வொய் திஸ் கொல பசி!

By பிருந்தா சீனிவாசன்

வெளிநாட்டில் கைநிறைய சம்பாதித்த மகன் திடீரென்று சொந்த ஊருக்கு வந்து, சாப்பாட்டுக் கடை திறக்கப் போகிறேன் என்று சொன்னால் ஒரு அம்மாவுக்கு எப்படியிருக்கும்? சில அம்மாக்கள் உடைந்து போகலாம். இன்னும் சிலர் ‘எல்லாம் உன் இஷ்டம்பா’ என்று சொல்லி ஒதுங்கியிருக்கலாம். ஆனால் ஆதிலட்சுமியோ தன் மகனின் எண்ணத்துக்கு மலர்ந்த முகத்துடன் ஆதரவு தெரிவித்ததுடன், தானும் களத்தில் இறங்கினார். இன்று அவர்களின் வெற்றியை எட்டி நின்று ரசித்துக் கொண்டிருக்கிறார்.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் நிம்மதியாகப் பொழுதைக் கழிக்க வேண்டிய வயதில், தன் மகனின் முயற்சிக்குத் துணை நின்ற பெருமிதத்துக்குச் சொந்தக்காரர் ஆதிலட்சுமி. சென்னை சூளைமேட்டில் இயங்கிவரும் ‘கொல பசி’ உணவகத்தில் ருசியைச் சரிபார்த்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். ஆர்டர்களுக்கு ஏற்ப ஒழுங்காக பார்சல் நடைபெறுகிறதா என்பதை மேற்பார்வையிட்டபடியே பேசினார்.

“என் மகன் சந்தோஷ், அமெரிக்காவில் 8 வருஷம் வேலை பார்த்தான். இந்தியா வந்தவன் திடீர்னு ஒரு நாள் ஹோட்டல் பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்னு சொன்னான். நம்ம குழந்தைகளோட முயற்சிக்கு நாமதானே துணை நிற்கணும்?” என்று கேட்கிற ஆதிலட்சுமி, ஆரம்பத்தில் பலருடைய கேள்விகளையும் விமர்சனங்களையும் பொறுமையுடன் கடந்துவந்திருக்கிறார்.

“நம்ம பையன் முன்னேறிடுவான்னு நமக்குத் தெரியும். ஆனால் சுத்தியிருக்கறவங்க எல்லாம் இவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை, நீங்க எடுத்து சொல்லக் கூடாதான்னு கேட்டாங்க. நான் அவங்களுக்கு எந்தப் பதிலும் சொல்லலை. பிசினஸ் டெவலப் ஆக ஆரம்பிச்சதும் பேச்சு குறைஞ்சு, இப்போ நின்னும் போயிடுச்சு. இவங்களோட வெற்றி அவங்க வாயை அடைச்சுடுச்சு” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் ஆதிலட்சுமி.

சுவையே வெற்றியின் ரகசியம்

சமையலில் ஆதிலட்சுமியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. அதுவும் அசைவ சமையலில் இவரின் கைப்பக்குவத்துக்கு ஈடுகொடுக்க முடியாது. தன் குடும்ப நண்பர் நடத்திய கேட்டரிங் நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக சமையலில் உதவியிருக்கிறார். விதவிதமான பிரியாணி இவருடைய சிறப்பு. அந்த அனுபவமே தன் மகனுடைய நிறுவனத்துக்கு உதவக் கைகொடுத்திருக்கிறது.

“என் மகன் சந்தோஷுடன் அவனோட ஃப்ரெண்ட்ஸ் ஆதித்யா, பத்மநாபன், என் மருமகள் சஞ்சிதா இவங்க எல்லாரும் இந்த நிறுவனத்துல பார்ட்னரா இருக்காங்க. சமையல்தான் பிசினஸுக்கான ஆதாரம். என்னென்ன செய்ய வேண்டும் என்பதைவிட என்னவெல்லாம் செய்யக்கூடாதுன்னு முடிவு செய்தோம். சமையலில் நிறத்தையும் மணத்தையும் கூட்டுவதற்காக எந்த செயற்கைப் பொருளையும் சேர்ப்பதில்லை. அஜினோமோட்டோ போன்ற சுவையூட்டிகளுக்கும் இங்கே இடமில்லை. சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருள்களில்தான் உணவை அடைத்துத் தருகிறோம்” என்று தங்கள் தனிச்சிறப்பைச் சொல்கிறார் ஆதிலட்சுமி.

பேர் சொல்லும் உணவகம்

நம் வீட்டுச் சமையலறை அளவே இருக்கிற ‘கொல பசி’ உணவகத்தில் பார்சல், டோர் டெலிவரி ஆகிய இரண்டுக்கு மட்டுமே இடமுண்டு.

“அதுதான் மற்ற உணவகங்களுக்கும் எங்களுக்கும் இருக்கிற வித்தியாசம். உணவை வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டில் வைத்து பொறுமையாக ருசிக்கலாம்” என்று விளக்கம் தருகிறார் ஆதித்யா.

தொலைபேசி மூலம் ஆர்டர் தருகிறவர்களுக்கு வீட்டுக்கே சென்று உணவை சப்ளை செய்கிறார்கள். எளிய உணவு போதும் என்கிறவர்கள் சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்கிறவர்களின் நாவுக்குச் சுவை கூட்டுகின்றன அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அசைவ ரகங்கள்.

ஆரம்பத்தில் இது என்ன புது விதமாக இருக்கிறதே என்று தயங்கியவர்கள், உணவு வகைகளின் சுவையால் நிரந்தர வாடிக்கையாளர் களாகிவிட்டார்கள் என்று குறிப்பிடும் ஆதிலட்சுமி, வீட்டு விசேஷங்களுக்கும் சமைத்துத் தருவதாகச் சொல்கிறார். அதிகரித்த வாடிக்கையாளர்களால் தற்போது அண்ணாநகரில் இன்னொரு கிளையைத் திறந்திருக்கிறார்கள்.

தங்கள் உணவகத்துக்குப் பெயர் வைத்ததை வைத்தே ஒரு கதை எழுதலாம் என்கிற ஆதித்யா அந்த சுவாரசியத்தையும் பகிர்ந்து கொண்டார்.

“சும்மா இந்த பவன் அந்த பவன்னு பேர் வைக்கிறதுல எங்களுக்கு இஷ்டமில்லை. பேரே அதிரடியா இருக்கணும்னு நினைச்சோம். யாரைப் பார்த்தாலும் புதுசா ஒரு பேர் சொல்லுங்கன்னு கேட்போம். ஒரு முறை சந்தோஷும் சஞ்சிதாவும் டூவீலர்ல போயிட்டிருந்தப்போ வொய் திஸ் கொலவெறி பாட்டைக் கேட்டிருக்காங்க சஞ்சிதா. உடனே ‘நாம ஏன் கொல பசின்னு பேர் வைக்கக் கூடாது?’ன்னு கேட்க அதை அப்படியே செயல்படுத்திட்டோம்” என்று சிரிக்கிறார் ஆதித்யா.

“அடுத்த முறை மட்டன் கிரேவி செய்யறப்போ முருங்கைக்காயை கொஞ்சம் அதிகமா போடணும்” என்று குறிப்பு சொல்லிக்கொண்டே பணியைத் தொடர்கிறார் ஆதிலட்சுமி. அம்மாவின் இந்த அன்பையும் அக்கறையையும் உள்வாங்கியபடி சுறுசுறுப்பாகிறார்கள் உணவக ஊழியர்கள்.

படங்கள்: ம. பிரபு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE