நிறப் பாகுபாடுகளே இன்றளவும் குறையாமல் இருக்கும் காலகட்டத்தில் வெண்புள்ளிகள் குறித்த புரிதல்கள் இப்போதுதான் உருவாகிவருகின்றன. இந்தச் சூழலில் மாடலிங் உலகின் அத்தனை கற்பிதங்களையும் உடைத்து நொறுக்கியிருக்கிறார் கனடாவைச் சேர்ந்த 22 வயது வின்னி ஹார்லோ!
ஜமைகா வம்சாவளியைச் சேர்ந்த வின்னி ஹார்லோ, கனடாவில் பிறந்தவர். இவருக்கு நான்கு வயதில் வெண்புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தன. அக்கம்பக்கத்துக் குழந்தைகள் `மாடு, வரிக்குதிரை’ என்றெல்லாம் இவரை அழைப்பார்கள். பள்ளியில் மிக மோசமான வார்த்தைகளுடன் ‘ம்ம்ம்மாஆஆஆஆஆ’ என்று மாடு போல குரல் கொடுத்து கிண்டல் செய்வார்கள். தினமும் கண்ணீருடன் வீட்டுக்கு வருவார் வின்னி. அம்மாவும் சகோதரிகளும் அன்பான அணைப்புகளாலும் ஆறுதலான வார்த்தைகளாலும் காயத்துக்கு மருந்திட்டு, மறுநாள் பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள்.
தாங்க முடியாத துயரங்களைச் சந்திக்கும்போது வேறு பள்ளிக்கு மாறுவார். அங்கும் கேலிகள் அதிகரிக்கும்போது மற்றொரு பள்ளிக்குச் செல்வார். 16 வயதில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, வன்முறை வார்த்தைகளால் துவண்டு போன வின்னி, தற்கொலைக்கு முயன்றார். அத்துடன் கல்வியையும் கைவிட்டார்.
பாடகர், டான்சர், பத்திரிகையாளர் என்றெல்லாம் பல கனவுகளைச் சுமந்துவந்த வின்னிக்கு, திடீரென்று ஒப்பனை மீது ஆர்வம் வந்தது. யூடியூப் மேக்கப் வீடியோக்களைப் பார்த்தார். அவற்றிலிருந்து தன் தோல் நிறத்துக்குப் பொருத்தமான விஷயங்களை எடுத்துக்கொண்டார். ஒருநாள் ஒப்பனையோடு இருந்த வின்னியைப் பார்த்த அவரது தோழி, `பத்திரிகை அட்டைகளில் இடம்பெறக்கூடிய வகையில் அழகாக இருக்கிறாய்’ என்று பாராட்டினார். வின்னிக்கு முதல் முறையாகத் தன் தோல் நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மை அகன்றது. விதவிதமாக ஒப்பனை செய்து யூடியூபில் வீடியோவாகவும் இன்ஸ்டாகிராமில் ஒளிப்படங்களாகவும் வெளியிட்டார்.
அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றில் ‘அமெரிக்காவின் அடுத்த டாப் மாடல்’ என்ற நிகழ்ச்சியை நடத்திவரும் டைரா பேங்க்ஸ் பார்வையில் வின்னியின் வீடியோ பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு வின்னிக்கு அழைப்பு விடுத்தார் டைரா பேங்க்ஸ். வின்னியின் அத்தனை துயரங்களும் சட்டென்று மறைந்துபோயின. தான் கனவில்கூட நினைக்காத மாடலிங் துறைக்குள் மிகுந்த தன்னம்பிக்கையோடு நுழைந்தார் வின்னி.
2014-ம் ஆண்டு நடைபெற்ற `அமெரிக்காவின் அடுத்த டாப் மாடல்’ நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 14 போட்டியாளர்களில் ஒருவராக வந்தார் வின்னி. இறுதிப் போட்டிக்கு இரு வாரங்களுக்கு முன்பு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்து ‘கம்பேக் சீரிஸ்’ போட்டியில் கலந்துகொண்டு, பொதுமக்கள் வாக்குகளை அதிகம் பெற்று மீண்டும் போட்டிக்குள் நுழைந்தார். 13-வது வாரத்தில் மீண்டும் வெளியேற்றப்பட்டு, 6-வது இடத்தைப் பெற்றார் வின்னி.
போட்டியில் வெற்றி வாகை சூடாவிட்டாலும் அந்த நிகழ்ச்சி வின்னிக்குப் பல வாய்ப்புகளைத் திறந்துவிட்டது. ஸ்பெயினின் சர்வதேச ஆடை நிறுவனத்துக்கு மாடலாகும் வாய்ப்பு கிடைத்தது. பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற ஃபேஷன் ஒளிப்படக்காரர் நிக் நைட், வின்னியை வைத்துப் படங்கள் எடுத்தார். அடுத்தடுத்து மாடலிங் வாய்ப்புகள் வந்தன. லண்டன் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஃபேஷன் உலகின் கவனம் பெற்ற மாடலாக மாறினார் வின்னி.
அல்ட்ரா வயலட் லைட் தெரபி, சரும டை, மேக் அப், பாரம்பரிய மருந்துகள், அறுவைசிகிச்சைகள் என்று வின்னியின் குறைபாட்டைச் சரிசெய்வதாகப் பல்வேறு நிறுவனங்கள் படையெடுத்தன. அத்தனை அழைப்புகளையும் புறந்தள்ளினார் வின்னி. அந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வருத்தப்பட்டனர். வெண்புள்ளியைச் சரி செய்துகொண்டால், பாதிக்கப்பட்டவர்கள் வின்னியைப் பார்த்துப் பலனடையக் கூடும் என்றார்கள்.
“இது என் வாழ்க்கை. வெண்புள்ளிகளோடுதான் உலகம் திரும்பிப் பார்க்கும் மாடலாக மாறியிருக்கிறேன். என் தோல் குறித்து எனக்கு எந்த விதமான வருத்தமோ, தாழ்வு மனப்பான்மையோ இப்போது இல்லை. அதனால் ஒப்பனை செய்து அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் மிக மகிழ்ச்சியாகவே வாழ்ந்துவருகிறேன். அதே நேரத்தில் மருத்துவம் மூலம் வெண்புள்ளிகளைச் சரிசெய்துகொள்பவர்களுக்கு நான் எதிரானவள் அல்ல” என்றார் வின்னி ஹார்லோ.
உலகின் முன்னணி ஃபேஷன் இதழ்களின் அட்டைகளில் இடம் பிடித்தார் வின்னி. ‘வெண்புள்ளியால் வாழ்க்கை பாதிக்காது’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். வெண்புள்ளிகள் குறித்த கருத்தரங்குகள், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். தன்னம்பிக்கையளிக்கும் பேச்சாளராகவும் சிறப்பான பங்களிப்பைச் செய்துவருகிறார். இசை ஆல்பங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். பல்வேறு சர்வதேச விருதுகள் இவரைத் தேடி வருகின்றன. கடந்த ஆண்டு பிபிசியின் 100 பெண்கள் பட்டியலில் ஒருவராக இடம்பிடித்திருக்கிறார் வின்னி!
இத்தனை வெற்றிகளுக்குப் பிறகும் வின்னியைப் பற்றிய வெறுப்புக் கருத்துகள் குறைந்தபாடில்லை. தோல் நிறத்தை வேண்டுமென்றே வெண்மையாக்கியிருக்கிறார், தீயால் தோலைப் பொசுக்கியிருக்கிறார் என்று சொல்வதையெல்லாம் அழகான தன் புன்னகையால் கடந்து செல்கிறார் வின்னி.
“என்னை ரோல் மாடல் என்று சொல்லும் அளவுக்கு நான் எதையும் சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. துயருற்ற மனங்களுக்கு என் வாழ்க்கை நம்பிக்கையளிப்பதாகவும் உத்வேகமூட்டுவதாகவும் இருந்தால் அதுவே போதும். வெண்புள்ளியால்தான் தனித்துவமாகத் திகழ்கிறேன் என்றாலும், அது மட்டுமே எனக்கு மாடலிங் வாய்ப்பை வழங்கவில்லை. வின்னி என்ற பெண்ணுக்குத்தான் மாடலிங் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் என்பது என் சருமம் அல்ல. அதனால் வெண்புள்ளி மாடல் என்று அழைக்காமல், மாடலுக்கு வெண்புள்ளி இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளுங்கள்” என்கிறார் வின்னி ஹார்லோ.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago