முகம் நூறு: ஓங்கி ஒலித்த உரிமைக் குரல்!

By எல்.ரேணுகா தேவி

சமூகச் சீர்கேடுகளையும் ஒடுக்கு முறைகளையும் வலிமையான எழுத்துகளால் மக்கள் மத்தியில் கொண்டுசேர்த்தவர் மைதிலி சிவராமன். களப்பணி இவரது அடையாளம் எழுத்து இவரது ஆயுதம்! தமிழகத்தில் நடந்த மிக மோசமான படுகொலையான தஞ்சை கீழவெண்மணி சம்பவத்தை நாடறியச் செய்தவர்களில் முக்கியமானவர் இவர்.

1970-களில் தமிழகத்தில் நடந்த முக்கியமான தொழிற்சங்கப் போராட்டங்களில் மைதிலி சிவராமன் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. தமிழகப் பெண்கள் வரலாற்றில் சிறந்த ஆளுமையாக விளங்கும் மைதிலி சிவராமன் தற்போது அல்சைமர் என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பழைய நினைவுகளை இழந்து ஒரு குழந்தையைப் போல் இருக்கிறார்.

“எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் என் அம்மா சோர்வாக இருந்து நான் பார்த்ததில்லை. அவரது முதுகெலும்பு நேராகவே இருக்கும். எப்போதும் ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே இருப்பார். சிறு ஓய்வுக்காகக்கூட அம்மா சோர்ந்து படுக்க மாட்டார்.

பத்து வேலைகளை ஒற்றை ஆளாகச் செய்வார். கட்டுரைகளை டைப் செய்வது, போன் செய்வது, பொதுக்கூட்டங்களுக்குச் செல்வது, புத்தகங்களைப் படிப்பது என்று எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார். இப்போது அம்மா அப்படி இல்லை” என வருத்தத்துடன் சொல்கிறார் மைதிலி சிவராமனின் மகள் பேராசிரியர் கல்பனா.

குடும்பப் பின்னணி

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பங்கஜம்-சிவராமன் தம்பதிக்கு 1939-ம் ஆண்டு ஐந்தாவது மகளாக பிறந்தார் மைதிலி சிவராமன். படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில். பெண்கள் பருவம் எய்தியதுமே திருமணம் செய்துவைத்துவிடும் காலத்தில் தன்னுடைய சகோதரர்களின் ஆதரவால் பி.ஏ. அரசியல் அறிவியல் படித்து, அதில் தங்கப் பதக்கமும் பெற்றார் மைதிலி. பிறகு டெல்லியில் உள்ள பொதுநிர்வாக நிறுவனத்தில் (ஐ.ஐ.பி.ஏ.) எம்.ஏ. பொது நிர்வாகம் படித்தார்.

நிறைய படிக்க வேண்டும் என்ற மைதிலியின் ஆர்வத்துக்குக் காரணம் அவருடைய பாட்டி சுபலட்சுமி. படிப்பின் மீது அவருக்குத் தீராத வேட்கை இருந்தது. தனக்கு மறுக்கப்பட்ட கல்வி, தன்னுடைய மகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன் மகள் பங்கஜத்தை (மைதிலியின் அம்மா) பள்ளிக்கு அனுப்பினார். ஆனால் சுபலட்சுமியின் உடல்நலம் குன்றவே ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பங்கஜத்துக்கு படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்த பங்கஜம் திருமணத்துக்குப் பிறகு தன்னுடைய ஐந்து குழந்தைகளையும் படிக்க வைத்தார். டெல்லியில் படித்து முடித்த மைதிலிக்கு அமெரிக்கா சென்று படிப்பதற்கான உதவித்தொகை கிடைத்தது.

கியூபப் பயணமும் தபால் விமானமும்

அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்த பிறகு ஐ.நா. சபையில் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகள் குறித்த கமிட்டியில் ஆராய்ச்சியாளராக இணைந்தார். அன்றைய சூழ்நிலையில் அமெரிக்காவில் சிவில் உரிமைக்கான போராட்டங்கள் உச்சகட்டத்தில் இருந்தன. அங்கு நடந்த அரசியல் மாற்றங்கள், போராட்டங்கள், படுகொலைகள் போன்றவை மைதிலியை மிகவும் பாதித்தன. இந்தச் சூழ்நிலையில் அமெரிக்காவில் படித்துவந்த தற்போதைய ‘தி இந்து’ குழும தலைவர் என். ராம், முன்னாள் மத்திய அமைச்சர்

ப. சிதம்பரம் இவர்களோடு இடதுசாரி சிந்தனையுள்ள பலரைச் சந்திக்கும் வாய்ப்பு மைதிலிக்குக் கிடைத்தது. பிற்காலத்தில் மார்க்சிய சிந்தனையாளராக மாறிய மைதிலி சிவராமன், இவ்வளவு பெரிய அமெரிக்காவைச் சிறு நாடாக இருக்கும் கியூபா எப்படி எதிர்க்கிறது என்பதை நேரில் சென்று பார்க்க முடிவு செய்தார்.

“அப்போதெல்லாம் அமெரிக்காவில் இருந்து கியூபா செல்ல அனுமதி கிடையாது. அதனால் அம்மா முதலில் அமெரிக்காவில் இருந்து மெக்ஸிகோ சென்று, அங்கிருந்து கியூபாவுக்குச் சென்றார். கியூபாவில் நடந்த நிலச் சீர்திருத்த நடவடிக்கை, அனைவருக்கும் சமமான கல்வி முறை போன்றவற்றைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஒரு பொதுவுடமை அரசாங்கத்தால் மட்டும்தான் மக்களுக்கான அரசாக இருக்க முடியும் என்பதை கியூபா மூலம் அம்மா அறிந்துகொண்டார்” என்கிறார் கல்பனா.

கியூபாவில் இருந்து அமெரிக்கா திரும்பும்போது மெக்ஸிகோ விமான நிலையத்திலேயே கியூபா சென்று வந்ததற்கான அனுமதிச் சீட்டைக் கிழித்துப் போட்டுவிட்டார் மைதிலி. பின்பு தபால்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவுக்குச் செல்லவிருந்த ஒரு சிறு விமானத்தில் ஏறி அமெரிக்காவை அடைந்தார்.

வேண்டாம் பேராசிரியர் வேலை

இந்தியா திரும்பிய மைதிலி சிவராமனுக்கு புகழ்பெற்ற ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி காத்துக்கொண்டு இருந்தது. அதேபோல் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

“ஆனால், இதுபோன்ற வாய்ப்புகளை எல்லாம் அம்மா ஏற்கவில்லை. அவர் நாடு திரும்பும் போதே ஒரு பொதுவுடமை சமுதாயத்துக்காகத் தான் வேலை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் வந்தார். அதன்படியே அவர் வாழ்ந்தும் காட்டினார்” என்கிறார் கல்பனா.

பின்னர் சென்னையில் தன்னுடைய நண்பர்களான என்.ராம், ப.சிதம்பரம் ஆகியோருடன் சேர்ந்து ‘ராடிகல் ரெவ்யூ’ என்ற ஆங்கில பத்திரிகையைத் தொடங்கினார் மைதிலி. அந்த பத்திரிகையின் ஆசிரியராகச் செயல்பட்டார். பல முன்னணி நாளிதழ்களில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதி யுள்ளார் மைதிலி சிவராமன்.

அவர் எழுதிய ‘வெண்மணி ஒரு காலத்தின் பதிவு’, ‘ஆண் குழந்தைதான் வேண்டுமா?’, ‘கஸ்தூர்பா: மகாத்மாவின் மனைவி எழுப்பும் கேள்விகள்’ ‘கல்வித்துறையில் வறுமையால் நசுக்கப்படும் குழந்தைகள்’, ‘பெண்களும் மதச்சார்பின்மையும்’, ‘சமூகம் ஒரு மறுபார்வை’ மற்றும் தன்னுடைய பாட்டி குறித்து எழுதிய ‘ஒரு வாழ்க்கையின் துகள்கள்’ உள்ளிட்ட புத்தகங்கள் அவரது களப்பணியையும் ஆய்வுத் திறமையையும் பறைசாற்றும். அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளை எழுத்தாளர் வ. கீதாவும் மைதிலியின் மகள் கல்பனாவும் ‘ஹான்டட் பை ஃபயர்’ (Haunted By Fire) என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுத்திருக்கிறார்கள்.

நண்பர்களால் நிறைந்த வீடு

தன் மகள் ஒரு நல்ல வேலையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தவர் அவருடைய தந்தை சிவராமன். ஆனால் எப்போதும் தொழிற்சங்கப் பணிகள், மாதர் சங்கக் கூட்டங்கள் என்று இருந்த மைதிலியை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பொதுக் கூட்டங்கள் முடிந்து வீட்டுக்கு வரும் மைதிலிக்கு சாப்பாடு கொடுக்கக் கூடாது எனச் சொல்வாராம். ஆனால் அப்பாவுக்குத் தெரியாமல் மாடிப் படிக்கட்டுகளில் ஏறி தன்னுடைய அறைக்குச் சென்றுவிடுவாராம் மைதிலி. பிறகு அவரது போக்கிலேயே விட்டுவிட்டாராம் மைதிலியின் அப்பா.

“அம்மாவைப் போல் என் அப்பாவும் இடதுசாரிச் சிந்தனையாளர்தான். இருவரின் கருத்தும் ஒருமித்துப் போக, திருமணம் செய்துகொண் டார்கள். இதனாலேயே எங்கள் வீடு எப்போதும் நண்பர்களால் நிரம்பியிருக்கும்” என்கிறார் கல்பனா.

மறக்க முடியாத தருணம்

தற்போது மறதி நோயால் பாதிக்கப்பட்டி ருக்கும் மைதிலி சிவராமன், சிறு குழந்தைகளைப் பார்த்தால் மிகவும் உற்சாகம் ஆகிவிடுகிறார்.

“ஒரு நாள் அம்மா தூங்கி எழுந்த சமயம். கியூபா நாட்டின் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ இறந்துபோன செய்தி வெளியாகி இருந்தது. அம்மாவிடம் சொன்னேன். அதைக் கேட்டதும் அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. என்னைப் பார்க்க முடியாமல் அவர் முகத்தை திருப்பிக்கொண்டார். சில நினைவுகள் மட்டும் அவருக்குள் ஆழப் பதிந்து விட்டதை நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது” என நெகிழ்ந்துபோய் சொல்கிறார் கல்பனா. நினைவுகள் எல்லாம் அழிந்து குழந்தைபோல இருந்தால் என்ன? பெண் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் குரல்கொடுத்த மைதிலி சிவராமன், நிகரற்ற ஆளுமை என்பதில் சந்தேகமில்லை.



இன்று பெண்கள் அடைந்திருக்கும் ஓரளவு முன்னேற்றமும் கிடைத்திருக்கும் உரிமைகளும் எளிதில் கிடைத்துவிடவில்லை. இதற்குப் பின்னால் பல்லாயிரக்கணக்கான பெண்களின் பல நூற்றாண்டு காலப் போராட்டம் இருக்கிறது. எத்தனையோ பெண்கள் ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்குப் பலியாகியிருக்கிறார்கள். சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அத்தகைய போராட்டக்காரர்களில் சிலரை இந்த மகளிர் தினத்தில் நினைவுகூர்வோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்