விவாதக் களம்: அடக்கவும் வேண்டாம் எதிர்க்கவும் வேண்டாம்

By செய்திப்பிரிவு

முத்தப் போராட்டம் குறித்து நவம்பர் 23-ம் தேதியிட்ட ‘பெண் இன்று’ இணைப்பில் வெளியிட்டிருந்தோம். முத்தப் போராட்டம் பற்றிய தங்கள் கருத்துகளை சமூகம், கலாச்சாரம், அரசியல் எனப் பல்வேறு கோணங்களில் இருந்தும் வாசகர்கள் பகிர்ந்துகொண்டனர். அவற்றில் இருந்து சில உங்கள் பார்வைக்கு...

ஸ் பக்கெட், ரைஸ் பக்கெட் சவால்களைத் தொடர்ந்து இப்போது முத்தப் போராட்டம். பரபரப்பை ஏற்படுத்த இப்படி ஏதாவது ஒன்றைச் செய்கிறார்கள். ஊடகங்களும் அதை ஊதிப் பெரிதாக்குகின்றன. ‘கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி’ என்று பாரதியார் பாடியதில் எத்தனை பண்பும் சுகமும் வெளிப்படுகிறது? அப்படியொரு அனுபவத்தைக் கேள்விக்குறியாக்கலாமா? முத்தம் தருவதும் தராமல் இருப்பதும் அவரவர் உரிமை. ஆனால் அதைப் பொது இடத்தில் பரிமாறிக்கொள்வது சற்று இடறலாகத்தான் உள்ளது.

- ஜானகி ரங்கநாதன், சென்னை.

தினமும் செய்தித்தாள்களில் எத்தனை அவலங்களைப் பார்க்கிறோம். அதற்கெல்லாம் வராத கோபம் முத்தப் போராட்டத்துக்கு மட்டும் வருகிறதே ஏன்? உங்கள் அன்புக்கு உரியவர்களோடு மதுவை ஒழிக்கச் சொல்லிப் போராடலாம். வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணியச் சொல்லி போராடலாம். பொது இடங்களில் குப்பை போடுவது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றுக்கு எதிராகவும் போராடலாம்.

- ப. தனபால், கோயம்புத்தூர்.

வரவர் அவரவர் மத நெறிகளின்படி வாழ்வதற்கான வழிகளுக்காகப் போராடலாம். அதை விட்டுவிட்டு மதத்தின் பெயரால் பிறரின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது. ஒரு கிராமத்துக்கு ஒரு நூலகம் இல்லாத, தெருவுக்கு நான்கு மதுபானக் கடைகள் இருக்கிற அவலம் நிலவுகிற நம் நாட்டில்தான் முத்தப் போராட்டமும் நடக்கிறது.

- வே. த. யோகநாதன், திருச்சி.

பொதுவெளியில் முத்தம் கொடுப்பதற்கான உரிமை கோரும் போராட்டம் அல்ல இது. முத்தமிடுபவர்களை மிரட்டுகிறவர்களுக்கு எதிரானதுதான். அதைப் புரிந்துகொள்ளாமல் பொது இடங்களில் முத்தமிடுவோம் என்று போர்க்கொடி தூக்குவது, அதுவும் படிக்கும் வளாகத்துக்குள்ளேயே அதை அரங்கேற்றுவது நியாயமா?

- சுசீலா ராமமூர்த்தி.

ரிமை என்ற பெயரில் நடக்கும் இதுபோன்ற அத்துமீறல்களைப் போராட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் அரங்கேற்றுவதை அனுமதிக்கக் கூடாது. முத்தம் மூலம்தான் அன்பைப் பரிமாற வேண்டுமென்றால் முச்சந்திக்கு ஏன் வருகிறார்கள்? இளந்தலைமுறை சினிமா, மது போன்றவற்றால் சீரழிவதைத் தடுக்க முடியவில்லை. அன்பின் வெளிப்பாடு முத்தம் என்பதை மறுக்கவில்லை. அதை ஏன் கொச்சைப்படுத்துகிறார்கள்?

- மு.க. இப்ராஹிம், வேம்பார்.

முத்தப் போராட்டம் என்பதை ஒரு போராட்ட வடிவமாகவே நாம் கருதக் கூடாது. அப்படிக் கருதுவது போராட்ட மனநிலையையே கொச்சைப்படுத்துவது. ‘பண்பாட்டுக் காவலர்களுக்கு’ எதிர்வினையாக அன்பின் முத்தம் எனச் சொல்லும் போராட்டக்காரர்கள் யார் எனப் பார்த்தாலே அப்போராட்டத்தின் பலவீனம் புரிந்துவிடும். டேட்டிங், பப் உள்ளிட்ட ‘பண்பாட்டு’ வளர்ச்சிக்குத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் நவீனச் சமூகத்தின் பிரதிநிதிகள் அவர்கள். மத அடிப்படைவாதிகள் முன்வைக்கும் பண்பாட்டுக் கருத்துகளை யாரும் அப்படியே ஒப்புக்கொள்ளப் போவதில்லை. அதற்காக முத்தப் போராட்டங்களின் வழி அதை அவர்களுக்குப் புரிய வைத்துவிடவும் முடியாது.

பொது இடத்தில் கும்பல் கும்பலாக முத்தம் கொடுத்துக் கொள்வதன் மூலமாக ஒரு தீர்வை அடைந்துவிட முடியும் எனும் பத்தாம்பசலித்தனமான போராட்ட வடிவம் அவர்களின் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.

- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.

காமம், காதல் இரண்டும் ஆணிடமும் பெண்ணிடமும் இலை மறை காய் மறையாக இருக்க வேண்டும். அப்போதுதான் ருசிகரமான வாழ்க்கை அமையும். அறைக்குள் நடக்கும் அந்தரங்கங்களைப் பொது இடங்களில் நடத்தித்தான் தீருவேன் என்று போராடுவது தவறு. வெளிநாடு போல் இங்கும் பொது இடங்களில் முத்தம் கொடுப்பேன் என்று போராடுவது நம் இந்தியப் பண்பாடு, கலாச்சாரத்துக்கு ஏற்புடையது அல்ல. வளரும் அனைத்து இந்தியக் குழந்தைகளும் ஒரு பண்பான இந்திய குடிமகனாக, மகளாக வளர வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் இது போன்று போராடவும் மாட்டார்கள். அதில் கலந்து கொள்ளவும் மாட்டார்கள்.

- உஷாமுத்துராமன், திருநகர்.

ம் நாட்டு இளைஞர்கள் வாழ்வில் சாதிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்க, இந்தப் போராட்டம் தேவையில்லாதது. தொலைக்காட்சிகளில் வரும் வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொள்ளுவதைப் பார்க்கவே சகிக்கவில்லை. இதில் தெருத் தெருவாக முத்தமா? முத்தம் என்பதற்கான சிறப்புத் தன்மையே காணாமல் போய்விடும்.

- ராதா பாலு.

பொது இடங்களில் முத்தப் பரிமாற்றம் நடந்தால் அடுத்தவர்கள் பார்க்கும்போது அவர்கள் மனதில் வீணான மனக்கிளர்ச்சி உண்டாகும். இதைப் பார்த்து இரண்டும்கெட்டான் பருவத்தில் இருக்கும் பெண்கள், பிள்ளைகள் மனம் தடுமாற வாய்ப்புகள் உண்டு. எங்கள் உரிமையில் தலையிட அடுத்தவர்களுக்கு உரிமையில்லை என்று அவர்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால் நமக்கென்று ஒரு பண்பாடு, கலாச்சாரம் இருக்கிறதுதானே? அதை விட்டுக் கொடுக்கலாமா? அதைக் கடைப்பிடிக்காவிட்டால் நாம் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

- பிருந்தா ரமணி, மதுரை.

ரு குழந்தைக்கு முத்தம் கொடுப்பதற்கும், பருவ வயதினர் முத்தம் கொடுத்துக் கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பருவ வயதில் உடலில் சுரக்கும் ஹார்மோன் எதிர் பாலினரைப் பார்த்தாலே பாலியல் உணர்வைத் தூண்டும் என்கிறது மருத்துவ உலகம். தொட்டு அணைத்து முத்தமிடும்போது வேறு வினையே வேண்டாம். ‘முத்தப் போராட்டத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு பெண்களிடம் அத்துமீறும் முயற்சியில் சில ஆண்கள் ஈடுபட்டனர்’ என்ற செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எப்படிப் பார்த்தாலும் முத்தம் அந்தரங்கமானது. அது வெளியரங்கமாகும் போது நமது கலாச்சாரத்தைக் காற்றில் பறக்க விடுகிறோம் என்பதே உண்மை.

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

ம் அன்பை வெளிப்படுத்தும்போதுகூட நளினமாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். காட்சிப் பொருளாகப் பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்தும் விதமாகச் சிலர் நடந்து கொள்ளும் விதம் அர்த்த மற்றது. இன்றைய சூழ்நிலையில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு நாமே தீனி போடுவதாக இருக்கக் கூடாது.

- பானு பெரியதம்பி, சேலம்.

முத்தத்துக்காக இயக்கம் ஆரம்பித்து, போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்தால் நமது நாட்டில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஏராளமாக இருப்பது புரியும். மனிதனின் கழிவுகளை மனிதனே சுத்தம் செய்யும் அவலம் இந்த மண்ணில்தான் நடக்கிறது. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் கொடுமைகள் போன்றவையும் இந்தப் புண்ணிய பூமியில்தான் நிகழ்கின்றன. அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தினால் நாமும் ஆதரிக்கலாம்.

நாகரிகம் என்பதுதான் நமக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு. தனிமனித உரிமை என்ற பெயரில் எல்லை மீறி நடக்கக் கூடாது. எல்லா விஷயங்களிலும் சமூகம் மூக்கை நுழைக்கக் கூடாது. அதேபோல் எல்லா விஷயங்களையும் நாம் பொதுவெளியில் அரங்கேற்றக் கூடாது.

- தேஜஸ், காளப்பட்டி.

லகக் கவிஞன் ஷெல்லி, ‘காதலர்கள் அதரங்களில் இரு ஆன்மாக்கள் சந்திக்கின்றன’ என்று சொல்லியிருக்கிறார். அதிலிருந்தே புரிந்து கொள்ளலாம், உதடு களால் ஸ்பரிசித்தல் என்பது எவ்வளவு தூய்மையானது, அந்தரங்கமானது என்பதை. பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்திக் கொள்ள முத்தம் ஒரு பாலமாகச் செயல்படுகிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதில் மூன்றாம் நபர் மூக்கை நுழைப்பதற்கு அனுமதியில்லை என்பதை ‘அன்பின் முத்தம்’ இயக்கத்தினரே ஒப்புக்கொள்ளும் போது பண்பாடு, கலாச்சார மீறல்கள் தேவையில்லையே.

- சந்திரா மனோகரன், ஈரோடு.

லாச்சாரக் காவலர்கள் உண்மையிலேயே கலாச்சாரத்தைப் பாதுகாப்பவர்கள் என்றால் ஆபாசமான திரைப்படங்களையும் கலாச்சாரத்தை மீறிய கதையம்சங்களைக் கொண்ட தொலைக்காட்சித் தொடர்களையும் எல்லை மீறிய ஆபாசத்தை தன்னகத்தே கொண்டுள்ள இணையதளங்களையும் எதிர்த்துப் போராட வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டுக் காதலர்களை மட்டும் குறி வைப்பது தங்களை மட்டும் மீடியா வெளிச்சத்தில் வெளிப்படுத்தி அரசியல் லாபம் அடையத்தான். மறுபக்கம் பார்த்தால் அன்பின் முத்தம் என்பவர்களின் போராட்டமும் தேவையற்றது மட்டுமல்ல இதையும் ஒருவகையில் வன்முறையாகத்தான் கருத வேண்டியுள்ளது. தங்களது எதிர்ப்பைக் காண்பிக்க எத்தனையோ வழிகள் இருக்கும்போது குறிப்பிட்டவர்களை நோகடிக்கிறோம் என்ற பெயரில் மற்ற அனைவரையும் நோகடிப்பதை எந்தக் காரணம் சொல்லியும் சமாதானப்படுத்த முடியாது. காதலை எதிர்ப்பது கண்மூடித்தனமானது, அதே வேளையில் அன்பின் முத்தம் என்பதும் கண்டிக்கத்தக்கது.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

மிழர்கள் வாழ்க்கையை இரண்டாகப் பிரித்தார்கள். ஒன்று அகவாழ்க்கை, மற்றொன்று புற வாழ்க்கை. இரண்டையும் பிரித்தறியா மேலை நாகரிகம் வேண்டாமே!

- அஜய், இணையதளம் வழியாக.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த தாவணிப் பெண்கள் தற்போது சுடிதார், ஜீன்ஸ், டி-ஷர்ட் என மாறிவிட்டனர். ஆண்கள் வேட்டியிலிருந்து ஜீன்ஸுக்கும் லுங்கியிலிருந்து ஷார்ட்ஸுக்கும் மாறிவிட்டனர். உற்றார் உறவினர்களைத் தவிர, யாரும் யாரையும் கட்டுப்படுத்தவோ அடக்கி ஆளவோ முடியாது.

- வில்லவர், இணையதளம் வழியாக.

மது நாட்டில் அன்பை வெளிப்படுத்தக் கட்டிப் பிடித்தல், முத்தம் கொடுத்தல், கை குலுக்குதல் போன்ற கலாச்சாரம் இல்லாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் நமது நாட்டில் இருக்கின்ற சாதி சமுதாய அமைப்புதான். இப்போதைய சூழலில் ஓரளவு மாற்றம் இருந்தாலும் ஒதுக்கப்பட்ட மக்கள் இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, இடுப்பை வளைத்து, கைகூப்பிக் கும்பிடும் கலாச்சாரத்தைதானே கடைப்பிடித்து வருகிறோம்? வயதில் எத்தனை முதியவராக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்கும்பட்சத்தில், உயர்சாதியைச் சேர்ந்த சிறுவர்கள்கூட பெயர் சொல்லி அழைக்கும் பழக்கத்தைப் பெற்று இருந்த நாம், இன்னும்கூட முழுமையாக அதிலிருந்து விடுபடவில்லை. சாதி இல்லாத சமுதாய மாற்றங்கள் ஏற்பட இதுபோன்ற கலாச்சார மாற்றங்களும் தேவையானது என்றுகூடச் சொல்லலாம். சாமியார்கள் என்ற போர்வையில் மறைமுகமாக நடத்துகின்ற அக்கிரமங்களைவிட இது மோசமானது அல்ல.

- ராமராசு, இணையதளம் வழியாக.

தையுமே கொச்சையாகவே புரிந்துகொண்டு செயல்படும் நம் ஊரில் வேலையில்லாதவர்கள் எல்லோரும் இனி முத்தம் அன்பின் வெளிப்பாடு என்னும் வக்கிரமான புரிதலின் பேரில் தெருவில் செல்லும் எந்தப் பெண்ணையும் முத்தம் கொடுக்கும் உரிமையாக இதைப் பயன்படுத்திக்கொள்வார்கள். இது தேவையா ?

- ராஜ். என், இணையதளம் வழியாக.

தெருவில் அலையும் பிச்சைக்காரர்கள் மேல் அன்பு இல்லையா?அவர்களுக்கு முத்தம் கொடுக்கும் துணிச்சல் உண்டா? அழகாக இருக்கும் ஆண், பெண்களிடம் மட்டுமே அன்பு வரும் இவர்களுக்கு. ஒருவருக்கு உதவி செய்வதுதான் அன்பின் வெளிப்பாடு.

- ஸ்ரீநிவாசகன், இணையதளம் வழியாக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்