சுதா ராமலிங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பியூசிஎல்) உறுப்பினர், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டுள்ளார். தமிழகத்தின் நடந்த மனித உரிமை மீறலுக்கு எதிராகக் கள ஆய்வுகள் மேற்கொண்டு தீர்வுகள் தேடிந்துள்ள இவர் முன்னணி வழக்கறிஞர். மனோன்மணி என்னும் பெயரில் அறக்கட்டளையை நிறுவியுள்ள இவர், அன்பகம் என்னும் ஆதரவற்றோருக்கான இல்லத்தையும் நடத்திவருகிறார்.
சட்டம் படிக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருந்ததா?
கல்லூரியில் படிக்கும் காலத்தில் பிரச்சினைகள், போராட்டம் என்றாலும் நான் தான் முன்னாடி நிற்பேன். கல்லூரியில் படிக்கும்போது பேராசிரியர்களுக்கு எதிராகவும் போராடியுள்ளேன். எந்தக் கருத்தையும் விவாதத்துடன்தான் எதிர்கொள்வேன். நண்பர்கள் எல்லோரும், “நீ வக்கீலுக்குப் படிக்கலாம்” எனக் கிண்டலடிப்பார்கள். ஆனால் சமூகப் போராட்டங்களில் ஈடுபடுவதற்குச் சட்டம் படிப்பது உதவியாக இருக்கும் என நினைத்தேன்.
அந்தக் காலகட்டத்தில் சட்டம் படிக்க வீட்டில் சம்மதம் இருந்ததா?
இல்லை. அப்பா, நான் டாக்டராக வேண்டும் என்றே விரும்பினார். இல்லையென்றால், “காலேஜ் ப்ரபசர் ஆகு” என்றார். அந்தக் காலத்தில் இவை இரண்டும்தான் பெண்களுக்கான வேலையாகப் பார்க்கப்பட்டது. வீட்டுக்குத் தெரியாமல்தான் சென்னை சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன்.
சமூகப் போராட்டங்களில் ஈடுபடும் இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?
என் அம்மாவைத்தான் காரணமாகச் சொல்லத் தோன்றுகிறது. அவர் , சமூக அநீதிகள் குறித்து எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார். எனக்கு அது உள்ளுக்குள் பாதிப்பை உண்டுபண்ணியது. நெருக்கடி நிலை அறிமுகப்படுத்தப்பட்டபோது கல்லூரி மாணவியாக இருந்தேன். அது என்னை மிகவும் பாதித்தது.
அப்போது ஜெய்பிராகாஷ் நாராயணின் முழுப் புரட்சி (Total Revolution) நாடு முழுவதும் பெரிய அலையை ஏற்படுத்தி இருந்தது. அவர் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டேன். அவர் தொடங்கிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தில் (பியூசிஎல்) இணைந்தேன். இன்றுவரை ஜெய்பிராகாஷ் நாராயணும் கே.ஜி. கண்ணபிரானும் சமூகப் போராட்டங்களுக்கான ஆதாரமாக இருக்கின்றனர்.
நீங்கள் படித்த சட்டம், சமூகப் போராட்டங்களுக்கு எவ்வகையில் உதவியது?
பல உதாரணங்கள் இருக்கின்றன. அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் இருந்தபோது சட்ட ரீதியிலான பல்வேறு உதவிகளைச் செய்திருக்கிறோம். குறிப்பாகப் பிரேமானந்தா சாமியார் வழக்கில் புகார் மனுவையே நான்தான் எழுதினேன். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில்தான் அடைக்கலம் கொடுத்தோம். அந்த வழக்கில் பெற்ற வெற்றி முக்கியான ஒன்று.
ஏனெனில் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தவிடாமல் பல்வேறு விதமான நெருக்கடிகள் எழுந்தன. அரசியல் ரீதியாகவும் பிரேமானந்தாவிற்குச் செல்வாக்கு இருந்தது. மேலும் பிரேமானந்தாவுக்கு ஆதரவாக ராம்ஜெத்மலானி ஆஜரானார். எங்களுக்கு அரசு வழக்கறிஞர் மேல் நம்பிக்கை இல்லாதததால் அவரை எதிர்த்து நானும் என் தோழியும் ஆஜரானோம்.
சிறைச்சாலைகளில் பெண்கள் நிலையை நீங்கள் அம்பலப்படுத்தியுள்ளீர்கள்...
தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகளைச் சந்தித்து ஆய்வுசெய்யும் கமிஷனராக நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது சிறைச்சாலை அதிகாரிகள் இல்லாமால் சுதந்திரமாகச் சிறைச்சாலைகளின் எல்லா அறைகளையும் என்னால் பார்க்க முடிந்தது. அப்போதுதான் அங்கு உள்ள நிலை எனக்குத் தெரிய வந்தது.
அடிப்படை வசதிகள் பெரும்பாலான சிறைச்சாலைகளில் இல்லை. மாதவிடாய்க் காலத்திற்கான மாற்றுத் துணிகள்கூட வழங்கப்படவில்லை. அவர்கள் தங்கள் சீலை முந்தானையைக் கிழித்து ‘மாற்றுத் துணி’யாக உபயோகித்து வந்தனர். இவற்றை வெளிக்கொண்டுவந்த பிறகு மாற்றங்கள் வந்தன. ஆனால் முழுமையாக மாறிவிட்டன எனச் சொல்ல முடியாது.
இலங்கை அகதிகள் மத்தியில் நீங்கள் செயலாற்றியிருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்...
போராளி இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகப்படும் இலங்கை அகதிகள் வேலூர், மேலூர், செங்கல்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டனர். செங்கல்பட்டு முகாமில் இருந்த அகதிகள் மத்தியில்தான் செயலாற்றினோம். போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பெண்களையும் குழந்தைகளையும்கூட அந்த முகாமில் அடைத்து வைத்திருந்தனர்.
சிறப்பு முகாம் என்பது பெயர் மட்டும்தான். உண்மையில் அது சிறைச்சாலைகளைவிட மோசமானதாக இருந்தது. அரசு ரீதியிலான பேச்சு வார்த்தைகள் நடத்தி அங்கிருந்த பலரும் வெளிநாடுகளுக்குச் செல்ல உதவிசெய்தோம். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பலரும் எங்களுக்கு உதவினர். விமான டிக்கெட்டுகளையே உதவியாகப் பெற்று அவர்களை மேலை நாடுகளில் இருந்த அவர்கள் குடும்பத்துடன் சேர்த்துவைத்தோம்.
பெண்களுக்கான போதிய பாதுகாப்பைச் சட்டம் வழங்குகிறதா?
இப்போதைய சட்டங்களே போதுமானவை. புதிய சட்டங்கள் அவசியமல்ல. ஏற்கனவே நிர்பயா வழக்கின் மூலமும் சட்டப் பாதுகாப்பு மேலும் வலுவாகியுள்ளது. அதனால் இப்போது நமக்குத் தேவை சட்டத்தைப் பயன்படுத்திற்கொள்வதற்கான அறிவே.
கேரளாவில் சூர்யநெல்லி வழக்கை எடுத்துக்கொள்ளுங்கள். நாடாளுமன்றத் துணைச் சபாநாயகர் பி.ஜெ. குரியனும் ஒரு குற்றவாளி எனப் பாதிக்கப்பட்ட பெண் கூறியும் சட்டத்தால் அவரைக் கைதுசெய்ய முடியவில்லையே?
எல்லாவற்றையும் சட்டத்தால் வெல்ல முடியும் எனச் சொல்ல முடியாது. ஆனால் அதற்காகப் போராட்டத்தைக் கைவிட்டுவிடக் கூடாது. பிரேமானந்தா வழக்கு, வாச்சாத்தி வழக்கு இது போன்ற பல வழக்குகளில் நீதி கிடைத்திருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் பின்வாங்கியதாலும் வழக்குத் தோற்றுப்போய்விடும் சூழலும் உள்ளது.
சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பது என்பதே இங்கு பெரிய பணியாக இருக்கிறது. மேலும் இதுபோல ஒரு சம்பவம் நடந்த பிறகுதான் நடவடிக்கைகள் எடுக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு குறித்து கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். அது அந்தச் சமயத்தோடு சரி பிறகு கண்டுகொள்வதில்லை. உதாரணமாக சரிகா ஷா வழக்கு சமயத்தில் எல்லா இடங்களிலும் பெண்களுக்கான புகார்ப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவை இன்று எங்கே போய்விட்டன?
ஒரு பெண் தனக்கு ஆபத்து நேரும்போது எப்படி அதை எதிர்கொள்ள வேண்டும் என்கிறீர்கள்?
கத்த வேண்டும். அவ்வளவுதான். இங்கு பெரும்பாலான பெண்கள் பொது இடத்தில் வைத்துத் துன்புறுத்தலுக்கு உள்ளாகும்போகும் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். கத்தினால் நாம்தான் அவமானப்படுவோம் என நினைக்கிறார்கள். முதலில் ஆபத்து ஏற்படும்போது கத்துங்கள்
பாலியல் ரீதியிலான தொந்தரவு எப்போது ஓயும்?
அதற்கான அடிப்படை குழந்தைப் பருவத்திலிருந்தே போதிக்கப்பட வேண்டும். பாலினப் பாகுபாடுகளைக் களைய வேண்டும். ஆண் என்றால் வெளியில் போய் விளையாடலாம். பெண் வீட்டுக்குள் பல்லாங்குழி விளையாட வேண்டும் என்ற பழக்கத்தை மாற்ற வேண்டும். பெரியார் இதையெல்லாம் சொல்லியிருக்கிறார். அதைப் பின்பற்றினாலேயே போதுமானது. ஆனால் நாம் பெரியாரை மறந்துவிட்டோம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago