதுதான், நம் நாட்டின் நிதர்சன நிலை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்