பழைய திரைப்படங்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் டாக்டருக்குப் போன் செய்வார்கள். உடனே டாக்டரும் சிறிய கைப்பெட்டியுடன் வீட்டுக்கே வந்து சிகிச்சையோ முதலுதவியோ செய்துவிட்டுக் கிளம்புவார். அரிதாகிப்போன அந்த நிகழ்வை மீண்டும் அரங்கேற்ற முயற்சித்து வருகிறார் வித்யா கிரிசபரி. இவர் ஒரு பல் மருத்துவர். நம் வீட்டில் இருக்கிறவர்களுக்கு பல்லில் பிரச்சினை என்று இவருக்கு போன் செய்தால் போதும், வீட்டுக்கே வந்து சிகிச்சையளிப்பார். தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண் ஒருவர், நடமாட முடியாத தன் மாமியாரைப் பற்றிப் பகிர்ந்துகொண்டதன் விளைவுதான் இது என்கிறார் வித்யா.
“எல்லா மருத்துவ மாணவர்களைப் போல படிப்பு முடிந்ததும் மருத்துவமனை ஆரம்பிப்பதுதான் என் நோக்கமாகவும் இருந்தது. படிக்கும்போதே ஒரு டாக்டரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டதால் பயிற்சிக்காக நாட்களை செலவு பண்ணவில்லை. படிப்பு முடிந்த அந்த வருடமே நான் என் கிளினிக்கை ஆரம்பித்தேன். நோயாளிகள், சிகிச்சை என இயல்பாகத்தான் எல்லாமே நடந்தது. மூணு வருஷத்துக்கு முன்பு என்னிடம் சிகிச்சைக்காக ஒரு பெண் வந்தாங்க.
அவங்க மாமியாருக்கும் பல்லில் பிரச்சினை. அவங்களால நடக்கக்கூட முடியாததால சிகிச்சைக்காக வெளியே அழைத்துப்போக முடியலைன்னு வருத்தத்தோட சொன்னாங்க. ஏன் நாமே வீடுகளுக்குப் போய் சிகிச்சை அளிக்கக்கூடாது என நினைத்தேன். அதை உடனே செயல்படுத்திவிட்டேன்” என்று சொல்லும் வித்யா, ஆரம்பத்தில் இதில் நிறைய சிக்கல்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
நேரமின்மை, சிகிச்சைக்கான உபகரணங்களை எடுத்துச் செல்வதிலும், வீட்டில் வைத்து சிகிச்சையளிப்பதிலும் சிக்கல் எனப் பல தடங்கல்களைத் தொடக்கத்தில் சந்தித்திருக்கிறார். ஆனால் ஒவ்வொரு சிக்கலாக ஆராய்ந்து அவற்றைச் சரிசெய்தபடியே தன் பணியைத் தொடர்ந்தும் இருக்கிறார்.
“என் அம்மா 35 வருடம் நர்ஸாக வேலை பார்த்தாங்க. அதனால மருத்துவம் என்பது வேலையல்ல, சேவை என எனக்கு நல்லாவே தெரியும். அதனால்தான் கிளினிக் தொடங்கின நாளில் இருந்து இன்று வரைக்கும் குறைவான கட்டணத்தில் சிகிச்சையளிக்கிறேன். கட்டணம் தரமுடியாத நிலையில் இருக்கிறவர்களுக்கு இலவசமாகவும் சிகிச்சையளிக்கிறேன். பள்ளிகள், அனாதை இல்லங்களில் மருத்துவ முகாம்களும் நடத்துகிறோம்.
ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் அன்னப்பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யவும் துணை நிற்கிறோம். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள், குழந்தைகளுக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சையளிக்கும் போது கிடைக்கிற மனநிறைவுதான் என் எல்லையை விரிவாக்க உதவுகிறது” என்கிறார் வித்யா.
ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, பல் சொத்தை இல்லாத கிராமமாக அதை மாற்றுவது இவரது இலக்குகளில் ஒன்று.
தினமும் கவனம்
சீரான பல் பராமரிப்பு, பிரச்சினைகளில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கும் என்று சொல்கிற வித்யா, பல் பராமரிப்பு குறிப்புகளைத் தருகிறார்.
“தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். எவ்வளவு நேரம் பல் துலக்குகிறோம் என்பதைவிட எப்படி துலக்குகிறோம் என்பதுதான் முக்கியம். மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும், வட்டமாகவும் பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. குறிப்பாக சர்க்கரை நோய், இதய பாதிப்பு உள்ளவர்கள் நிச்சயம் பல்லைச் சீராகப் பராமரித்தே ஆக வேண்டும்.
காரணம் பல்லில் ஏற்படுகிற கிருமித்தொற்று, மாரடைப்புக்கு வழி வகுக்கும் என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு பல் பராமரிப்பு மிக முக்கியம். அவர்களுக்குப் பல்லில் ஏதாவது பாதிப்பு இருந்தால், அங்கிருக்கும் கிருமிகள், தொப்புள் கொடி வழியாகக் குழந்தையைத் தாக்கும் அபாயம் இருக்கிறது. குழந்தைகள் கருவில் இருக்கும்போது மூன்று மாதத்திலெயே அவர்களுக்கு பல் முளைப்புக்கான ஆரம்ப வளர்ச்சி தொடங்கிவிடும். தாயின் பல் பிரச்சினையால் குறைப்பிரசவம், குறைந்த எடையுடன் குழந்தை பிறத்தல் போன்றவை நேரக்கூடும் என்பதால் இரு மடங்கு கவனத்துடன் இருப்பது அவசியம்” என்று பல் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்துச் சொல்கிறார் வித்யா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago