அருணா ராய்:
 உண்மையான
 ஜனநாயகத்தை
 உணரச் செய்தவர்

By ஆர்.ஜெய்குமார்

ராஜஸ்தான் மாநிலத்தில் பின்தங்கிய ஒரு சிற்றூரில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு மத்திய அரசின் அன்னபூர்ணா திட்ட நிதியுதவி கிடைக்கவில்லை. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். அன்னபூர்ணா திட்டம், நாட்டின் மூத்த குடிமக்களின் உணவுப் பாதுகாப்புக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம்.

இது குறித்து யாரிடம் முறையிட? எங்கு சென்று நிலையை எடுத்துக் கூற? இவை எதுவும் அந்த முதியவருக்குத் தெரியவில்லை.
அரசு அலுவலகங்களுக்குச் செல்கிறார். அரசு எந்திரத்தின் அடுக்கடுக்கான பல தரப்பட்ட சம்பிரதாயங்கள் அவரைக் குழப்பம் அடையச் செய்கின்றன. ஒரு கட்டத்தில் அவருக்கு அரசு எந்திரத்தைக் கேள்வி கேட்கும் வழிமுறைகள் தெரிய வருகின்றன.

கேள்விகளால் தனக்கான உரிமையைப் பெற்றுக்கொள்கிறார். அவருக்குக் கைகொடுத்தது, தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்திய ஜனநாயகத்தின் குடிமக்கள் எவரும் எந்தத் துறையையும் கேள்வி கேட்கலாம் என வழிவகை ஏற்படுத்தித் தந்தது இச்சட்டம். இதன் மூலம் ஊழல் ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது. சமானிய இந்தியக் குடிமகனுக்கு ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கை வந்திருக்கிறது.

மதிப்புமிக்க இந்தச் சட்டத்தின் காரணகர்த்தாக்களில் முதன்மையானவர் அருணா ராய்.
சென்னையில் ஒரு வசதியான குடும்பத்தில் 1946ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளிப் படிப்பைச் சென்னையிலும், புதுச்சேரியிலும் பயின்றார். உயர்கல்வியை டெல்லியில் முடித்தார்.

ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள அருணா, பாடப் புத்தகங்களுக்கு வெளியே நிறைய வாசித்துள்ளார். காரணம் அவரது தந்தையும் வாசிப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்ததுதான். மகாத்மா காந்தியும் கம்யூனிஸ்ட் தலைவர் எம்.என்.ராயும் அவரது தந்தையின் ஆதர்ச தலைவர்களாக இருந்துள்ளனர். அருணாவின் புத்தக வாசிப்பு அவரைக் கூர்மையாக்கியுள்ளது.

தான் சாதாரண இந்தியப் பெண்ணைப் போல குடும்பக் கட்டுகளுக்குள் சிக்கி வாழக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார். முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர், தனது 21ஆம் வயதில் 1967ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்குத் (ஐஏஎஸ்) தேர்வானார். அந்த ஆண்டு தேர்வான பத்து பெண்களில் அருணாவும் ஒருவர்.
கிராமத்தில் பெற்ற அனுபவம்
ஐஏஎஸ் பயிற்சிக்குப் பிறகு அவருக்குத் தமிழ் பேசத் தெரியும் என்பதால் அவர் ‘பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி’யாகத் திருச்சியில் நியமிக்கப்பட்டார்.

ஆனால் அங்கிருந்த மாவட்ட ஆட்சித் தலைவரின் ஒத்துழையாமையால் அவர் உடனடியாக வட ஆற்காடு மாவட்டத்திற்கு மாறுதல் வாங்கிச் சென்றார். இங்குதான் கிராமத்துடன் அவருக்கு முதல் அனுபவம் ஏற்பட்டது. கிராமம் கிராமமாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டார். அருணாவுக்குக் கிராமத்தின் உண்மையான நிலை தெரியவந்தது. பின்னாட்களில் அவர் மேற்கொண்ட மாபெரும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு இந்த அனுபவங்கள்தாம் ஆதாரம் எனலாம்.

ஒரு மக்கள் பணியாளரின் வேலை என்ன என்பதை அங்குதான் கற்றுக்கொண்டதாக அருணா கூறியுள்ளார்.
அதன் பிறகு 1973இல் அவர் டெல்லி யூனியன் பிரதேசத்தில் பணியாற்றினார். இதற்கிடையில் 1970இல் கல்லூரித் தோழனான பங்கர் ராயை மணந்தார். இவர்களது திருமணம் மிக எளிய முறையில் நடந்தது. பங்கர் ராயும் அருணாவைப் போல சமூக சேவையை லட்சியமாகக் கொண்டவர்.

அந்த அடிப்படையிலேயே இருவரும் திருமண ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். 1972இல் பங்கர் ராய், ராஜஸ்தான் மாநிலம் டிலோனியாவில் சமூகப் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மையம் என்னும் ஒரு அமைப்பைத் தொடங்கினார் (SWRC). 1974இல் தனது ஐஏஎஸ் பணியைத் துறந்து இந்த அமைப்புடன் இணைந்து செயல்படத் தொடங்கினார் அருணா.
SWRCஇல் பெற்ற அனுபவத்துடன் தோழர்கள் சிலருடன் இணைந்து 1990இல் அருணா, மஸ்தூர் கிஷான் சக்தி சங்கதன் (MKSS) என்ற அமைப்பை ராஜஸ்தான் மாநிலம் தேவ்துங்குரியில் அமைத்தனர்.

உழைப்பாளிகள் மற்றும் விவசாயிகளை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும். அதிகார மட்டத்தில் மேல் நிலையில் நடக்கும் ஊழல்களே நமக்குச் செய்தியாகக் கிடைக்கின்றன. கீழ் மட்டத்தில் நடக்கும் சுரண்டல்களும் எண்ணிக்கையில் அடங்காதவை. அவற்றை MKSS வெளிக்கொணர்ந்தது.

மக்களுக்காக அரசு ஒதுக்கும் நிதி, முழுமையாக மக்களைச் சென்றடையாமல் இடையே அதிகாரப் படிநிலையில் சுரண்டப்படுவது குறித்து அருணாவின் அமைப்பு கேள்வி எழுப்பியது.
சாதனைகள்
மாநில அரசின் திட்டப் பணிகளுக்குக் கிராம மக்களைப் பயன்படுத்தும்போது அவர்களுக்கு உரிய கூலி வழங்கப்பட வேண்டும் என அருணா தொடர்ந்து போராடினார். அதன் விளைவுதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்.


ராஜஸ்தானில் நடந்த மக்கள் குறை கேட்பு அமர்வில் அரசாங்க ஆவணத்தில் செய்து முடிக்கப்பட்டதாக இருக்கும் மக்கள் நலத் திட்டங்கள் எவையும் ஒரு செங்கல் அளவுக்குக்கூட வளரவில்லை என்பது அம்பலமானது. அப்போதுதான் அதற்கான வரவு செலவுகளை மக்களுக்கு காண்பிக்க வேண்டும் என அருணா போராட்டத்தைத் தொடங்கினார். எங்கு தவறு நடந்திருக்கிறது என்று பார்க்கத் தகவல்கள் அவசியம். தகவல்களைக் கேட்பது மக்களின் அடிப்படை உரிமை என ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பெரும் பேரணிப் போராட்டத்தை அருணா நடத்தினார்.

உறுதியான போராட்டத்தால் தகவல் அறியும் உரிமைக்கு ராஜஸ்தானில் சட்ட அங்கீகாரம் கிடைத்தது.
அருணா ராய், தற்போது ராஜஸ்தான் மாநிலம் தேவ்துங்குரி என்னும் சிறிய கிராமத்தில் எளிய மக்களோடு அவர்களில் ஒருவராக வாழ்ந்து, அவர்களுக்காகப் போராடிவருகிறார்.

மாநிலத்திலும் மத்தியிலும் வேலை உறுதியளிப்பும் தகவல் அறிவதும் சட்டமாக்கப்பட்டதும் ஓய்ந்துவிடவில்லை அவர். தொடர்ந்து அதன் பலவீனங்களையும் சுட்டிக்காட்டிப் போராடிவருகிறார். “ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன்” என்கிறார் அருணா ராய்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்