இன்று பாடத்திட்டங்களில் பெரும் மாற்றமிருக்கிறது. ஆனாலும் அந்த மாற்றங்கள் அதற்குரிய சாதகமான விளைவுகளைப் போதுமான அளவில் தரவில்லையே ஏன்?
ஏனெனில் சொல்ல வேண்டிய பல உண்மைகளை இந்தப் பாடத் திட்டம் இன்னும் பேசத் தொடங்கவில்லை. பாலினச் சமத்துவமின்மை இருக்கிறது என்பதும் அது களையப்பட வேண்டியது என்ற உண்மையும் இங்கு எடுத்துரைக்கப்படவில்லை. பெண்கள் எப்படித் தங்கள் உரிமைகளைப் பெற்றுவருகிறார்கள் என்பதை அவர்களுக்குச் சித்தரிக்க வேண்டும். உதாரணமாக நாம் கடந்து வந்திருக்கும் கடந்த காலக் கொடுமைகள் வரலாறாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
சதி கொடுமை, குழந்தைத் திருமண ஒழிப்பு, விதவை நிலைக் கொடுமைகள், தேவதாசி முறை ஒழிப்பு போன்றவை பற்றி ஏன் பாடத் திட்டங்கள் பேசுவதில்லை? பெண்களுக்குச் சொல்லப்படுகிற இந்த விஷயங்கள் சாதியப் பிரச்சினைகளுக்கும் பொருந்தும். வரலாறு உணர்த்த வேண்டியதை வரலாறு மட்டும்தான் உணர்த்த முடியும். நீதி போதனைகள் மூலம் அதைச் சாதித்துவிட முடியாது.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்குக் குடும்பம் என்ற அலகும் அதன் கட்டமைப்பும் பதிவாகிற அளவுக்குச் சமுதாயம் பற்றித் சொல்லித் தரப்படுவதில்லை. பள்ளி செல்லத் தொடங்கிய பின் குழந்தைகள் மேலும் மேலும் தங்கள் குடும்பத்தை அதுவும் அம்மா, அப்பா, தான் என்ற அளவில் மட்டும் மையம் கொண்டு சிந்திக்க வைக்கப்படுகிறார்கள்.
கல்விக்கூடங்களில் பாலின பேதம்
மேலும் பாடத்திட்டத்தில் மாற்றம் ஏற்பட்ட அளவுக்கு ஆசிரியர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? பள்ளி நிர்வாகங்களின் மனநிலை என்னவாக இருக்கிறது? பல இடங்களில் ஏமாற்றமும் வேதனையுமே மிஞ்சுகின்றன. பெரும்பாலான இடங்களில் ஆண், பெண் பற்றிய, அவர்களுக்கு இடையிலான நட்பு பற்றிய சிந்தனை ஆசிரியர்கள் மத்தியிலேயே மிகத் தவறாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இருபாலரும் படிக்கும் பல கல்வி நிலையங்களில் பெண்கள் அதிகமான அடக்குமுறைக்கு ஆளாகின்றனர்.
சில கல்லுரிகளில் தனி வாசல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தனித்தனி உணவகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இருபாலரும் ஒரே வளாகத்தில் இருந்தால்கூட அவர்கள் நட்போடு பழகிவிடாமல் பார்த்துக்கொள்வதுதான் தங்கள் கடமை என்று பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட நிர்வாகமும் ஆசிரியர்களுமே சிறந்தவர்கள் என்று பெற்றோர் முடிவுசெய்து தேர்ந்தெடுக்கிறார்கள். இருபாலர் பயிலும் இடங்களில் அவர்கள் நல்ல மாணவர்களுக்குக் கொடுக்கும் முதல் சான்றிதழே அவர்கள் பெண்களிடம் அதாவது சக மாணவியரிடம் பேச மாட்டார்கள் என்பதாகவே இருக்கிறது.
மேலும் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் சார்ந்தும் அவர்களின் திறன் குறித்தும் ஆசிரியர்கள் பலரும் முன்முடிவுகளோடு இருக்கிறார்கள். அதற்கேற்பப் பள்ளியில் அவர்களுக்கு வேறுபட்ட பணிகள் தரப்படுகின்றன. வகுப்பறையைப் பெருக்குதல், விழாவுக்கு அலங்கார ஏற்பாடுகளைக் கவனித்தல் போன்றவை பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கே தரப்படுகின்றன. இந்த மனநிலையின் சாதிய வடிவம்தான் கழிப்பறையைச் சுத்தம் செய்ய ஒரு குறிப்பிட்ட சமுதாய மாணவர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பது. ஆசிரியர்களின் சிந்தனையில் இந்த அவலத்தை மாற்றாமல் பாடத்திட்டங்களை மாற்றி என்ன சாதித்துவிட முடியும்?
ஆண்டு விழாக்களின் அவலம்
பாடத்திட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அரசின் கொள்கை முடிவு வழியாகச் செலுத்தப்பட்டிருக்கிறதே தவிரப் பள்ளிச் சூழலில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியாக அது இன்னும் மலரவில்லை. பள்ளிகள் நடத்துகிற ஆண்டு விழாக்களைப் பார்த்தாலே இதை நாம் உணர முடியும். அதிலும் சில சிறு பள்ளிகள் மிகவும் மோசம். கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் இவர்கள் அரங்கேற்றுவது அவ்வப்போது வெற்றிகரமாக உலாவரும் திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள்தான். சாதாரணமாக ஒரு சிறுவனும் சிறுமியும் பேசிக்கொள்வதைத் தவறாக நினைக்கும், அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் இந்த ஆசிரியர்களும் பெற்றோரும்தான் தங்கள் பிள்ளைகளை, மாணவர்களை இருபொருள்படும்படியான ஆபாசமான திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடவைத்து (அதாவது சிறப்புப் பயிற்சியளித்து) கைதட்டி ஆராவாரம் செய்து மகிழ்கிறார்கள். இந்த விநோத மனிதர்களை என்னவென்று புரிந்துகொள்வது?
குழந்தைகளைச் சீரழித்தல் தகுமா?
இதனுடைய நீட்சிதான் குழந்தைகள் பங்குபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். “அப்பா அம்மாவுக்கு முத்தம் கொடுத்தார்”, “அப்பா பக்கத்து வீட்டு ஆன்ட்டிகூட பேசினார்”, “எங்கம்மா அப்பாவை அடிப்பாங்க” என்று குழந்தைகளைப் பேசவைத்துக் கொண்டாடிக் களித்துக்கொண்டிருக்கும் தமிழ்ச் சமுதாய பெருங்குடி மக்கள், சமுதாயத்தில் பெண்கள் மீதான வன்முறை என்று வரும்போது மட்டும் கலாச்சாரக் காவலர்களாக மாறும் விந்தையை என்னவென்று வர்ணிப்பது?
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பல நல்ல செயல்பாடுகள் அண்மைக் காலத்தில் நடைபெற்றுவருகின்றன. பெண் குழந்தைக் கல்வி, மனித உரிமைக் கல்வி, குழந்தைநேயக் கல்வி என்று பல பயிற்சி அரங்குகளைத் தமிழக அரசின் கல்வித் துறையே ஆதரித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியை நடத்திவருகிறது. ஆனால் தனியார் துறையில் இதைப் போன்ற சமுதாய நோக்கிலான பயிற்சிகள் ஆசிரியர்களுக்குத் தரப்படுவதில்லை. லட்சிய நோக்கோடு கல்வி நிலையங்கள் நடத்தும் ஒரு சிலரைத் தவிர ஆண்டு விழாக்களில்கூடச் சாதி ஒழிய வேண்டும், பெண்ணடிமை ஒழிய வேண்டும் என்ற குரல் ஒலிப்பதில்லை. கல்வி தனியார்மயமாவதில் வேறெந்த இழப்பையும்விட இது போன்ற சமூக நீதிக் குரல்களின் இழப்பு மிகப் பெரிது.
(இன்னும் தெறிவோம்)
கட்டுரையாளர்: பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago