அமெரிக்கக் கலை உலகில் மிகவும் அபூர்வமாக நடக்கும் நிகழ்வு இது. நிறவெறி வரலாற்றைக் கொண்ட ஒரு தேசத்தில், ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் ஒருவர் கலை உலகில் பிரவேசிக்க நினைப்பதே முடியாத காரியம். அப்படியே பிரவேசித்தாலும், அவர்களின் திறமையை வெளிக்காட்டுவதற்குக் கிடைக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. வாய்ப்பு கிடைத்தாலும், மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் அங்கீகரித்துவிட மாட்டார்கள். அப்படித்தான் வயோலா டேவிஸுக்கும் நடந்தது. 2008-ம் ஆண்டு வெளியான ‘டவுட்’ என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்குச் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அது தள்ளிப்போனது. 2011-ம் ஆண்டில் ‘தி ஹெல்ப்’ என்ற படத்தில் நடித்ததற்காகக் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சர்ச்சைக்குரிய விதத்தில் நடிகை மெரில் ஸ்ட்ரீப்புக்கு ஆஸ்கர் வழங்கப்பட்டது.
உண்மையான கலைஞர்கள் எப்போதும் விருதுகளைத் துரத்துவதில்லை. அவர்களின் கவனம் முழுக்க, கலையில் உச்சத்தை அடையும் பயணத்திலேயே இருக்கும். வயோலா டேவிஸ் அந்தப் பயணத்தில்தான் இருந்தார். அதுதான் கடந்த ஆண்டு வெளியான ‘ஃபென்சஸ்’ எனும் படத்துக்காக அவருக்கு துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்துள்ளது.
வயோலா டேவிஸ் ஆஸ்கர் விருதைப் பெற்றிருப்பது பெரிய விஷயமல்ல. ஆனால், தன் நடிப்புக்காக டோனி, எம்மி, ஆஸ்கர் என மூன்று விருதுகளையும் பெற்ற ஒரே ஆப்பிரிக்க அமெரிக்க நடிகை டேவிஸ்! அமெரிக்காவில் இந்த மூன்று விருதுகளையும் ‘ட்ரிபிள் க்ரவுன்’ (Triple crown) என்று சொல்வார்கள். இந்த மூன்று கிரீடங்களையும் சூடிக் கொண்டிருக்கும் இந்த 51 வயது ராணியின் கடந்தகாலம், அவ்வளவு பிரகாசமானதாக இல்லை.
திருடத் தூண்டிய வறுமை
தெற்கு கரோலினாவில் 1965-ம் ஆண்டு பிறந்தவர் வயோலா. அவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். குதிரைப் பயிற்சியளாரான தந்தையும், ஃபேக்டரியில் வேலையும் செய்த தாயும் கொண்டுவந்த வருமானம் போதவில்லை. வறுமை நிரந்தரமாகக் குடியேறிவிட்ட வீட்டில் ஒரு வேளை உணவு கிடைப்பதே கனவு. அதனால் தன் சிறு வயதில் அக்கம்பக்கத்திலுள்ள கடைகளில் வயோலா திருடினார். குப்பைத் தொட்டிகளில் குதித்து உணவு தேடும் நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இது போதாதென்று நிறவெறி வேறு. தன் நிறம் காரணமாக தான் நிராகரிக்கப்படுவது வயோலாவுக்குப் பெரும் மனஉளைச்சலைத் தந்தது.
அப்படி வளர்ந்து வந்த காலத்தில், 1974-ம் ஆண்டு சிஸ்லி டைசன் எனும் ஆப்பிரிக்க அமெரிக்க நடிகை நடித்த ‘தி ஆட்டோபயோகிராஃபி ஆப் மிஸ் ஜேன் பிட்மேன்’ எனும் திரைப்படத்தைப் பார்த்தார். அந்தப் படம் அவருக்குள்ளிருந்த நடிப்பு ஆர்வத்தைத் தட்டி எழுப்பியதோடு அல்லாமல், ஹாலிவுட்டில் தானும் பிரவேசித்து நட்சத்திரமாக முடியும் என்ற நம்பிக்கையையும் தந்தது.
எவ்வளவோ கஷ்டங்களுக்குப் பிறகு 1996-ம் ஆண்டு ‘தி சப்ஸ்டன்ஸ் ஆஃப் ஃபயர்’ படத்தின் ஒரு காட்சியில் செவிலியர் வேடத்தில் நடிகையாக அறிமுகமானார். இடைவிடாத முயற்சியாலும் தேடலாலும் அவருக்கு அடுத்தடுத்த படங்கள், தொலைக்காட்சித் தொடர் வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருந்தன. 2001-ம் ஆண்டு வெளியான ‘இரண்டாம் கிங் ஹெட்லி’ நாடகத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக டோனி விருது கிடைத்தது. 2015-ம் ஆண்டு ‘ஹவ் டு கெட் அவே வித் மர்டர்’ நாடகத் தொடரில் நடித்ததற்காக எம்மி விருது பெற்றார். இப்போது ஆஸ்கரும் அவர் கையில்!
எல்லாமே மாறும்
ஆஸ்கர் விருது மேடையில் அவர் ஆற்றிய உரை நெகிழ்ச்சியானது. அது, நாம் துர்பாக்கியம் என்று நினைக்கும் விஷயங்களை மறுபரிசீலனை செய்யவைக்கிறது.
“அசாத்தியமான ஆற்றல்கள் பெற்ற மனிதர்கள் இருக்கும் ஒரே இடம் எது தெரியுமா? கல்லறை. மக்கள், ‘நீ என்ன மாதிரியான கதைகளைச் சொல்ல நினைக்கிறாய் வயோலா?’ என்று எப்போதும் என்னிடம் கேட்கிறார்கள். ‘அந்தக் கல்லறையில் உள்ள உடல்களைத் தோண்டி வெளியே எடுங்கள். மிகப் பெரிய கனவுகளைக் கண்டு ஆனால் அவற்றைச் சாதிக்க முடியாமல் மறைந்துபோன அந்த மனிதர்களின் கதைகளைச் சொல்ல நினைக்கிறேன். அன்பில் விழுந்து, இழந்தவர் களின் கதைகளைச் சொல்ல விரும்புகிறேன்’ என்று நான் சொல்வேன். நான் ஒரு கலைஞராக வந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வேன். வாழ்தலின் பொருள் என்ன என்பதைக் கொண்டாடும் ஒரே துறை திரைத்துறைதான்”.
அமெரிக்கக் கலை உலகின் ‘கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்’ என்று எம்மி, கிராமி, ஆஸ்கர் மற்றும் டோனி ஆகிய நான்கு விருதுகளையும் வென்றவர்களைச் சொல்வார்கள். வயோலா அந்த ‘கிராண்ட்ஸ்லாம்’ பெருமையைப் பெறுவதற்கு கிராமி விருது மட்டும்தான் பாக்கி. தன் திறமையை மட்டுமே நம்பி கலையுலகுக்கு வந்தவருக்கு, அந்த விருதும் விரைவில் கிடைக்கும்!
நிறவெறி உள்ளிட்ட பல்வேறு ஒடுக்குமுறைகள் மூலம் மற்றவர்களை முன்னேறவிடாமல் தடுக்கும் மனிதர்களுக்கும் அந்தக் காரணங்களைச் சொல்லியே சுயகழிவிரக்கத்தில் உழல்பவர் களுக்கும் ‘ஃபென்சஸ்’ படத்தில் வயோலா சொல்லும் வசனங்களே சிறந்த அறிவுரை.
“காலம் மாறுகிறது. மனிதர்கள் மாறுகிறார் கள். இந்த உலகமும் மாறிக் கொண்டிருக்கிறது!”
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago