குடியரசு தின அணிவகுப்பை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தனர் கமலா பாட்டி, கல்பனா ஆன்ட்டி, கனிஷ்கா மூவரும்.
“சுக்ரி பொம்மகவுடா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹல்லக்கி ஒக்கலிகா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 78 வயசானாலும் அவரது இனிமையான குரல் எல்லோரையும் கட்டிப் போட்டுரும். பழங்குடியினத்தின் பாரம்பரியப் பாடல்கள் அழியாமல் இருக்கணும்னு அவற்றை இளந்தலைமுறைக்குச் சொல்லித் தர்றாங்க. இவங்களுக்குப் பத்மஸ்ரீ விருது அறிவிச்சிருக்காங்க. பாட்டிக்கு ஆயிரம் பாடல்கள் தெரியும். திருமணம், பிறப்பு, திருவிழான்னு எல்லா நிகழ்வுக்கும் பாட்டு இருக்கு. சில பாடல்களை அவங்களே எழுதியிருக்காங்க. 14 வயசுல கல்யாணமாகி, கணவனையும் குழந்தைகளையும் இழந்த பாட்டிக்குப் பாடல்கள்தான் துணை” என்று சுக்ரி பாட்டியின் புகழ்பாடினார் கமலா பாட்டி.
“சரியான நபருக்குத்தான் விருது கிடைச்சிருக்கு! எய்ட்ஸ் நோயாளிக்கு மருத்துவம் பார்த்த முதல் மருத்துவரான மறைந்த சுனிதி சாலமனுக்கும் பாலியல் தொழிலிலிருந்து பெண்களை மீட்டெடுத்துவரும் அனுராதா கொய்ராலாவுக்கும் பத்மஸ்ரீ விருது கிடைச்சிருக்கு. மூணு பேருக்கும் நம் பாராட்டுகள்” என்றார் கல்பனா ஆன்ட்டி.
“உத்தரப் பிரதேச தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியலில் பிரியங்கா இருக்காங்க. அதுக்கு பாஜகவின் வினய் கட்டியார், ‘பிரியங்காவைவிட அழகான பிரச்சாரகர்கள் பாஜகவிலும் இருக்காங்க’ன்னு சொல்லியிருக்கார். அதுக்கு பிரியங்கா, ‘அரசியலில் ஈடுபட்டுள்ள என்னைப் போன்ற பெண்கள் துணிச்சலாக, மனஉறுதியுடன் பல்வேறு போராட்டங்களைக் கடந்து இந்த இடத்துக்கு உயர்ந்துள்ளோம். ஆனால், வினய் கட்டியார் பெண்களைப் பற்றி இப்படிச் சொல்வது, பாஜகவின் மனநிலையைக் காட்டுது’ன்னு சாட்டையடி கொடுத்திருக்காங்க” என்ற கனிஷ்கா, பாட்டி கொடுத்த ஆரஞ்சு ஜுஸை ருசித்தாள்.
“மெரினா போராட்டம் ஆட்சியாளர்களை அசைச்சுப் பார்த்துருச்சே! வலுவான கொள்கைகளும் தலைமையும் இல்லாத போராட்டம்னு பலர் கருத்து சொன்னாலும் இந்தப் போராட்டம் முக்கியமானதுதான். கட்டுக்கோப்பாக, நாகரிகமாக, பாலின பேதமின்றி நடந்த போராட்டம். கடந்த ஐம்பது ஆண்டுகளில் முதன்முறையா போராட்டத்தைப் பார்க்க குடும்பத்தோடு படையெடுத்து, திருவிழா போல கொண்டாடிட்டாங்க மக்கள்” என்று சிலாகித்துக்கொண்டிருந்த கனிஷ்காவை இடைமறித்தார் கல்பனா ஆன்ட்டி.
“மாணவர் போராட்டம் வெற்றிதான். இதில் அரசாங்கமும் காவல்துறையும் நடந்துகொண்ட முறைதான் சகிக்கலை. இன்னொரு முறை போராட்டம்கிற நினைப்பே வரக் கூடாதுனுதான் இத்தனை வன்முறையை நிகழ்த்தி இருக்காங்க. இந்த வலியும் போராட்டமும் போராட்டக் காரர்களை வலுவிழக்கச் செய்யாது. போராட்டக் குணத்தை வலிமையாக்கவே செய்யும்.”
“ஆமாம், அதிலும் எளிய மக்கள்தான் கஷ்டம்னா ஓடி வர்றாங்க, அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்படறாங்க. மும்பையில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பு, பல கேள்விகளை எழுப்பியிருக்கு. மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டுனதா போடப்பட்ட வழக்கு அது. மனைவிக்குச் சமைக்கத் தெரியல, ஆங்கிலத்துல பேசத் தெரியலன்னு ரொம்ப இழிவா பேசியிருக்கார் கணவர். மனமுடைந்த பெண் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம், ‘திருமண பந்தத்தில் இதுபோன்ற இழிவான பேச்சுகள் சகஜமானவை. இது இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 498- ஏ பிரிவின் கீழ் வராது’ன்னு சொல்லி, கணவருக்கு ஜாமீன் வழங்கியிருக்கு” என்று கொந்தளித்தார் கமலா பாட்டி.
“மனைவியை மட்டம்தட்டிப் பேசுவது பெரும்பாலான ஆண்களின் இயல்பு. இழிவான வார்த்தைகளும் வன்முறைதான் என்பதைப் புரிஞ்சுக்கணும். அரியலூர் மாவட்டத்துல 16 வயது நந்தினி என்கிற தலித் சிறுமியை ஆதிக்க சாதியைச் சேர்ந்த மணிகண்டன் காதலிப்பதாகச் சொல்லி, ஏமாற்றி கர்ப்பமாக்கியிருக்கார். தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி நந்தினி கேட்க, அவரைக் கொலை செய்து கிணத்துல வீசியிருக்கார். அவருக்கு ஆள் பலம், பண பலம், அரசியல் பலம் எல்லாம் இருக்கு. மெரினா போராட்டச் சத்தத்தில நந்தினிக்கு இழைக்கப்பட்ட அநீதி, பெரிய அளவுல கவனம் பெறலை. இதுபோன்ற கொடுஞ்செயல்கள் எதிர்காலத்துல நிகழாமல் சட்டம் கடுமையாகணும். பெண்களும் இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வோட இருக்கணும்” என்றார் கல்பனா ஆன்ட்டி.
“நம்ம நாட்டுல மிசோரம் மாநிலத்தில் பெண்களைப் பத்தின புரிதல் கொஞ்சம் அதிகமா இருக்கு. புவான் என்ற வேட்டி போன்ற பாரம்பரிய உடையை ஒரு பெண், நடு ரோட்டுல சரிசெய்தார். அவருக்கு அருகில் இருக்கும் ஆண்கள் அதை ஒரு விஷயமாவே பார்க்கலை. அந்தப் பெண்ணும் யாரும் பார்ப்பாங்களோன்னு பயமோ, வெட்கமோ இல்லாமல் இயல்பா சரிசெய்தார். இதை நீங்க எப்படிப் பார்க்கறீங்க?” என்று கேட்டாள் கனிஷ்கா.
“நம்ம ஊரில் ஆண்கள் வேட்டியையும் லுங்கியையும் பொது இடத்தில் அவிழ்த்துக் கட்டுவாங்க. ஆனால், ஒரு பெண் இப்படிச் செய்ய முடியாது. அப்படிச் செய்தாலும் ஆண்கள் தவறான கண்ணோட்டத்தோடுதான் பார்ப்பாங்க. மிசோரம் ஆண்கள், பெண்களைப் பால் பேதமில்லாமல், இயல்பா பார்க்கிறாங்க. அவங்களை நினைச்சு ரொம்பப் பெருமையா இருக்கு” என்று நெகிழ்ந்தார் கல்பனா ஆன்ட்டி.
“ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜோரா (Zohra) மகளிர் இசைக்குழு பிரமாதப்படுத்துது. பெண் கல்வி மறுக்கப்படும் ஒரு நாட்டுல பல்வேறு மிரட்டல்களுக்கு இடையே இந்தப் பெண்கள் இசைக் கல்லூரியில் படிக்கிறாங்க. ஸ்விட்சர்லாந்து சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் இவர்களின் கச்சேரி நடந்திருக்கு. ‘தடை அதை உடை’ன்னு பாடினதை எல்லோரும் ரொம்ப ரசிச்சிருக்காங்க” என்று சொல்லிக்கொண்டே கிளம்பிய கனிஷ்காவுக்கும் கல்பனா ஆன்ட்டிக்கும் விடைகொடுத்தார் கமலா பாட்டி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago