விவாதம்: பொருளாதார விடுதலையே பெண் விடுதலை!

By பிருந்தா சீனிவாசன்

கணவனின் கொடுமைகளைப் பொறுத்துப் போகும் பெண்கள் குறைந்துவிட்டனர். கல்வியும் பொருளாதாரச் சுதந்திரமும்தான் இதற்குக் காரணம். ஆனாலும் மனைவிகளின் மீதான அடக்குமுறையை ஆண்கள் இன்னும் கைவிடவில்லை. எவ்வளவுதான் படித்திருந்தாலும் தனக்கான முடிவுகளைத் தேர்வு செய்யும் உரிமையை மட்டும் பெண்கள், இன்னும் முழுமையாகப் பெறவில்லை. உறவுகள் , குடும்பம் எனும் பாதுகாப்பு வளையத்துக்குள் ஒடுங்கிப் போய் கணவனின் வன்முறையை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகிறார்கள். எதிர்த்துப் போராடும் பெண்களுக்குச் சுற்றியுள்ள சமூகம் ஆதரவு தராத நிலையும் அவர்களின் துணிவைக் குறைத்துவிடுகிறது. ஆணும் பெண்ணும் அவரவர் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் ஆரோக்கியமான நிலை குடும்பங்களில் ஏற்பட வேண்டும். சரியான புரிதல் மட்டுமே வன்முறையைத் தடுக்கும்.

சுபா தியாகராஜன், சேலம்

பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் ஏட்டளவில்தான் இருக்கின்றன. கணவன் கொடுமை தாங்காமல் வெளியே வந்தாலும், அந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடும் பெண்கள் எத்தனை பேர்? காவல் நிலையம், நீதிமன்றம் சென்றாலும் நியாயம் கிடைப்பதில்லை. வருடக் கணக்கில் வழக்குகள் நடக்கின்றன. வேலைக்கும் போகக் கூடாது. போனால் வருமானம் வருகிறது, அதனால் கணவன் ஜீவனாம்சம் தர வேண்டியதில்லை. குழந்தைகள் ‘மேஜர்' என்றால், பணம் தர வேண்டியதில்லை. இதுதான் சட்டம். கணவன் இன்னொரு கல்யாணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருக்கிறார். நான் பல வருடங்களாகப் போராடுகிறேன். நியாயம் கிடைக்கவில்லை. உண்மையான தீர்வு எப்போது கிடைக்கும்?

கலா குட்டி, ஊர் குறிப்பிடவில்லை

சிறிய சலசலப்பைக்கூட ஏற்படுத்தாத பிரச்சினை குடும்ப வன்முறைதான். இதற்கு நான் தீர்வு கண்டு வெள்ளி விழா கொண்டாடியிருக்கிறேன். நண்பனை அறைந்துவிட்டால் அன்றோடு நட்பு முறிந்துவிடுகிறது. எத்தனை சமாதானம் சொன்னாலும் நட்பு துளிர்க்காது. மனைவியும் நண்பனைப் போல நடுவில் அறிமுகமானவர்தான். அவரை அடித்துவிட்டு எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் எப்படிக் கணவனால் சகஜமாகப் பழக முடிகிறது? இந்தக் கேள்வியைத் திருமணமானவுடன் எனக்குள் கேட்டு விடைபெற்று, வெற்றிகரமாகக் குடும்பத்தை நடத்திவருகிறேன்.

ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

கூட்டுக் குடும்பத்தில் கணவன், மனைவியை ஒரு வட்டத்துக்குள் அடைத்து, மகன் இப்படிச் செய்ய வேண்டும், மருமகள் அப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒரு பெண்ணுக்கு மன அழுத்தத்தைத் தர ஆரம்பித்துவிடுகிறது. சற்றுக் கூடுதலான சுதந்திரம் பெண்ணுக்குக் கிடைத்துவிட்டாலோ உரிமையோடு அதை எடுத்துக்கொண்டாலோ முதலில் அவரை அந்நியப்படுத்துவதே கணவன்தான்.

சூர்யகாந்தி முத்துக்குமரன், தஞ்சாவூர்.

ஆணும் பெண்ணும் தோற்றத்தால் மாறுபட்டாலும் இருவரும் மனிதர்களே. திருமணத்துக்குப் பிறகு கணவன், மனைவி இருவரும் தத்தம் பெற்றோரையே பிரதிபலிக்கின்றனர். அதனால் வரும் தலைமுறையிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

நிவேதா, நெய்வேலி.

குடும்பப் பிரச்சினைகளை வெளியில் சொல்வதைவிடப் பேசித் தீர்ப்பதுதான் சிறந்தது. மனைவியை அடிப்பது தவறு. ஆண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள், பெண்களைப் பற்றி உயர்வாகவும் மதிக்கவும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதேபோல் பெண் குழந்தைகளுக்கும் ஆண்களைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லி வளர்க்க வேண்டும். ஆணும் பெண்ணும் ஈகோவைக் கழற்றி வைத்து வந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் வராது.

உஷா முத்துராமன், திருநகர்.

நமது இந்தியச் சமூகத்தில் இன்றும் ஆணாதிக்கமும் குடும்ப வன்முறையும் மேலோங்கி இருக்கின்றன. பெண் என்பவள் ஆணுக்கு அடங்கியவள் என்பதையே நமது இலக்கியங்கள், புராணங்கள் முதற்கொண்டு தற்காலத் திரைப்படங்கள்வரை விதம்விதமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கணவன், மனைவியை அடிப்பதை இயல்பாகக் கடக்கிறது நமது சமூகம்.

இது தவறு என்பதையே இப்போதுதான் பெண்கள் உணரத் தொடங்கியுள்ளனர். குடும்ப வன்முறையை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பெண்கள், மற்ற பெண்களாலேயே இழிவாகப் பார்க்கப்படும் நிலையும் உண்டு. பெண்களை மதிப்பது இயல்பாக வரவேண்டிய ஒன்று. படித்த, நாகரிகம் மிகுந்த குடும்பங்களில்கூடப் பெண்களை வெறும் பதுமைகளாக நடத்தும் பாங்கு மிகுந்துள்ளது.

அதேநேரம் படிப்பறிவில்லாதவர்கள்கூடத் தங்கள் மனைவிக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கின்றனர். குடும்ப உறவுகளை அனுசரித்துப்போவதும் விட்டுக்கொடுத்துப் போவதும் பெண்கள் கடமை என்று ஆண்கள் நினைக்கும் போக்கும் நமது சமூகத்தில் நிலவுகிறது. இவை அனைத்தும் உடனே மாற்றப்பட வேண்டியவை. பொருளாதாரப் பாதுகாப்பு கிடைக்கிறது என்பதற்காக ஒரு பெண் தனக்கு நடக்கும் கொடுமைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசாங்கம் தனி உதவி மையம் அமைத்து, அவர்கள் சொந்த உழைப்பில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழிகாட்ட வேண்டும்.

தேஜஸ், கோவை.

குடும்பத்தைப் பற்றிய பெண்களின் கோட்பாடுகளுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. தாங்கள் அடங்கிப் போனால் பிரச்சினைகள் தீரும் என்று பெரும்பாலான பெண்கள் நம்புகிறார்கள். ஒரு பெண் அடங்கிப் போகும்போது அவள் பலவீனமானவள் என்ற எண்ணம் வலுப்பட்டு, அவளுக்குப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன என்பதுதான் உண்மை. தைரியம் இல்லாதவன்தான் மனைவியை அடிப்பான். அவனை ஆரம்பத்திலேயே எதிர்த்துவிட்டால் பிரச்சினை அப்போதே முடிந்துவிடும். குடும்ப நலனுக்காக ஒரு பெண் விட்டுக்கொடுத்து போக வேண்டும்தான். ஆனால் சுயமரியாதையைச் சீண்டிய பின்னும் அவள் விட்டுக் கொடுத்தால், கணவனே அவளை மதிக்க மாட்டான். பெண்கள் தங்கள் பலத்தை உணராமல் இருப்பதும் ஆண்கள் தங்கள் பலவீனத்தை உணராமல் இருப்பதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம்.

ஜே.லூர்து, மதுரை

பொதுவாகக் குடும்ப அமைதிக்காகச் சிறு சிறு பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தி வெளியே சொல்லக்கூடாது என்பது பெரியோர் சொல்லும் அறிவுரை. ஆனால் தொடர்ந்து மன அழுத்தம் தரக்கூடிய வகையில் பிரச்சினைகள் கொந்தளிக்கும்போது, அதைப் பொறுத்துக் கொள்ளாமல் தகுந்த முறையில் தீர்வு காண முற்படுவதே புத்திசாலித்தனம். இத்தகைய சூழலில் பொருளாதாரச் சுதந்திரம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அது இல்லாத பட்சத்தில் பெண்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். அத்தகைய பெண்களுக்கு அரசுக் காப்பகங்களில் தேவையான கல்வியும் பயிற்சியும் அளித்து, பொருளாதாரச் சுதந்திரமடையச் செய்தால் நல்லது.

இரா. பொன்னரசி, வேலூர்

பெண்கள் தங்கள் பிரச்சினைகளைச் சொல்லலாம் அல்லது சொல்லக்கூடாது என்று விவாதிப்பதற்குப் பதிலாகக் கொஞ்சம் ஆழமாக இது குறித்து சிந்திக்க வேண்டும். முதலில் ஆணோ பெண்ணோ தன் வாழ்க்கைத் துணையைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். இதற்கு ஒரு மாதமும் ஆகலாம், ஒரு வருடமும் ஆகலாம். அதற்குப் பிறகே தெளிவான முடிவை எடுக்க முடியும். இருவருமே விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். ஆனால் அதற்கும் எல்லை உள்ளது. தனக்கான உரிமை, கடமை, எல்லை அனைத்தையும் பெண் உணர வேண்டும்.

பிரேமா குமாரி, சென்னை

தன்னம்பிக்கை, தைரியத்தை வளர்த்துக்கொண்டால்தான் தனி மனுஷியாக இருந்தாலும் உலகில் தலைநிமிர்ந்து வாழ முடியும். பிரச்சினைகளைத் தீர்க்க சட்டத்தின் துணையை நாடுவதைவிடச் சம்பந்தப் பட்டவர்களுடன் சுமூகமாகப் பேசுவதே சிறந்தது. பிரிவதாக முடிவெடுத்தாலும், வசதிக்கு ஏற்ப ஜீவனாம்சத் தொகையைக் கேட்டு வாங்கலாம். பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்படும் பெண்களைவிட, மனரீதியாகப் பாதிக்கப்படுபவர்கள்தான் அதிகம் என்பதால், எந்த நிலையிலும் மன உறுதியுடன் செயல்பட வேண்டும்.

என்.உஷாதேவி, மதுரை

பெண்களின் பலமே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் தாய்மையும்தான். அதையே பெண்களின் பலவீனம் என்று நினைத்து ஆண்கள் மனம் போன போக்கில் நடந்துகொள்கின்றனர். இதிலிருந்து மீள்வதற்கு ஒரே மார்க்கம் பொருளாதாரச் சுதந்திரம்தான்.

கயல்விழி, நெய்வேலி.

குடும்பச் சூழலை எதிர்கொள்ளக் கல்வி மட்டும் போதாது. துணிச்சலும் தன்னம்பிக்கையும் பிறரைச் சார்ந்து வாழாத தைரியத்தையும் பெண்களுக்குச் சிறு வயதிலிருந்தே ஊட்டி வளர்க்க வேண்டும். விட்டுக் கொடுத்து வாழலாம், பொறுத்துக்கொண்டு அடிமையாக இருக்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். எந்தப் பிரச்சினை வந்தாலும் பெற்றோர்கள் தனக்கு துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இந்தச் சமுதாயம் ஆண்களுக்கு மட்டும் அல்ல, பெண்களுக்குமானது என்பதை உணர்த்த வேண்டும்.

ராஜபுஷ்பா, கும்பகோணம்.

குடும்ப வன்முறை தடைச் சட்டம் பெண்களுக்காகவே அமல்படுத்தப்பட்டுள்ளது. கணவன் கொடுமைப்படுத்தினால் மனைவி இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அலுவலரிடம் புகார் கொடுக்கலாம். இந்தச் சட்டப்படி மனைவியை அடித்து வீட்டை விட்டுத் துரத்துவது குற்றம். ஒவ்வொரு மாதமும் மனைவிக்கு ஒரு தொகையைக் கணவன் கொடுக்க வேண்டும். ஆனால் நம் நாட்டுப் பெண்கள் கணவனைச் சிறைக்கு அனுப்ப விரும்புவது இல்லை. கணவனால் கொடுமைப்படுத்தப்படும் பெண்கள் தைரியமாகப் புகார் கொடுக்க வேண்டும்.

வெ. ஜெயலட்சுமி, கோவை.

பெண்கள் குழந்தைகளுக்காகவே கணவனின் வன்கொடுமைகளை வெளியே சொல்லாமல் பொறுத்துக் கொள்கின்றனர். குடும்ப விஷயத்தை வெளியே சொன்னால் அசிங்கம் என்று பெண்கள் நினைப்பதாலேயே கணவர்களின் கொடுமை அதிகரித்துக்கொண்டே போகின்றன. இது மாறவேண்டும். கணவன் மீது வழக்கு போட்டால் விரைவில் தீர்க்கப்பட வேண்டும்.

அர்ச்சனா லட்சுமணன், மதுரை.

கல்வி, வேலைவாய்ப்பு முதலிய விஷயங் களில் பெண்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட வேண்டும். பொருளாதார விடுதலை பெற்றவர்களாகப் பெண்கள் இருந்தால், எவரையும் எதிர்பார்த்து வாழும் நிலைமை ஏற்படாது. பணிக்குச் செல்ல முடியாத சூழல் இருப்பினும், தகுதிக்கு மீறிய, நடைமுறைக்கு ஒவ்வாத ஆண்களைத் திருமணம் செய்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தற்காலிகமானதாகவே எடுத்துக்கொண்டு, ஆண் பெண் இருபாலரும் விட்டுக் கொடுத்து வாழும் மனநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வி.மோகன ராணி, ஈரோடு.

ஓர் எல்லைக்கு மேல் குடும்பப் பிரச்சினைகளை வெளியே கொண்டு செல்லத்தான் வேண்டும். நீதிமன்றங்கள் குடும்பப் பிரச்சினைகள் சார்ந்த வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும். திருமணத்துக்கு முன்பே ஆண், பெண் இருவருக்கும் சரியான ஆலோசனை வழங்க வேண்டும்.

டி.கே. மூர்த்தி, தலைஞாயிறு.

பெரும்பாலான குடும்பங்களில் தான் சம்பாதிக்கிறேன் என்ற ஆணாதிக்க மனோபாவமே குடும்ப வன்முறைகளுக்குக் காரணமாகிறது. இந்த நிலைக்குத் தீர்வு காண ஒவ்வொரு பெண்ணும் தான் கற்ற கல்வி மூலம் தகுந்த பணியை நாட வேண்டும். இதனால் தன்னம்பிக்கை துளிர்ப்பதோடு குடும்ப வன்முறையும் குறையும்.

எஸ்.பிரபு, தேனி.

பெண்களை அடிப்பதை ஆண்கள் என்று குற்றமாகக் கருதுகிறார்களோ, என்ன நடந்தாலும் பெண்கள் அடங்கிப் போகும் அடிமைத்தனத்தைக் கைவிடுகிறார்களோ அன்றுதான் பிரச்சினைகள் தீரும்.

அ.மு. மைதீன் பாத்திமா, தேவகோட்டை.

அரசு குடும்ப வன்முறையை குறித்துத் தெளிவு ஏற்படும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கருத்தரங்குகள், ஆலோசனை மையங்களை அமைக்க வேண்டும்.

வசந்தா மாரிமுத்து, சென்னை.

குடும்பக் கவுரவம் என்ற மையப் புள்ளியை வைத்தே பெண்களை முடக்கிய ஆண் ஆதிக்கச் சமூகம், ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதி என்ற கொள்கையை வகுத்து தப்பித்துக்கொள்வது ஏற்புடையதல்ல. படித்த பெண்களாலேயே வெளியே சொல்ல முடியாதபோது பாமரப் பெண்கள் என்ன செய்வார்கள்? இதிலிருந்து மீள பெண்களுக்கென்று வலுவான சட்டங்களும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் தேவை.

தாரா ரமேஷ், புதுச்சேரி.

கணவன் மனைவியைக் கொடுமைப்படுத்த முதல் காரணம் அவன் தன் பெற்றோரைப் பார்த்து வளர்ந்த முறை. அடுத்து சமுதாயமும் பெண்ணைப் பேசவோ, கருத்துக் கூறவோ அனுமதிப்பதில்லை. எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று நினைக்கும் ஆணாதிக்கச் சமுதாயத்துக்கு, அவர்களைவிட அதிகமாகப் பெண்களுக்குத் தெரியும் என்பது தெரியாது.

தேவஜோதி, மதுரை

வீட்டில் நல்லது நடந்தால் அவரின் முயற்சி, அவரின் உழைப்பு என்று ஆண்களைப் போற்றும் குடும்பத்தினர், கெட்டதாக ஒரு செயல் நடந்துவிட்டால் எல்லாம் உன்னால்தான் என்று பெண்களுக்கு அவப்பெயரைச் சுமத்துவார்கள். குடிப்பதால்தான் அடிக்கிறான் என்ற நிலை தற்போது இல்லை, பல கணவர்கள் குடிக்காமலேயே மனைவிகளை அடிக்கிறார்கள். வேலைக்குச் செல்லும் பல மனைவிகளின் ஏ.டி.எம் கார்டுகள் கணவர்களின் கையில்தான் உள்ளன. பத்து சதவீதத் தம்பதிகளே ஆதர்ச தம்பதிகளாக வாழ்கிறார்கள். மீதி பேர் வாயிருந்தும் ஊமைகளாகத்தான் வாழ்கிறார்கள். பெண்களின் துயரம் தீர இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டுமோ?

ராஜேஸ்வரி, தஞ்சாவூர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்