நாம் ஆசைப்பட்டால்தான் இலக்கை அடைய முடியும். ஆனால், அதைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்று நினைப்பதுதான் பேராசை. பங்குச் சந்தை முதலீட்டில் பேராசை பெரிய பாதிப்பை உண்டாக்கிவிடும்.
நாம் பத்தாயிரம் ரூபாயைப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறோம். அந்த முதலீடு சந்தையின் வேகத்துக்கு ஏற்ப மேலேறி, பன்னிரண்டாயிரம் ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நாம் முதலீடு செய்தபோது, இந்த முதலீடு இருபது சதவிகித லாபத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு. இது நியாயமான ஆசை. ஆனால், சந்தையின் வேகம் அபாரமாக இருக்கிறது. இன்னும் மேலேறும் என்று நிபுணர்கள் கணிக்கிறார்கள். இப்போது நாம் ஏன் முதலீட்டின் லாபத்தை வெளியில் எடுக்க வேண்டும்? இருபது சதவிகிதம் என்பது நாற்பதாக, ஐம்பதாக உயர வாய்ப்பிருக்கிறதே என்று நினைத்து முதலீட்டை விட்டுவைப்பதுதான் பேராசை!
இந்தப் பேராசை சில நேரங்களில் நமக்குக் கைகொடுக்கும். நாம் நினைத்தபடி லாபத்தைவிட அதிகமான தொகையை ஈட்டித் தரும். ஆனால் எல்லா நேரங்களிலும் நமக்கு அது கைகொடுக்காது. மொத்தமாகப் போய்விடக்கூடிய அபாயம் இதில் இருக்கிறது.
பங்குச் சந்தை முதலீட்டில் அழகாகத் திட்டமிட்டு, தெளிவாக முதலீடு செய்யலாம். ஆனால், அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டால் பாதிப்புக்கு உள்ளாக வேண்டியிருக்கும். அதனால் ஆசைப்படுங்கள், பேராசைப்படாதீர்கள். நியாயமான ஆசை என்று முடிவெடுத்துவிட்டோம். அடுத்து, முடிவை எடுத்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதான். ஒரு விஷயத்தைத் தீர்மானித்து, செயல்படுத்தவும் தொடங்கிவிடுவோம். இந்த முடிவு சரிதானா, இதன் மூலம் பலன் கிடைக்குமா என்றெல்லாம் பல குழப்பங்கள் வரும். அதனால்தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.
முடிவெடுப்பதில் உறுதி வேண்டும்
முடிவெடுக்கும் முன் தீவிரமாக ஆலோசித்து, முதலீட்டின் சாதக பாதங்களையும் அலசி ஆராய்ந்து என்ன வகையான முதலீடு, எத்தனை காலத்துக்கு இந்த முதலீட்டைச் செய்ய வேண்டும் என்று பல விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நாம் எடுக்கும் முடிவில் தெளிவு கிடைக்கும். முடிவெடுத்த பிறகு சந்தேகங்கள் எழுந்தால், நம் ஆராய்ச்சி முறையைப் பின்னோக்கிப் பார்த்துத் தெளிவு பெற வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் முதலீடு தீர்க்கமானதாக இருக்கும். முதலீட்டில் என்ன பிரச்சினை வந்தாலும் சமாளிக்க முடியும். எனவே தீவிர ஆலோசனை முக்கியமான விஷயம்.
அடுத்து முதலீட்டின்போது ஏற்படக்கூடிய சூழல். இதுதான் நம்மை மிகவும் அதிகமாகக் குழப்பும். நாம் ஒரு நிறுவனத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையில் முதலீட்டு முடிவை எடுத்திருப்போம். ஆனால் வெளிச் சூழல் வேறு விதமான விளைவை ஏற்படுத்திவிடும். அதையும் முன்கூட்டியே கணித்து முடிவெடுக்க தன்மை நமக்கு இருக்க வேண்டும். முதலீடு நம் கையில் இருக்கிறது. சூழலுக்கு ஏற்ப மாறக்கூடிய முதலீடாக நம் துறை இருக்குமானால், மொத்தமாக முதலீடு செய்யாமல் சூழலின் மாற்றத்துக்கு ஏற்ப நம் முதலீட்டின் அளவை வைத்துக்கொண்டால், நம்மால் அந்தச் சூழலை எளிதாகக் கையாள முடியும். முடிவெடுக்க வேண்டும்; முடிவெடுத்த பின் அதில் உறுதியாக இருக்க வேண்டும்.
முடிவை நாமே எடுக்க வேண்டும் என்பது அடுத்த முக்கியமான விஷயம். நம் முடிவை வேறு யாராவது எடுக்க வாய்ப்பிருக்கிறதா? இருக்கிறது. அதைப் பற்றி அடுத்த வாரம் பேசலாம்.
(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago