ஏப்ரல் 23: உலக புத்தக தின சிறப்புக் கட்டுரை
இயற்கையாக முகிழும் பூவின் செயலைப் போல இயல்பானதாக இல்லை பெண்கள் எழுதவந்தது. தடைகளை உடைத்துக் கொண்டும் விலங்குகளை முறித்துக்கொண்டும்தான் அவர்கள் முட்டிமோதி முன்னேற வேண்டியிருந்தது. பொங்கிப் பெருகும் புனல் போல பல பெண்கள் எழுத வந்தாலும் சிலரால் மட்டுமே நீடித்து நிற்க முடிந்தது. அதே போல பெண் ஆளுமைகளைப் பற்றிய பதிவுகளும் ஒப்பீட்டளவில் குறைவு. பெண் விடுதலைக்கான முக்கியமான வழிகளில் வாசிப்பும் ஒன்று. அந்த வகையில் உலகப் புத்தக நாளையொட்டி பெண்கள் சார்ந்து வாசிக்க வேண்டிய ஐந்து நேரடித் தமிழ் நூல்கள், ஐந்து மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
காலந்தோறும் பெண், ராஜம் கிருஷ்ணன், தாகம் வெளியீடு
காலந்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டது என்பதை மத நூல்கள், மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்து மட்டுமில்லாமல், சமகாலப் பிரச்சினைகளிலிருந்தும் அணுகும் ஆய்வு நூல் இது. மதம், திருமணச் சடங்குகள் என பழமைவாதத்தின் பிடியில் பெண்கள் எப்படி அடிமைப்பட்டனர் என்பதை ஆதாரங்களுடன் ராஜம் கிருஷ்ணன் எழுதியுள்ளார். கற்பு, குடும்பம், பத்தினித்தன்மை உள்பட வலிந்து புகுத்தப்பட்ட மரபுகளை இந்நூல் கட்டுடைக்கிறது.
பெண்மை என்றொரு கற்பிதம், ச. தமிழ்ச்செல்வன், பாரதி புத்தகாலயம்
நம் சமூகத்திலும் மனங்களிலும் ஆழமாகப் பதிந்திருக்கும் ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், இந்தச் சிந்தனைகளால் இரு பாலினருக்கும் ஏற்படும் முரண்கள், சமூகம் சந்திக்கும் சிக்கல்கள் போன்றவற்றை எளிமையான, நடைமுறை உதாரணங்களுடன் விவாதிக்கும் நூல் இது. இரு தரப்பினரையும் நேரடிக் குற்றவாளியாக ஆக்க முயலாமல், விவாதத்தின் வழி மாற்றத்தை உருவாக்க முனைகிறார் ஆசிரியர்.
அறிவியலில் பெண்கள், கு.வி. கிருஷ்ணமூர்த்தி, அடையாளம் வெளியீடு
அறிவியலில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவு என்பது காலம்காலமாக நம்பப்படும் மூடநம்பிக்கைகளில் ஒன்று. வாய்ப்பு மறுக்கப்பட்டது, திருமணம் உள்ளிட்ட குடும்ப பொறுப்புகள் வலிந்து சுமந்தப்பட்டது, பணியிடத்தில் பாலியல் தொந்தரவு என அறிவியல் துறையில் பெண்களின் பங்கு மறுக்கப்பட்டதற்கான பல்வேறு காரணங்களை வரலாற்று உதாரணங்களுடன் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளை பாலினம் எந்த வகையிலும் கட்டுப் படுத்துவதில்லை, திறமையே அடிப்படை என்பதையும் வலியறுத்துகிறது.
பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும், வ. கீதா-கிறிஸ்டி சுபத்ரா, பாரதி புத்தகாலயம்
ஆண், பெண் கருத்துருவாக்கத்தின் வேர்களைத் தேடுகிறது இந்தப் புத்தகம். ஆண் - பெண் வேறுபாடு குறித்து மதம், அறிவியல், சமூகப் பின்னணியில் இந்த நூல் ஆராய்கிறது. கருத்துச் செறிவு மிக்க, ஆழமான அர்த்தம் தரும் நூல் இது. பெண்ணியம், பாலின பாகுபாடு குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக அமையும்.
எப்போதும் பெண், சுஜாதா, உயிர்மை வெளியீடு
ஒரு பெற்றோருக்கு நான்காவது குழந்தையாக சின்னு என்ற பெண் கருவில் உருவாவதில் தொடங்கி அவள் வாழ்க்கை முழுவதையும் விவரிக்கும் கதை. அவள் கருவாக உருவானது முதல் அவளது ஒவ்வொரு வளர்ச்சி நிலையையும் அறிவியல்பூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் விளக்க முயன்ற நூல். கொஞ்சம் கதையாக, கொஞ்சம் கட்டுரையாக, கொஞ்சம் தத்துவமாக எனப் பல்வேறு வகைகளில் இந்த நூல் விரிகிறது.
மொழிபெயர்ப்பு நூல்கள்
நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள், தமிழில்: குளச்சல் மு. யூசுப், எதிர் வெளியீடு
அஜிதா. கடந்த நூற்றாண்டின் இரண்டாவது அரைப்பாதியில் பரவலாக அறியப்பட்ட போராளியின் பெயர். அவரது நினைவாகவே தமிழகம், கேரளத்தில் பல பெண்களுக்கு அஜிதா என்று பெயர் சூட்டப்பட்டது. தீவிர அரசியல் செயல்பட்டாளர்களான மந்தாகினி, குன்னிக்கல் நாராயணனின் மகளான அவர் 1968-ம் ஆண்டு 18 வயதில் நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்து இயங்க ஆரம்பித்தார். புல்பள்ளி காவல் நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்த வழக்கில் 1977 வரை அவர் சிறைத்தண்டனை அனுபவித்தார். அவரது அனுபவங்களே விரிவான நூலாகப் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் தேவதாசிகள், முனைவர் கே. சதாசிவன், (தமிழில்: கமலாலயன்), அகநி வெளியீடு
தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்துவந்த தேவதாசி நடைமுறையைப் பற்றி விரிவாக ஆராயும் புத்தகம் இது. பக்தி இலக்கியக் காலத்தில் சமூகத்தினரால் மரியாதையாக நடத்தப்பட்ட தேவதாசிகள் எனப்பட்ட தேவரடியார்கள், பிற்காலத்தில் கீழ்த்தரமாகக் கருதப்படும் போக்கு தொடங்கியது. தமிழ்க் கலாச்சாரத்துக்குச் செழுமை சேர்த்த அவர்களது சமூக மரபு இந்நூலில் பதிவாகியிருக்கிறது. நூல் முழுவதும் பல்வேறு அரிய தகவல்கள், ஆதாரங்கள் எனத் தீவிரமான களப்பணியின் பிரதிபலிப்பைக் காண முடிகிறது.
ஒரு வாழ்க்கையின் துகள்கள், மைதிலி சிவராமன், (தமிழில்: கி. ரமேஷ்), பாரதி புத்தகாலயம்
முன்னணி பெண்ணியச் செயல்பாட்டாளர்களில் ஒருவரான மைதிலி சிவராமன், தன் பாட்டி சுப்புலட்சுமியின் பெட்டியில் கண்டெடுத்த நாட்குறிப்புகளை வைத்து எழுதிய நூல். இந்த நூலில் அவரது பாட்டியின் வாழ்க்கையை மட்டுமல்ல, அந்தக் கால சமூகத்தின் நிலை, பெண்களின் துயர வாழ்வு, சுதந்திரப் போராட்டம் குறித்த பார்வை உள்ளிட்டவை அனுபவங்கள் அடிப்படையில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாட்குறிப்பு, 70 ஆண்டுகளுக்குப் பின் மீட்டெடுக்கப்பட்டு எழுதப்பட்ட பதிவு இது.
சுல்தானாவின் கனவு, ரொக்கையா சக்காவத் ஹூசைன், (தமிழில்: வ. கீதா, சாலை செல்வம்) தாரா வெளியீடு
ரொக்கையா சக்காவத் ஹூசைன் என்ற வங்க மொழி எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதிய முதல் நாவல் இது. போரும் ஆண்களின் அதிகாரமும் இல்லாத ஒரு லட்சிய உலகை முன்னிறுத்தும் பெண் விடுதலை சிந்தனையுடைய கதை. இந்தப் பாணியில் எழுதப்பட்ட முதன்மைக் கதைகளில் ஒன்று. கூட்டுறவுச் சமுதாயம், அறிவியல் பார்வை, இயற்கை நேசம், போரைத் தவிர்த்து அமைதி வழியை பின்பற்றுதல் போன்ற பின்னணிகளைக் கொண்ட மாறுபட்ட நாவல் இது. இந்தியத் துணைக்கண்டத்தின் பெண் விடுதலை மரபின் முக்கியப் பிரதிநிதியாக ரொக்கையா இன்றளவும் திகழ்கிறார்.
பாலைவனப்பூ, வாரிஸ் டைரி, காத்லீன் மில்லர், (தமிழில்: எஸ்.அர்ஷியா), எதிர் வெளியீடு
பெண்ணுடலை அடிப்படையாகக் கொண்டு உலக அள வில் பேசப்பட்ட ஒரு பிரச்சினையைத் தீவிரமாக ஆராயும் நூல். நாலாயிரம் ஆண்டு காலமாக ஆப்பிரிக்கக் கலாசாரத்தில் பெண் உறுப்புச் சிதைப்பு எனும் கொடூர வழக்கம் பின்பற்றப்பட்டுவருகிறது. இந்த நடைமுறையைத் தடைசெய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியவர் பிரபல மாடல் வாரிஸ் டைரி. Desert Flower என்ற சுயசரிதை புத்தகத்தை, கேத்லீன் மில்லருடன் சேர்ந்து அவர் எழுதியுள்ளார். அதன் தமிழாக்கமே இந்த நூல்.
அமெரிக்கர். வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் அதிகம் விற்பனையான புத்தகங்களுக்குச் சொந்தக்காரர். 80 கோடி புத்தகங்கள் விற்பனையாகி நான்காம் இடத்திலிருக்கிறார். 120 நாவல்கள் 28 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. பெரும்பாலானவை காதலை மையமாக வைத்து எழுதப்பட்டவை.
ஸ்பானிய எழுத்தாளர். காதல், போட்டோ நாவல்களால் புகழ்பெற்றவர். இதுவரை 5,000 தலைப்புகளில் 40 கோடி புத்தகங்கள் விற்பனையாகியிருக்கின்றன. ஸ்பானிய மொழியில் அதிக அளவு விற்பனையான புத்தகங்களுக்காக கின்னஸ் சாதனையிலும் இடம்பெற்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago