விக்கிபீடியாவுக்குப் பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை. இணையத்தில் எந்த விஷயத்தைத் தேடினாலும், யாரைப் பற்றித் தேடினாலும் அதற்கான பதிலைப் பெரும்பாலும் நமக்கு அளிப்பது விக்கிபீடியாதான். ‘கட்டற்ற கலைக்களஞ்சியம்’ என்ற முழக்கத்துடன் 2001-ல் தொடங்கப்பட்ட விக்கிபீடியா தற்போது உலகம் முழுவதும் 282 மொழிகளில் இயங்கிக்கொண்டிருக்கிறது. பொதுவாக, விக்கிபீடியாவில் எழுதப்படும் கட்டுரைகள் எல்லாமே தன்னார்வலர்களால் எழுதப்படுபவைதான். ஆர்வமிருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பங்களிக்கலாம் என்ற அடிப்படையிலேயே அது இன்றளவும் செயல்படுகிறது.
இதில் ‘தமிழ் விக்கிபீடியா’ 2003-ம் ஆண்டிலிருந்து செயல்படுகிறது. இந்திய மொழி விக்கிபீடியாக்களில் தமிழ் விக்கிபீடியா தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட கணிப்பின்படி, தமிழ் விக்கிபீடியாவில் தற்போது 87, 019 கட்டுரைகள் இருக்கின்றன.
ஆனால், ஆங்கில விக்கிபீடியாவின் 51 லட்சம் கட்டுரைகளுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவுதான். நாளைய தலைமுறை எல்லாவற்றையும் இணையத்திலேயே தேடும் என்பதால், தமிழ் ஆர்வலர்கள் பலரும் தமிழ் விக்கிபீடியாவை மேம்படுத்துவதற்குத் தொடர்ந்து பங்களித்துவருகிறார்கள். எந்த விதப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து தமிழ் விக்கிபீடியாவுக்குப் பங்களித்துவரும் சில பெண்கள் அதன் முக்கியத்துவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார்கள்.
அர்த்தமுள்ள ஓய்வுக் காலம்!
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கணித ஆசிரியரான பூங்கோதை, 2010-லிருந்து தமிழ் விக்கி பீடியாவுக்குத் தொடர்ந்து பங்களித்து வருகிறார். கணிதம் சார்ந்து கிட்டத்தட்ட 600 கட்டுரைகளுக்கு மேல் எழுதியிருக்கிறார். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் திருத்தியிருக்கிறார். தமிழ் விக்சனிரியில் (Wiktionary) இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமான சொற்களுக்கு ஒலிக்குறிப்பை (Audio Reference) இணைத்திருக்கிறார். விக்கிமீடியா பொதுவகத்தில் (Wikimedia Commons) 300-க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களைத் தானே கேமராவில் எடுத்து இணைத்திருக்கிறார்.
“நான் ஓய்வுபெற்ற ஓராண்டுக்குப் பிறகு, ஒருநாள் என்னுடைய இரண்டாவது மகன் பாலாஜெயராம்தான் எனக்குத் தமிழ் விக்கிபீடியாவை அறிமுகப்படுத்தி வைத்தான். விக்கிபீடியாவில் எப்படியெல்லாம் பங்களிக்க முடியும் என்பதை அவன்தான் ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொடுத்தான். ஒருநாளில் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரமாவது விக்கிபீடியாவுக்காக ஒதுக்கிவிடுவேன். நான் கணித ஆசிரியர் என்பதால் பெரும்பாலும் கணிதவியல் கட்டுரைகள் எழுதுவதில்தான் எனக்கு ஆர்வம். அத்துடன், 33 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியதால், மாணவர்களின் விடைத்தாளில் தவறுகளைத் திருத்துவதுபோல் விக்கி கட்டுரைகளில் என் கண்ணில்படும் எழுத்துப் பிழைகள், வாக்கியப் பிழைகள் போன்றவற்றை உடனுக்குடன் திருத்திவிடுவேன். இதில் பங்களிப்பது திருப்தியையும், நம்மாலும் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது.
மனைவி, மகள், குடும்பம் என்பது மட்டுமே ஒரு பெண்ணின் அடையாளமாக இருக்க முடியாது. பெண்களும் ஆண்களைப்போலவே மூளையுடன்தான் படைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் திருமணம், குழந்தைகள் என்றான பிறகு, அந்த மூளையைப் பெரும்பாலான பெண்கள் துருப்பிடிக்க வைத்துவிடுகிறோம். என்னுடைய வாசிப்பையும், அறிவையும் ஓய்வுபெற்ற பிறகும் விரிவாக்கிக் கொண்டிருப்பதற்கு என் விக்கிபீடியா பங்களிப்பு ஒரு முக்கியக் காரணம். அத்துடன், உலகத் தமிழர்களின் நட்பும் விக்கிபீடியா மூலம் எனக்குக் கிடைத்திருக்கிறது. தற்போது தமிழ் விக்கிபீடியாவில் இரண்டு சதவீதத்துக்கும் குறைவான பெண் பங்களிப்பாளர்களே இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் நிறைய பேர் விக்கிபீடியாவில் பங்களிக்க முன்வர வேண்டும்” என்கிறார் பூங்கோதை.
அறிவைப் பகிர்வது முக்கியம்
சேலம் கந்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் பார்வதி. . 2010-லிருந்து தொடர்ந்து தமிழ் விக்கிபீடியாவில் பங்களித்துவருகிறார். இதுவரை பல்வேறு தலைப்புகளில் 600 கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 12 ஆயிரம் கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறார். தமிழர்களின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் 700-க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களை விக்கிமீடியா பொதுவகத்தில் (Wikimedia Commons) இணைத்திருக்கிறார்.
அத்துடன், தன்னுடைய மாணவர்களுக்கும் கணினியில் தமிழ் தட்டச்சுப் பயிற்சியளித்து விக்கிபீடியாவில் பங்களிக்கவைக்கிறார். இவர் தமிழ் விக்கிபீடியாவின் தொடர் பங்களிப்பாளர் விருதைப் பெற்றிருக்கிறார். 2013-ல் ஹாங்காங்கில் நடைபெற்ற விக்கிமேனியா மாநாட்டிலும் கலந்துகொண்டிருக்கிறார் .
“என்னுடைய மாணவர்களுக்காக விக்கிபீடியாவில் தொடர்ந்து கட்டுரைகள் தேடுவேன். அப்படித் தேடும்போதுதான் தமிழ் விக்கிபீடியாவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் புரிந்தது. அதற்குப் பிறகு, எனக்கு ஆர்வமிருக்கும் தலைப்புகளில் கட்டுரைகளை எழுதவும், மேம்படுத்தவும் தொடங்கினேன். பெண் அறிவியலாளர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், தமிழ் இலக்கியம், வைணவத் திருத்தலங்கள், பழந்தமிழ் இசை நுணுக்கங்கள் போன்ற தலைப்புகளில் கட்டுரைகளைத் தமிழ் விக்கியில் உருவாக்கியிருக்கிறேன்.
இதுதவிர, பதினெட்டு மாவட்டங்களில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்சியில் (ICT) கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு விக்கிபீடியாவில் பங்களிப்பதற்கான பயிற்சி அளித்திருக்கிறேன். விக்கிபீடியாவை மேம்படுத்துவது என்பது நம்முடைய அறிவை உலகத்துடன் பகிர்ந்துகொள்வதாகும். விக்கிபீடியா பங்களிப்பாளராக எனக்கும் என்னுடைய மாணவர்களுக்கும் கிடைத்த அங்கீகாரத்தால் எங்களுடைய ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு நிதி உதவிகள் கிடைத்து இப்போது பலவிதங்களில் வளர்ச்சியடைந்திருக்கிறது” என்று உற்சாகமாகச் சொல்கிறார் பார்வதி. ஸ்ரீ.
தயங்காமல் பங்களிப்போம்!
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொறியாளர் நந்தினி கந்தசாமி தமிழ் விக்கிபீடியாவில் 2013-லிருந்து பங்களித்துவருகிறார். 2013-ல் நடைபெற்ற தொடர் கட்டுரைப் போட்டியில் பங்குபெற்று நான்கு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை விக்கிபீடியாவில் கிட்டத்தட்ட மூன்றாயிரம் தொகுப்புகளைச் செய்திருக்கிறார். ஒளிப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் என்பதால் விக்கிபீடியா பொதுவகத்தில் 500-க்கும் அதிகமான ஒளிப்படங்களை இணைத்திருக்கிறார்.
“என்னுடைய அம்மா தமிழ் ஆசிரியர் என்பதால் சிறு வயதிலிருந்தே தமிழில் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தது. தமிழ் விக்கிபீடியாவின் தொடர் கட்டுரைப் போட்டியின் அறிவிப்பைப் பார்த்துத்தான் விக்கிபீடியாவில் எழுதத் தொடங்கினேன். அந்தப் போட்டியில் வெற்றிபெற்றது என்னை ஊக்கப்படுத்தியது. அதற்குப் பிறகு தொடர்ந்து விக்கிபீடியாவில் பங்களித்துவருகிறேன்.
நேரமிருக்கும்போது கட்டுரைகளை மேம்படுத்துவதும், வேலைப் பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஒளிப்படங்களைப் பதிவேற்றுவதுமாக ஏதோவொரு விதத்தில் தொடர்ந்து பங்களித்துவருகிறேன். நம்முடைய மொழியிலேயே நமக்குத் தேவைப்படும் எல்லாத் தகவல்களும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம்தான் விக்கிபீடியாவில் என்னை எழுதவைத்தது. ஆனால், இப்போது தமிழ்விக்கியில் பங்களிக்கும் பெண்கள் இருபத்தைந்துக்கும் குறைவாகவே இருக்கிறார்கள். என்னுடைய தோழிகளைக்கூட விக்கிபீடியாவில் தயங்காமல் தன்னம்பிக்கையுடன் பங்களிக்கத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன்” என்று சொல்கிறார் நந்தினி.
ஆர்வமிருப்பவர்கள் விக்கிமீடியா பொதுவகத்தில் (Wikimedia Commons) ஒளிப்படங்களைக் குறிப்புகளுடன் பதிவேற்றலாம். இதற்கான வழிமுறைகள் எல்லாம் தனித்தனியாக தமிழ் விக்கிபீடியாவில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் விக்கிபீடியாவைப் பொறுத்தவரை பல்வேறு திட்டங்கள் செயல்படுகின்றன. தமிழ் எழுதுவதில் ஆர்வமிருக்கும் பெண்கள் புதிய கட்டுரைகள் எழுதலாம். ஏற்கெனவே எழுதியிருக்கும் கட்டுரைகளை மேம்படுத்தலாம். அதே மாதிரி, தமிழ்ச் சொற்களில் ஆர்வமிருப்பவர்கள் ‘தமிழ் விக்சனரியில்’ (Wiktionary) புதிய சொற்களைச் சேர்க்கலாம். ஒளிப்படங்கள் எடுப்பதில்
தமிழ்விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரை எழுத - https://ta.wikipedia.org/s/ae
தமிழ் விக்கிமீடியா பொதுவகத்தில் படங்கள், ஒலிப்பதிவுகளைச் சேர்க்க: https://commons.wikimedia.org/
தமிழ் விக்சனிரியில் புதிய சொற்களைச் சேர்க்க - https://ta.wiktionary.org/s/2en
தமிழ் விக்கிபீடியர் ஃபேஸ்புக் குழுமம் - https://www.facebook.com/groups/TamilWikipedians/
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago